Wednesday, July 18, 2018

இறுதி விடைபெறல்




அன்புநிறை ஜெ,

செந்நா வேங்கை தொடங்கியது முதலே வழக்கம்போல அன்றன்றே வாசித்து விட்டாலும், வாசித்ததைக் குறித்து எழுதும் எண்ணம் குறைந்துவிட்டதோ என்று தோன்றிக்கொண்டே இருந்தது. மாயையின் எரிபுகுதல் எவ்விதமோ எதிர்பார்த்திருந்தாலும் ஒரு அதிர்வை ஏற்படுத்தியது. அதன்பின் பால்ஹிகரின் பகுதி ஒருவிதத்தில் போரைப் பொருளற்றதாக்கி அணுக உதவியது. 

ஒவ்வொருவராக மீளா விடைபெறுவதன் அழுத்தமும் பதற்றமுமாக கடந்த சில நாட்கள். இன்றைய துரியனின் விடைபெறுதல் உச்சம் தொட்டுவிட்டது.

துரியோதனனுக்கும் பானுமதிக்குமான ஆரம்ப நாட்களும் அதன் அன்பும், கனிவும், காதலும் எழுந்து மனதை நிறைத்தது. இன்று போருக்கென இறுதி விடைபெறுதலென நிகழும் கணத்தின் எடை, அவர்களிடையே சொல்லாக மாற்ற விழையாத நுண்மைகளால் நிகர் செய்யப்பட்டிருந்தது.

அறையில் நுழைவதன் முன்னம் ஒரு ஆடி காண ஆசைப்படும் பானுமதி பதினாறு நீண்ட ஆண்டுகளை அப்போதே பின்னோக்கி நகர்கிறாள். உண்மையில் பிரிந்திருந்தார்களா என்ன! 

"ஆணிடம் சற்று பிழையிருப்பதை பெண் விரும்புவது எதனால்? அப்பிழையை நிறைத்துக்கொள்ளும் இடமே தனக்குரியது என எண்ணுவதனாலா?" 
உண்மைதான், சற்றேனும் குறைவுள்ள கலத்திலேயே பிறர் நிரப்ப வழியுண்டு. இன்று அவள் கொள்ளும் தவிப்பை, பேரன்பை ஏந்திக் கொள்ள அவனிடம் சிறிதேனும் நிலை குலைந்திருக்க வேண்டும். அவனது நா பிறழ்ந்தோ உள்ளுறை இறை உரைத்தோ, தான் களம் விட்டு மீளப்போவதில்லை என்ற நிமித்திகர் கூற்றில் பேச்சைத் தொடங்குகிறான். அதுவே அவனுள் ஒரு சிறுதுளி குறைவதையும் அதை நிறைவு செய்து கொள்ளவே அவளிடம் வந்திருப்பதாகவும் தோன்றுகிறது. இறுதியாக அவளறியாது உடலில் எழும் அசைவும், அவள் மேல் பதியும் அவனது பார்வையும், தென்குமரியல்ல தென்துருவமே எனினும் கடந்துவிடும் தூரமே எனத் தோன்றுகிறது, உளமறிந்த இறுதிப் பிரிவுக்கு முந்தைய தருணத்தின் அணுக்கம் எத்தனை அடர்த்தியானது. துரியனுக்காக மனம் கனிந்து கனக்கிறது. 

இரண்டாவது, சகுனியின் மனப்போக்கு கிளர்த்திய எண்ணம் - 
ஒவ்வொருவருள்ளும் சிறு புழுவென உறையும் எண்ணங்கள் ஆயிரம்தலை நாகமென மாறும் வாய்ப்பு கொண்டது எனும் சகுனியின் அறிதல், தனது மனம் கொண்ட சிறு எண்ணத்தின் பரு வடிவு கொண்டு அவர் கொள்ளும் நடுக்கம் இன்று வந்த இன்னொன்றோடு இயைகிறது; இன்று மண்ணெங்கும் கிளர்ந்தெழுந்த தெய்வங்கள் அனைத்துமே,  என்றோ சிறு விதையென மறக்கப்பட்டு புதைக்கப்பட்ட அநீதிகளும், மறந்துபோன கண்ணீருமே அல்லவா, குருதிபலி கேட்டு நிற்கும் அனைத்து தெய்வங்களும், கண்ணீராலும், செந்நீராலும் பிரதிட்டை செய்யப்படவைதானே. குருஷேத்திரப் போருக்கு சிலகாலம் முன்னர்  அப்பெருநிரையில் சென்று நின்றவள் அம்பை, முதற்கனலுக்கான மூலக்கனல் சுனந்தையிலிருந்தும் அதற்கும் முந்தைய அறியாக்காலகட்டத்திலிருந்தும் எழுந்து வரக்கூடும். 

மிக்க அன்புடன்,
சுபா