Sunday, July 26, 2015

இருகேள்விகள்- மேலும்

அன்புள்ள ஹரீஷ்,

நீங்கள் இரண்டு கேள்விகளை விதைத்துள்ளீர்கள்.

 அ
1. அம்பையின் வஞ்சம்
2. கதாபாத்திரங்களை உன்னதமாக்கல்


1. அம்பையின் வஞ்சம்: அம்பை பீஷ்மரைக் கொல்ல வேண்டும் என சிகண்டியிடம் வேண்டுவது அவளது தாள முடியாத வஞ்சத்தால் அல்ல, அவர் மீது கொண்ட பெருங்காதலால் தான். வஞ்சங்கள், வெறுப்புகள் போன்ற எதிர் உணர்வுகள் நிறைவை நல்காது. வஞ்சமுரைத்து பழி வாங்கிய எவரும் அந்த உச்சம் உடைந்த பிறகு தீராத் தனிமையிலும், தாங்கவியலா சுய இரக்கத்திலும் மட்டுமே உழல்வர். மழு ஏந்திய பரசுராமன் இதற்கு சிறந்த உதாரணம். ஆனால் அம்பை நிறைவுடனேயே தீ புகுகிறாள். வஞ்சத்தால் அழிவை வேண்டியவளாக இருந்தால் பீஷ்மரை மீளா நரகில் தள்ளும் படியான ஒரு மரணத்தை அவருக்கு அளிக்க வேண்டும் என வேண்டியிருப்பாள். ஆனால் சிகண்டி பீஷ்மர் யாரென்றே அறியாமல் அவரைக் கொல்வதாக வாக்களித்த பிறகு, அவனிடம் அவரைப் போரிலே கொல்ல வேண்டும் என்று கேட்கிறாள். துவந்த யுத்தத்தில் அவரை வீழ்த்தி அவர் வீரசொர்க்கம் அடைய வேண்டும் என்றே அவள் விழைகிறாள். அவர் முழுமை கொள்ள வேண்டும் என்றே விரும்புகிறாள். வெறும் வஞ்சம் இதை வேண்டாது. வஞ்சத்தின் விளைவுகளை துருபதனிடம் துரோணர் நடந்து கொள்ளும் விதத்திலும், அஸ்வத்தாமனும், கிருதவர்மனும், கிருபரும் ஆடப் போகும் கொலைவெறியாட்டத்தில் பார்க்கலாம்.


இன்னுமொன்று, அம்பை தன் நெஞ்சையறைந்து வெளியேறிய அக்கணமே பீஷ்மர் இவ்வுலகில் இருக்க வேண்டும் என்ற கடைசி ஆசையையும் உதறிவிட்டார். அவர் தன்னைக் காக்க, தன்னை மணங்கொள்ள முன்வரும் உர்வரையிடம், 'பெண்ணின் அன்பைப் பெறாதவன் பிரம்மஞானத்தாலேயே அந்த இடத்தை நிறைத்துக் கொள்ள இயலும். ஆனால் நான் இரண்டுக்கும் தகுதியற்றவன். பழி சூழ்ந்தவன்.' என்றே சொல்கிறார். பழியிலிருந்து மீள அவருக்கிருக்கும் ஒரே வாய்ப்பு வீரனுக்குகந்த மரணம். அம்மரணத்தை அவருக்கு வழங்க வேண்டும் என்றே சிகண்டியிடம் வேண்டுகிறாள் அம்பை. நன்றாகப் பார்க்க வேண்டும், அவள் ஆணையிடவில்லை. மாறாக எனக்காக செய் மகனே என இறைஞ்சுகிறாள். இது வஞ்சமல்ல என்று என்னை எண்ண வைத்த இடம் இது தான். வஞ்சத்தால் வழிநடத்தப்பட்டவள் பாஞ்சாலன் படையெடுக்க முன் வரும் போது அவனை வாழ்த்தி நகர் நீங்கியிருக்க மாட்டாள்.


மேலும் அவள் இறப்பைத் தேர்ந்தெடுப்பது, காசி மன்னன் பீமதேவன் தன் புது பட்டத்தரசியை வங்கத்திலிருந்து கொள்ளும் போதே. அவளுக்கென்று இருந்த கடைசி உறவும் அறுந்த பிறகே. அவள் சிதையேறுவது அஸ்தினபுரிக்கு அருகில் இருக்கும் காட்டில். ஏன் அஸ்தினபுரி? அது அவள் கொழுநன் பூமி. தட்சனால் துரத்தப்பட்ட தாட்சாயணி, தன் கணவனைச் சேர தேர்ந்த வழியன்றோ எரிபுகுதல். அவள் சுயம்வரத்தின் முன் கேட்கும் கதையும் தாட்சாயணியுடையது தானே!!!


தன் இறப்பிற்கு அஸ்தினபுரியைத் தேர்ந்தெடுத்தது அவளது ஆழ்மனம். அங்கிருந்தது பெருங்காதலே! அவள் கொண்ட வஞ்சம், அவள் நெஞ்சில் அணையாக் கனலாகி அவள் உடலை எரித்தது. அந்த வஞ்சத்தின் வதையிலிருந்து மீள இயலாததாலேயே அவள் முடிய விழைகிறாள். அத்தருணத்தில் தான் சிகண்டியை பீஷ்மரைக் கொல்லப் பணிக்கிறாள். தான் கொண்ட வஞ்சத்தால் தன்னையும், தான் கொண்ட பெருங்காதலால் பீஷ்மரையும் அழிக்கிறாள் அவள். 


"பெரிய பாறைகளே பெரிய பாறைகளை அசைக்கமுடியும் என்றறிவீராக. மாபெரும் அறத்திலிருந்தே மாபெரும் தீமை பிறக்கமுடியும். எல்லையற்ற கனிவே எல்லையற்ற குரூரத்தின் காரணமாகக்கூடும். பெரும்புண்ணியங்கள் பெரும் பழிகளைக் கொண்டு வரலாகும்" என்று இதைத் தான் தீர்க்கசியாமரும் விசித்திரவீரியனுக்கு கூறுகிறார்.


2. கதாபாத்திரங்களை உன்னதமாக்கல்: இங்கே கதாபாத்திரங்களின் எதிர் உணர்வுகளை நியாயப்படுத்தவில்லை. வெண்முரசும் எவ்விடத்திலும் அதைச் செய்யவில்லை. உண்மையில் நூறு சதவித தீமை என்ற ஒன்று இருக்க வாய்ப்பேயில்லை என்பதையே வெண்முரசு மீண்டும் மீண்டும் சொல்லி வருகிறது. தன்னைக் காக்க பச்சிளம் குழந்தைகளைப் பலியிடும் கம்சனிடம் கூட எஞ்சிய நீலக்குருவியைக் காட்டும் காவியமே இது. தான் முடிசூட வாரணவதத்தை நிகழ்த்திய துரியனின் உளச் சோர்வையும், சுய அழிவையும் காட்டுவதால் அவன் செய்தது நியாயம் என்று கூறுவதில்லை வெண்முரசு. துருபதன் ஐங்குலம் முன்னால் தான் அறவான் தான் என நிரூபிக்க துரோணரை அடையாளச் சிக்கலுக்கு உட்படுத்துவதால் அவன் தரப்பு நியாயமானது என வாதிடுவதில்லை வெண்முரசு. 


மாறாக இத்தருணங்களில் எல்லாம் அவர்களின் தரப்பையும் நம்மைக் காண வைப்பதன் மூலம் மானுடரை முழுமையாகக் காட்ட முயல்கிறது வெண்முரசு. எவரும் தீமை மட்டுமே கொண்டவரல்லர், அதே போல் எவருமே நன்மை மட்டுமே உடையவரல்லர். நன்மையும் தீமையும் கலந்தவரே அனைவரும். மற்றவரிடம் உள்ள நன்மையைக் காண்பதும், தீமையைக் காண்பதும் நம்மிடம் உள்ள நன்மை, தீமைகளைப் பொறுத்ததே என்பதையே வெண்முரசு நமக்கு அறியத் தருகிறது. எனவே தான் செஞ்சோற்றுக் கடன் தீர்க்க சேராத இடம் சேர்ந்தவனாக கர்ணனைக் காட்ட மறுக்கிறது வெண்முரசு. மாறாக அதை ஓர் பேரறமாக, ஓர் நல்விழுமியமாக முன்வைக்க முயல்கிறது அது. இது உன்னதமாக்கல் அல்ல. ஒருவகையில் அறம் என்பதன் காட்சியாக்கல். விழுமியங்களை நிலைநாட்டல். 

மீண்டும் மீண்டும் நாம் கருப்பாகவே கண்ட கதாபாத்திரங்களை நன்மையும் கொண்டவர்களாகக் காண்பிப்பது அவர்களை வெண்மையாக்க அல்ல. வெண்முரசு நாம் வெண்மையாகக் கண்டவர்களைக் கூட மங்கலாக்கக் கூடிய தருணங்களால் ஆனது தான். வெண்முரசு உணர்த்த முயல்வது ஒன்றே ஒன்று தான். மானுடம் இனிமையானது. 

அன்புடன்,
மகராஜன் அருணாச்சலம்