அன்புள்ள ஜெ,
உண்மையில் ரோகிணியின் அறிமுகம் எனக்குள் தான் படபடப்பை ஏற்படுத்தியது. அவள் வந்தவுடனேயே இதுகாறும் எதிர்பார்த்திருந்த அரவானின் சந்திப்பை மனம் நாடத் துவங்கி விட்டது. கௌரவர்கள் புருஷ மேதம் என ஒரு அந்தணனை பலி கொடுத்து போர் துவங்குகிறார்கள். (அதையும் இரு நாகினிகள் கலைத்து விட்டது தனிக்கதை. அது சற்று விரிவாக அலச வேண்டிய ஒன்று) மாறாக பாண்டவர்கள் அதற்கும் பழைய தொல்குடிகளான அசுர குல நெறிகளின் படி போர்த்தலைவன் தனது மகன்களில் அனைத்து லட்சணங்களும் பொருந்திய ஒருவனை பலியாகக் கொடுத்து போரைத் துவங்கும் புத்ர மேதத்தைச் செய்கிறார்கள். (இது தெற்கத்தி பாடம். வடமொழி அரவானை எட்டாம் நாள் போரில் ஆலம்புஷன் என்னும் அரக்கனால் கொல்லப்பட்டதாகச் சொல்கிறது. அவனை கடோத்கஜன் பழிதீர்த்தான்) அரவானை கிருஷ்ணரே ஆணிலியாக மாறி மணந்து கொண்டதாகத் தொன்மம். அதை வெண்முரசு எப்படிச் சொல்லப் போகிறது என எண்ணிக் கொண்டிருந்தேன். அபாரமாக ரோகிணியின் மூலமாகச் சொல்லிவிட்டீர்கள்.
வெண்முரசில் வெண்முகில் நகரத்தில் இருந்து வரும் உத்தி சிறு பாத்திரங்களின் பார்வையின் ஊடாக முதன்மை பாத்திரங்களின் செயல்களை, அவர்களின் ஆகிருதியை விவரிப்பது. இது பெரும்பாத்திரங்களான கிருஷ்ணன், தருமன், பீமன், துரியன், பார்த்தன், கர்ணன் ஆகியோருக்கே அமைந்தது. இப்போது அதையே அரவானுக்கும், கடோத்கஜனுக்கும் நீட்டித்திருப்பது ஒரு இனம் புரியாத மலர்வைத் தந்திருக்கிறது. ஸ்வேதனும், சங்கனும் இதற்காகவே வருகிறார்கள். இளையவர்கள் யாருக்கும் அளிக்கப்படாத பெருமை அல்லவா இது. உண்மையில் இவர்கள் இருவரும், முறையே கடோத்கஜன் மற்றும் அரவான், தான் உப பாண்டவர்களில் மூத்தவர்கள் இல்லையா?
அன்புடன்,
அருணாச்சலம் மகராஜன்