Saturday, July 14, 2018

எஞ்சும் குருதி உறவுகள்


எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களுக்கு
       வணக்கம் .வெண்முரசு – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை 41 திருதாஷ்டிர யுயுத்ஸு கௌரவர் மூத்தவர் துரியோதனனிடம் விடை பெற்று பாண்டவர்களுடன் சேர்ந்து குருஷேத்ர யுத்த களத்தில் நிற்க சென்று விட்டான் .அதனை பேரரசர் திருதராஷ்டிரர் ,பேரரசி காந்தாரி மற்றும் துரியோதனன் ஆகிய அனைவருமே எந்த ஒரு மன கிலேசமும் இல்லாமல் பெருந்தன்மையுடன் யுயுத்ஸுக்கு வாழ்த்துக்களை சொல்லி விடை கொடுத்தனர். குண்டாசி மற்றும் விகர்ணன் யுயுத்ஸுவை சிறுமையின் வடிவமாக தான் எண்ணினார்கள் .ஆம் போர்களுக்கு எல்லாம் அன்னையாக திகழ இருக்கும் கோர குருஷேத்ர யுத்தத்தில் பாண்டவர் பக்கம் நின்றால்,யுத்த நிறைவில் பாண்டவர்கள் இளைய யாதவரின் துணையுடன் வெற்றி வாகை சூடினால் ,யுதிஷ்டிரரின் பேரறத்தால் ஹஸ்தினாபுரத்திற்கு யுயுத்ஸு அரசனாக முடி சூட்டிக்கொள்ள முடியும் .ஏனென்றால் பீமனின் கதைக்கு கௌரவ நூறுவரும் உடல் சிதற பலியாவது உறுதி . திரௌபதி பன்னிரு களத்தில் அவைசிறுமை செய்யப்பட்டபோது ,பீமன் அவையில் உரைத்த வஞ்சின சபதம் நிறைவேற போகும் களம் குருஷேத்ரம். இத்தகைய சிறுமதி எண்ணத்தினால் தான் யுயுத்ஸு கௌரவர் அணியில் இருந்து பாண்டவர் அணிக்கு மாறியதாக ஐயமுற்றனர் குண்டாசியும் ,விகர்ணனும் .ஏனென்றால் கௌரவ நூற்றுவரில் இந்த இருவரை தவிர அனைவருமே மாற்று கருத்தென்ன எந்த ஒரு எண்ணமும் எழாமல் மூத்தவர் துரியோதனனின் வழியில் அவரின் நிழலென செல்பவர்கள் .
     ஆனால் .துரியோதனன் செய்யும் அறமிலா செயல்களை அவையில் நின்று அவனுக்கு எதிராக நின்று அவனின் பிழைகளை சொல்லி இடித்துரைக்கும் திருதராஷ்டிர வடிவம் கொண்டவர்கள் குண்டாசி மற்றும் விகர்ணன். ஆனாலும் செஞ்சோற்று கடன் தான் அறத்தை விட பெரியது என துரியோதனன் அணியில் நிற்க ,அறம் தான் பெரியது என யுயுத்ஸு பாண்டவர் பக்கம் சென்று விட்டான்.யுயுத்ஸுவை சந்திக்கும் விகர்ணனிடம் இதை தான் மறுமொழியாக உரைப்பான் என வெண்முரசு வாசகர்கள் நினைக்கும் பொது யுயுத்ஸு பதில் வேறுவிதமாக உள்ளது .ஆம் வெண்முரசு – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை – 42 விண்பேருருவை. கோள்களையும் விண்மீன் பெருக்கையும் கடுவெளியையும் அலகிலியையும் அணையா வெறுமையையும்கூட தானெனக் கொண்டு நின்றிருந்த பரம்பொருளை நான் பார்த்தேன். அவர் அதை எனக்கு அங்கு காட்டினார். ஆம், நான் பார்த்தேன், ஐயமே இல்லை. நான் பார்த்தேன் என்று  யுயுத்ஸு கூவினான். ஆம் இளைய யாதவர் குருஷேத்ர யுத்த முடிவில் ,கௌரவர் அணியில் எஞ்சும் குருதியாக அடையாளம் காண்பது/காட்டுவது யுயுத்ஸுவை தான். .பாண்டவர் அணியில் அபிமன்யுவின் கரு மைந்தன் ,விராட இளவரசி உத்தரையின் வயிற்றில் வளரும் பரிக்ஷித்து மட்டுமே . கௌரவ நூற்றுவரும் ,உப கௌரவர்களும் ,உப பாண்டவர்களும் ஒருவர் கூட எஞ்சாமல் ,போரில் மாண்டுவிடும் ஊழை அறிந்தவர் ,ஊழை நிகழ்த்தும் இளைய யாதவர் அதனால் தான் போருக்கு முன்பே அபிமன்யு -உத்தரை திருமணத்தை நடத்த ஆணையிடுகிறார் இளைய யாதவர் .அதனால் தான் யுயுத்ஸு மட்டுமே யுத்தத்திற்கு பின்பும் அரசாள்வான் என்பதே பாரதம் சொல்லும் கதை. .
     யுயுத்ஸு அஸ்தினபுரியின் அரசனாக ஒரு நாள் முடிசூடுவான் என நிமித்தகர்கள் நாளும் சொல்லும் குறி கேட்டு தான் துரியோதனன் யுயுத்ஸுவை பாண்டவரிடம் அனுப்பி விட்டான் போல் தோன்றுகிறது .மேலும் நெருப்பு சூழ்ந்த வீட்டில் இருந்து இந்த குழந்தையாவது தப்பித்து என் குருதி வழி ,கொடி வழி தொடரட்டும் என நினைத்து தான் யுயுத்ஸுவை திருதராஷ்டிரர் கௌரவர் அணியில் இருந்து வெளியேற்றியதை போல தான் எண்ண முடிகிறது .போரின் உச்சத்தில் நடக்கும் குடும்ப உறவின் சிக்கல்களின்  பல பரிமாணங்களை வெண்முரசு மூலமாக விரிவாகவும் ,தெளிவாகவும் அறிய முடிகிறது.
நன்றி ஜெயமோகன்  அவர்களே
தி.செந்தில்
ஸ்ரீவில்லிபுத்தூர்