Monday, July 13, 2015

கண்ணனின் விஸ்வரூபம்

ஜெ

மீண்டும் மீண்டும் ஒரு குறிப்பிட்ட வகையிலே கிருஷ்ணனின் கதாபாத்திரத்தை படைத்துவருகிறீர்கள். விளையாட்டுப்பையனாகவும் குறும்புக்காரக் காதலனாகவும் அவன் வருகிறான். பெரிய ராஜதந்திரியாகவும் வருகிறான். இரக்கமற்ற ஆட்சியாளனாகவும் கருணையான தந்தையாகவும் வருகிறான். இந்த முரண்பாடுகள் அவனிடம் ஒரேசமயம் ஒன்றுடன் ஒன்று கலந்து சரியாக அமைந்திருப்பதைக் காட்டுகிறீர்கள்.

இந்த முரண்பட்ட தன்மை மகாபாரதத்திலும் பாகவதத்திலும் கிருஷ்ணனின் கதாபாத்திரத்திலேயே உள்ள ஒன்றுதான். ஆனால் அதை ஒரு முழுமையான கதாபாத்திரமாக வெவ்வேறு மனிதர்கள் வழியாகப்பார்க்கும்போது ஒட்டுமொத்தமாக வருகிற சித்திரம் பிரமிப்பை அளிக்கிறது

அதுவும் நாம் ஒரு சித்திரத்திலே மெய்மறந்துவிடும்போது இல்லை இவன் வேறுமாதிரி என்று இன்னொரு கதாபாத்திரம் வந்து காட்டிவிடுகிறது . அது உருவாக்கும் அதிர்ச்சி ஒரு மின்னல் மாதிரி. அதுதான் கண்ணனை நமக்கு விஸ்வரூபமாகக் காட்டுகிறது. சததன்வாவின் நகரத்தை அவன் அழிக்கும் இடம் அப்படிப்பட்ட ஒரு விஸ்வரூபம்

சாரங்கன்