ஒரு தலைவன்-தொண்டன் கதையாக, எளிய நீதிக்கதையாக மட்டுமே பார்த்தால் அக்ரூரரின் மனமாற்றத்தை மானிடச் சிறுமை என்று சொல்லிவிடலாம்.
ஆனால்
வெண்முரசின் தத்துவத்தளத்தில் அக்ரூரரின் மனநிலை
புரிந்துகொள்ளப்படக்கூடியது, போற்றப்படக்கூடியது. ஏனென்றால் அதுவே
சியமந்தகத்தின் இயல்பு.
அது இச்சை என்றும்
விழைவு என்றும் அகங்காரம் என்றும் சுயம் என்றும் பல்லுருவம் கொள்வது.
வீரசேனரில் உயர்வாகவும் பாமாவில் நிமிர்வாகவும் வெளிப்படுவது. சூரியனில்
இருந்து மண்ணில் துளியாக விழுந்து என்றுமே ஆழத்தில் இருப்பது. ஒன்று என்ற
இறைக்கு என்றுமே எதிராக இருந்து அதனிலிருந்து தனித்து பிரிந்து பலவாக
தன்னை காட்டிக்கொள்ள விழைவது.
இந்திரநீலத்தில் இரண்டு கோணங்கள்:
ஒன்று,
அன்னை எனப்படுவதும் அந்த அம்சமே என்னும் இளம் பாமாவின் கதை. (பாமா
ஜாம்பவதி இருவரின் அரண்மனை அமைப்புகளை பற்றிய குறிப்புகளும் முக்கியமானவை).
இரண்டு, ஒரு apostasy போலவே தோன்றும் அக்ரூரின் கதை.
கிருஷ்ணன்
என்ற சொல்லால் சுட்டப்படும் தத்துவத்திற்கு ஆட்பட்டது அக்ரூரரின்
பாத்திரம். ஒருமுறை ஆட்பட்ட ஆத்மா அப்படி மீண்டும் தன்னை தனித்து
காட்டிக்கொள்ள விழையுமோ? அப்படிச் செய்வது தான் அதன் இயல்பென்றால் இந்தக்
கதையில் அதற்கு வீடுபேறு என்பதுதான் என்ன ? மீண்டும் கிருஷ்ணனைச் உணர்ந்து
சேர்ந்து பிரபத்தி சரணாகதி அடைவது தானா ?
**
'எதிலும்
உறையும் இறை' என்பதை சொல்ல ஒரு பாத்திரத்தை அதிமானுடனாக்கி அவன் ஆட்டத்தை
பல களங்களில் நிகழ்த்துவது ஒரு பெரும் புனைவு விளையாட்டு.
வெண்முரசை
ஒரு குழந்தைக்கதையாக, சாகசக்கதையாக, மனித உறவுகளின் நாடகமாக, புராண
பக்தி இலக்கியமாக வாசிக்கும் அளவுக்கே அதன் அத்துவித விசிட்டாத்துவித
கோணங்களிலும் பேச வேண்டும். அப்போதே அவற்றில் ஜெ நிகழ்த்தும் புதிய
பரிமாணங்களும் திறக்கப்படும்.
சமீபத்தில்
நியுஜெர்ஸி வாசகர் சந்திப்பில் ப்ராமிதியஸ் (பிரமோதியன்) என்ற கிரேக்க
தொன்மத்தை பாமாவின் கதையுடன் இணைத்தது பற்றியும் வெண்முரசுக்கு ஜோசப்
கேம்பெல் எழுதிய புத்தகங்களின் பங்களிப்பு பற்றியும் ஜெ சில வார்த்தைகள்
குறிப்பிட்டார்.
தொன்மங்களின் இணைவு போன்றே தத்துவங்களின் இணைவும் பேசப்பட்டால் நன்றாக இருக்கும்
மது