Tuesday, July 14, 2015

வெண்முரசில் குருமார்கள்


            

               '' குரோர், அதிகம் தத்வம், குரோர் அதிகம் தபஹ;
         தத்வத் ஞானன் பரம் நாஸ்தி, தஸ்மை ஸ்ரீ குரவே நமஹ; ''
                                                                                           

என்கிற ''குரு ஸ்தோத்தர''த்தில்,குருவை தவிர வேறு தத்துவம் இல்லை, குருவை தொடர்வதை தவிர வேறு சிறந்த தவம் இல்லை,என்று குருவை புகழ்கிறது. இங்கே குரு என்பது ஒரு தனிப்பட்ட மனிதரை மட்டும் சொல்வதில்லை , குரு என்பது ஒரு தத்துவம், கருத்துருவாக்கம், என்கிற பார்வையில் தான், நம் மரபு குரு பரம்பரை பற்றி பேசுகிறது.  அதையே நமது ஆசானும் வெண் முரசு முழுவதும், குருமரபு பற்றியும், குருகுல கல்வி பற்றியும், குருமார்கள் பற்றியும், அவர்களின் நெறிமுறைகள் பற்றியும், விரிவாக பேசுகிறார்.  இந்த குருகுல கல்விமுறையில், வேதங்களையும், தத்துவங்களையும், தொகுத்து கற்பிப்பது,  அரசு சூழ்தல் முதல் அரசியர் சூழ் கொள்தல் வரையான நெறிமுறைகள், ஆயுத பயிற்சி முதல் படையெடுப்பு வரையான நுணுக்கங்கள், ஷத்ரியர்களுக்கான நூல் நெறி,அவர்களுக்கான கல்விமுறை போதிக்கும், பல்வேறு பாடசாலைகள் பாரத வர்ஷமெங்கும், வெவ்வேறு குரு மரபுகளால் நடத்தப்பட்டதால், 5 வயது முதல்  7 வயது வரையான அரச மைந்தர்கள், ஷத்ரியர்கள், பிராமணர்கள், வந்த வண்ணம் இருந்தனர்.  முதற் கனல் தொடங்கி, வெண்முகில் நகரம் வரை பல்வேறு குருமார்களின் பாடசாலை  முறைகள் தொடர்கிறது. இவற்றில் முக்கியமான, மகாபாரத கதா பாத்திரங்களை உருவாக்கிய குருமரபுகள் பற்றி பார்ப்போம்.

                                                         அகத்தியர் 

விசித்திரவீர்யன் நோய் படுக்கைமுன்,3 வயது சிறுவன் உயரத்தில் வந்து நிற்கும், திருவிட நாட்டு சித்தர்.  'என் பெயர் அகத்தியன்  பொதிகை மலையில் வாழ்பவன், என்று அறிமுகப்படுத்திக்கொள்ள
தாங்கள் தென்திசை ஆசிரியர் அகத்தியர் மரபில் வந்தவரா/ என்று வினவும் 
ஸ்தானகரிடம்,,'' நான் அவரே தான்'' என்கிறார்
பொதுவாக சில  குருமரபில் தனிப்பட்ட பெயரில் அவர்களை அழைப்பதில்லை, 2வது அக்னிவேசர், 15ந்தாவது பரசுராமர், 32வது அகத்தியர் என்றே வழங்கபடுகிறது. தன் குருகுலத்தில் கற்றுத்தேர்ந்து கனிந்த மாணவனை, அடுத்த குருவாக, பீடாதிபதியாக, அமைத்துசெல்வது நம் குருமரபு,  இது இன்றுவரை தொடர்வதை நாம் காணலாம். உதாரணமாக, பாரதி தீர்த்த சுவாமிகள், ஞானானந்த கிரி, சிவானந்தா சரஸ்வதி,  திருவாடுதுறை ஆதீனம் , ஜீயர் சுவாமிகள், போன்ற பட்டங்கள், அதன் தொடர்ச்சியே.

இந்த குருமார்கள் பெருவாரியான கலைகளை, அறிந்திருந்தாலும் ஒவ்வருவருக்கும் ஒரு குறிப்பிட்ட கலையில் தேர்ச்சியும்,பயிற்றுவிக்கும் முறையும், இருந்தது .  அந்த வித்தைக்கான குருகுலமும், அமைத்துள்ளனர். வெண்முரசின், முதற்கணலில் அறிமுகமாகும் அகத்தியரின் அத்தனை தத்துவமும், போதனைகளும், மனித உடல் சார்ந்தும், மருத்துவம் சார்ந்தும் வெளிப்படுகிறது. இங்கே அகத்தியர் மருத்துவராக வருகிறார்,  விசித்திரவீர்யனின் நாடி பார்த்த பின், '  உடலை ஏழு பசுக்கள் கொண்ட மந்தை, ஏழு பொருள் கொண்ட சொல், ஏழு தாமரைகள் விரிந்த தடாகம், ஏழு சக்கரங்கலால் ஆன இயந்திரம், என்று எங்கள் நூல்கள் சொல்கின்றன' - என்கிறார்
அவர் உருவகப்படுத்தும் ஏழு நிலைகள் என்பது நம் உடலில் உரையும்  சக்தி நிலைகளையே
மூலாதாரம் எனும் முதல் புள்ளி, அதுவே காமமும் ஊக்கமும், அதுவே உடலிளிருந்து
உடலுக்கு தாவும் நெருப்பு, அன்னத்தை அனலாக்கும் சுவாதிஷ்டானம். காற்றை உயிராக்கும் மனிப்பூரகம், குருதியை வெம்மையாக்கும் அனாகதம், என்று இன்றளவும்  யோக மரபில் சொல்லப்படும் உடலின் ஏழு  சக்கரங்கள் எனும் சக்தி நிலை பற்றி விவரிக்கும் அகத்தியர் விசித்ரவீரயனின் நெஞ்சில் கைவைத்து சோதித்து , அனாகதத்தில் அனலே இல்லை, என அதற்கான சிகிச்சை முறையை தொடர்கிறார்.  குருமரபின் முதல் குருவான, கல்லால மரத்தினடியில் அமர்ந்து அருளுரைக்கும், தென்திசை முதல்வன், அவனிடம் மெய்ஞானமடைந்த என் முதல் குரு குறுமுனி  அகத்தியர்.-என்கிறார்  
முதற்கணலில், அகத்தியரில் தொடரும் குருமார்களின் வரிசையில் அடுத்த நீண்ட பகுதியாக அக்னிவேசரின் குருகுலம் பற்றியும்,மாணாக்கள் பற்றியும், நிகழ்வுகள் தொடர்கிறது

                       அக்னிவேசர்

காட்டிலிருந்து கிளம்பி பீஷ்மரை கொல்வதொன்றே இலக்கு என்று கிளம்பும் சிகண்டி தன் ஆசிரியரின் வழிகாட்டுதலின் பேரில், அக்னிவேச மாமுனியை பற்றி அறிகிறான்,  5 உப வேதங்களில் ஒன்றான, தனுர்வேதம் பயிற்றுவிக்கும் 2 ரிஷிகளில் பிராமண ரிஷியான பரசுராமர்  சதஸ்ருங்கத்தில் தவம் புரிவதால்,  அக்னிவேசர் மட்டுமே இன்று , அக்னிபதம் எனும் தவச்சாலை அமைத்து  தனுர்வேதம் பயிற்றுவிக்கும் , குருகுலம் நடத்துபவராக இருக்கிறார்
பாரத்வாஜ முனிவரிடமும், அகத்திய முனிவரிடமும், தனுர்வேதத்தையும் , நூல்நெரிகளையும் கற்று தேர்ந்த அக்னிவேசர், தன் மாணவர்களுக்கு, வில்வித்தையுடன், தத்துவத்தையும், வேதாந்தத்தையும் தனுர்வேதம் மூலமாகவே கற்பிக்கிறார்
''இம்மண்ணில் அறத்தை நிலைநாட்ட முதல் தேவை சொல், அந்த சொல்லிற்கு துணையாக என்றுமிருப்பது வில். அது வாழ்க'' - அக்னிவேசர் முழங்க
ஓம்..ஓம்..ஓம்..என்று அவரிடம் சீடர்களாக சேர்ந்த துரோணரும்,துருபதணும் பின் தொடர்கின்றனர்.  பிற மாணவர்கள் சிகண்டியை நோக்கி நகைக்கையில்,  ''இளையோரே, படைப்பில் , தேவையற்றது, தேவையானது, நல்லது கெட்டது, என்று பிரிக்கும் தோறும், பிரம்மனிடம் மன்னிப்பு கேளுங்கள், படைப்பை ஏளனம் செய்யும் ஒவ்வொரு எண்ணத்திற்கும், அந்த மூடன் என்றோ ஒருநாள், பதில் சொல்ல கடமை பட்டவன்,'- என்று அகம் கணிகிறார்

சுக்ரச்மிருதி எனும் நூல் வகுத்துள்ளபடி, பிராமணர்களுக்கும் , ஷத்ரியர்களுக்கும் , தாம் வில்வித்தை பயிற்றுவிப்பதாக , சிகண்டியை புறக்கணிக்க, அவர் கூறும் நீண்ட கருத்தை ஏற்காத சிகண்டியின் துணிவையும், அவன் இலக்கையும் கண்டு கனிந்து அவனுக்கு தனுர்வேதம் கற்பிக்கிறார்.. 
பாடசாலையில் நடைபெறும் அத்தனை தத்துவ விவாதமும், வாழ்வியல் போதனைகளும்,தனுர்வேதத்தில் தொடங்கி,தத்துவ தரிசனத்தில் முடிகிறது,
 உதாரணமாக,‘’ செயல் மூலம் தன்னை வென்றவன் யோகி, யோகியின் கையில் இருப்பது ஏதுவோ, அதுவே இறுதி ஆயுதம். அதுவே அவன் மந்திரம், அதை ஆள்வதே, அவன் சாதகம், சொல் மூலம் அடையும் எதையும், வில் மூலமும் அடையலாம் என்றுணர்க.  இருபுடை வல்லமை கொண்டவனை, ‘ஸ்வய சாட்சி’ -என்று தனுவேதம் போற்றுகிறது, ஒரு கையில் உள்ளத்தையும், மறு கையில் உடலையும் கையாள்பவன் அவன். ஒரு முனையில் அம்பும் மறுமுனையில், இலக்கும் கொண்டவன் அவன், அவனே ஒரு முனையில் பிரபஞ்சமும்,, மறுமுனையில், பிரம்மமும் நிற்கக் காண்பான் ‘’
இப்படி பல்வேறு தருணங்களில் தத்துவ பாடமும், நூல்நெறியும் பேசுகிறார்.  பின்னாளில் நடக்கவிருக்கும் அத்தனை சம்பவங்களிலும், பாரத போரிலும், எதிரெதிராய், களம் காணப்போகும் பல்வேறு அரசர்களும், இளவரசுகளும், முக்கிய மாந்தர்களும், இங்கே அக்னிபத பாடசாலையில், ஒன்றாய் கூடி களித்து, விளையாடி, சீண்டி, எள்ளி நகையாடி, உணவை பகிர்ந்து, திறன்களை பேசிப்பகிர்ந்து ,  ஒரே குடும்பமாய் வாழ்தலென்பது ,குருவின் முன் மட்டுமே சாத்தியம் என்பதற்கான இடமாய்  அக்னிவேசர் குருகுலம் காட்டப்படுகிறது.  அக்னிவேசர் உடல்விட்டு பிரியும் தருணத்தில், அவர் முதல் மாணவரான, வ்யாஹ்ர சேனருக்கு, அக்னிவேசர் எனும் பட்டத்தையும், பாடசாலையயும் தருகிறார்,  அக்னிபத குருகுலத்தில் தான் , முக்கியமான பாத்திரங்களான  துரோணரும் , துருபதணும்,சிகண்டியும் கற்றுத்தேர்ந்து செல்கின்றனர்
                                             
                                                       துரோணர் 

குருகுல கல்வி முடிந்து விடைபெறும் அத்தனை இளவரசர்களிடமும் ,'' ‘பரத்வாஜரின் மைந்தரும், என் மாணவருமான,துரோணரை வணங்குங்கள்'', என்று சுட்டிக்காட்டப்படும்  துரோணர். பாரத கதை இறுதிவரை  தொடரும் ஒரு முக்கியமான பாத்திரம்
'துரோணம்' எனும் மரக்குடத்தில், ஆசிரம வாசலில் கிடக்கும் குழந்தையை, சமையல்காரர் விடூகர் எடுத்து வளர்க்க, பாரத்வாஜருக்கும் , ஹ்ருதாஜி எனும் குகர் குலத்து பெண்ணுக்கும், பிறந்த குழந்தை என்கிற உண்மை தெரிய வர, பரத்வாஜர் தவம் செய்ய மீண்டும் காடேகிறார். துரோணரை அக்னிவேசரிடம் கொண்டுவிடுகிறார், விடூகர்..
 தந்தை வழியில் அந்தனராகவும், தாய் வழியில் குகனாகவும் வளரும் துரோணருக்கு, அத்தனை பார்வையும், ஏளனம் மிக்கதாய், அவமதிப்பாய் தோன்ற, தர்ப்பையை துணைகொள்கிறார்,  உதட்டில் காயத்ரியும்,கையில், தர்பையுமாக தனித்து இருக்கும் இவருக்கு, எட்டு வித தர்ப்பையின் அத்தனை சூட்சுமங்களும் கை கூடுகிறது, எப்போதும் பாடசாலையிலிருந்து விலக்கப்பட்டே, இருக்கும், துரோணர் ஒருமுறை தர்ப்பையில், ஒரு குருவியை குறிபார்த்து விழ்த்த, பிராமணனாய் பிறந்து, ஷத்ரியனாய் வளரும் உன்னை வேறு குருவிடம் அனுப்புகிறேன் என்று சினந்து அக்னிவேசரிடம் அனுப்புகிறார், பரத்வாஜர்.  அங்கீகாரம் கிடைக்காத குழந்தையாக, தன் வெறுப்பை, கோபத்தை, பயிர்சியிலேயே செலவிடுகிறார், குருநாதரிடம் தனக்கென ஒரு அங்கீகாரம் பெறும்வரை, வில்வித்தையை தீவிரமாக கற்று சிறந்த மாணவனாக அக்னிவேசரால் அறியப்படுகிறார்.  வில்வித்தை கற்று தருவதில்லை என, துருபதனை அக்னிவேசர் திரும்ப அனுப்ப, வழியில், துரோணரை கண்டு ''பிராமனோத்தமரெ''   என்று காலில் விழுகிறான், அதை தனக்கு கிடைத்த முதல் அங்கீகாரமாக,நினைக்கிறார், பின்னாளில் அவனாலேயே, மிகப்பெரிய அவமானத்தை அடைய,  தான் ஒரு குருகுலம் அமைப்பது என்றும், பிரபஞ்சத்தின் மிகச்சிறந்த வீரர்களை உருவாக்குவது என்றும், அவர் தொடங்கும் குருகுலம் தான்,பாரத கதையின் அடுத்த தலைமுறையை, அவர்களுக்கான கல்வியை, உருவாக்குகிறது
தனக்கு பிராமணனாக அங்கீகாரம் கிடைக்க, பரசுராமரையும், தனுர்வேதியான, சரத்வானையும் தேடிக்கண்டு, அது கிடைக்காமல் போக, சரத்வான் முனிவரின் மகள் கிருபியை மணக்கிறார், இவர்களில் அஸ்வத்தாமன் குழந்தையாக பிறக்க, இவர் நடத்தும் குருகுலத்திலேயே, அனைத்தும் பயில்கிறான். ஒரு குருநாதரின் நெஞ்சில் எழும் வஞ்சமானது, ஒட்டுமொத்த மாணவர்களை அடைவதும், மேலும் விரிந்து,அரசபதம்,மக்கட்குடி,வரை வளர்வதும், தடுக்க முடியாத ஒன்று, என்பதற்கு சாட்சியாய், துரோனரில் எழும் வஞ்சம், தன் மாணவர்கள் மூலம்,துருபதனை, மூர்க்கமாய் தாக்குதல் வரை நீள்வதும், ஏகலைவனிடம்,குருதட்சனை என்கிற பெயரில் அவரில் வெளிப்படும் வன்மமும், துரோணரை முழுவதும் அறம் பிழைத்த மனிதராகவே சித்தரிக்கிறது, துரியோதனன்,கர்ணன்,அர்ஜுனன், போன்ற முக்கிய கதை மாந்தர்களில் எழும் குரோதம், துரோணரின், துருபதன் மீதான போரின் பின் மேலும் விரிகிறது, வென்முரசில் மையச்சரடாக  ஓடிக்கொண்டிருக்கும் வஞ்சத்திற்கு,விதையிடப்படும் குருகுலமாகவே, துரோணரின் பாத்திரப்படைப்பு அமைகிறது.  அதே வேளையில், தத்துவமும், நூல்நெரியும், வாழ்கை அறமும் , பேசப்படும் இந்த குருகுலத்தில் தான், தனுர் வேதத்தின் அத்தனை நுட்பங்களும், படையெடுப்பும், படைக்கலன் அமைத்தாலும், வியுகம் வகுத்தலும், போதிக்கப்படுகிறது.  பிரயாகையில், துருபதன் மேல் போர் தொடுக்கும் பகுதியில், குருகுல கல்வியில் பயின்ற, அத்தனை வித்தைகளையும், படை நகர்வு தந்திரங்களையும்,பாண்டவர்களும், கௌரவர்களும் இணைந்து நடத்தும் போர், மிக நேர்த்தியான ஒன்று. குருவின் வஞ்சம் தீர்க்க விளைந்த மாணவர்கள், தங்களுக்குள், மேலும், குரோதம் கொள்ளும் பகுதி.  துருபதன் சூளுரைத்து, திரௌபதியை மகளாக பெற விளைந்த,முக்கிய காரணியாக இங்கே, துரோணர் எனும் குரு சித்தரிக்கப்படுகிறார்.  ஒரு குருநாதரின் கனிவும், கருணையும், எப்படி  அந்த சமூகத்தை, பண்பாட்டை, தலைமுறைகளை, நலவழி நடத்துமோ,  அவ்வாறே, சில குருமார்களின், குரோதமும், தன்முனைப்பும், வஞ்சமும், அந்த காலகட்டத்தின் கடைசி மனிதன் வரை ஏதோ ஒரு,விதத்தில் அழிவையே, ஏற்படுத்தும் என்பதற்கு, சான்றாக, இங்கே துரோணரின் சித்திரம் அமைகிறது. இது துரோணர் மேல் வைக்கப்படும் குற்றச்சாட்டு அல்ல, நம் அனைவருக்குள்ளும்  எஞ்சி இருக்கும் ஒரு துளி வஞ்சமும், குரோதமும், நம்மில் உள்ள துரோணர் என்றறிக 
ஆம் அவ்வாறே ஆகுக...
                                                            கிருபர்

சர்த்வானின் மைந்தரும், தனுர்வேதியுமான, கிருபரே, பாண்டவ,கௌரவர்களின் முதல் ஆசிரியராக அறிமுகமாகிறார், இருதரப்பிலும் ஒவ்வொரு பாத்திரப்படைப்பும்,  அவரவர் படைகலங்கலாலேயே அறியப்படுகின்றனர். குலபூசை சடங்கில் கொற்றவை முன் படைக்கப்பட்ட படைக்கலங்களை, தம் மாணவர்களுக்கு, இவரே தேர்ந்து கொடுக்கிறார், முதல் மைந்தன் தருமனுக்கு 'உபதனுஷ்' எனும் உயரமற்ற வில், மூர்கமற்ற படைக்கலம்.
அடுத்து வந்த துரியோதனனுக்கு, ''தோள் வலிமையுள்ள உனக்கு கதாயுதம்'', என்றும் பீமனுக்கு ' உன் பெரிய தந்தையின் கதாயுதம்'' என்றும்,அடுத்து வந்த துச்சதனனுக்கு '' உனக்கும் கதாயுதமே'' , என்று அவர்களின் தோள் வலிமை, உடல் வலிமை கண்டு தேர்ந்தெடுத்து கொடுக்கிறார், அர்ஜுனனிடம் ''உனக்கு உகந்தது வில்'' என்று அவனைவிட உயரமான வில்லை தேர்கிறார், அதில் அவன் அங்கேயே நானேற்றுகிறான். பின் நகுலனுக்கும், சக தேவனுக்கும்,வாள் தேர்ந்து கொடுக்க, இளங் கௌரவர்கள்  அனைவருக்கும் படைக்கலம் தேர்ந்து தருகிறார். கர்ணனும் முதலில் வந்து சேரும் குருநாதர் கிருபரே,,  கானகங்களிலும்,, ஆயுத பயிற்சி சாலையிலும், படைபயிற்சி அளிக்கப்பட, கானக பயிற்சி என்பது, வேர்களிலும், கிளைகளிலும், நின்று படைகலன்களை, கையாள்வது, போன்ற ஆரம்ப கால பயிற்சிகளின் மூலம், வாழ்வின் பொருளனைத்தையும்,உடலின் மூலமும், படைகலங்களை கையாள்வதன் மூலமும் கற்பிக்கிறார்.
 ‘’ஏனெனில் அரசர்க்குரியது, படைகள கல்வியே, அதுவே முதன்மை கல்வி, அரசு சூழ்தலும், மதி சூழ்தலும்,உறவு சூழ்தலும், படைகலன் வழியாகவே, கற்க்கப்படவேண்டும்’’, எனும் கிருபர், அர்ஜுனனின் வில்வித்தையை கண்டு, '' அர்ஜுனா இனி நான் உனக்கு கற்பிப்பதற்கு ஒன்றுமில்லை, நான் உனக்கு ஆசிரியன் மட்டுமே, நீ உன் குருநாதரை தேடிச்செல், -  என்றும்.
‘’குருநாதர்களும் மாணவர்களும், பிறந்து இறந்துகொண்டே இருப்பார்கள்,  வித்யாதேவி என்றேன்றும் வாழ்வாள்,-அவள் வெல்லவேண்டும்,பிறர் அனைவரும் தோற்றாலும் சரி’’- என்று அர்ஜுனனை துரோணரிடம் செலுத்துகிறார் கிருபர். ஒரு ஆசிரியருக்குரிய அத்தனை குணங்களுடனும் நிறைவான கனிந்த குருவாகவே கிருபர் பாரதம் முழுவதும் அறியப்படுகிறார்

 


                                                               பரசுராமர்

அளவு மீறும் அமுதம் விஷமாவது போல அறம் காக்கும்,ஷத்ரிய வீரமே,மறமான காலமது, தேர்கள் உருளும் பாதையில், ஆயிரம்,சிற்றுயிர்கள்,மாள்கின்றன, அங்கே ஜமதக்னி முனிவருக்கும், ரேணுகைக்கும், மகனாக பிறந்து, பின் பெருந்தவத்தால், சிவனிடம் பெற்ற மழுவோடு,21 முறை பாரத பயணம் செய்து, ஷத்ரிய குலம் அழித்து அமைந்தவர்தான் பரசுராமர். - என சூதர் பாடல் மூலம் அறிமுகப்படுதப்படுபவர்

அக்னிவேசர் தம் இறுதி நாளில், துரோணரிடம், பரசுராமரை சென்று சேர சொல்ல,’’புராணங்களில் வாழும் பார்கவ ராமனையா/’’ என்கிறார் துரோணர்
‘’ஆம் பெரும்குருநாதர்கள் என்றும் இறப்பதில்லை,'' என்கிறார் அக்னிவேசர். .
பரசுராமரின் குருகுலத்தை தேடி 18 மாதம் பயணித்து , கடைசியில், சமந்த பஞ்சகத்தில்,இளம் சூதன் வழியாகவே, இங்கே பரசுராமர் பற்றி  பேசப்படுகிறது. ஷத்ரியர்களின் குருதியில்,5 குளங்களை அமைத்த பரசுராமர், நூறாண்டு காலம் தவம் செய்து தம் முன்னோர்களிடம் மன்னிப்பு கோரினார்..பின் தண்டகாரண்யத்தில் பரசுராமர் குடிலமைத்து இருப்பதாக,கேள்விப்பட,துரோணர் தெற்கே செல்கிறார். 300 ஆண்டுகாலமாக,அங்கே பரசுராமரின் குருகுலம் இருப்பதாக, பாரிஜாதர் வழிகாட்ட,பார்கவா குலத்தின் 13வது பரசுராமரின் வேள்விசாலையை அடைகிறார்
அதர்வண முறைப்படி நடக்கும் பூதான யாகம்,- அறமற்ற ஷத்ரியர்களை குருநாதர் வென்று,அந்த நிலப்பகுதியை அங்குள்ள மக்களுக்கு, தானமாக வழங்கும் நிகழ்வு நடைபெறுகிறது.  நிகழ்வின் முடிவில், பரசுராமர், தன் குருகுலம் விடுத்து, தவமேற்ற அமர்ந்து விடுகிறார். பிராமணனை ஷத்ரியனாக மாற்றுவது அவனுள் உள்ள பெரும்குரோதமே
பெருஞ்சினம் உள்ளில் குடியேறும் போது, நெருப்பெழு ந்த  காட்டின்,பறவைகள் என வேதங்கள் விலகிச்செல்கின்றன, -என்றுணர்ந்து குருகுலத்தை, 14வது பரசுராமரிடம் கொடுத்துவிட்டு தவமேற்ற செல்கிறார்
பின்னாளில்,கர்ணன்  15 ஆண்டுகாலம், பரசுராமரிடம், தென்னகத்தில், படைதிறனும்,நூல்திறனு ம் , அரசு சூழ்தலும் கற்கிறான், ''இறுதி சமர்களத்தில், உன் ஷாத்ரம் உன்னை கைவிடுவதாகுக'' என்ற சொல் ஏற்கிறான்
                           வியாசர்

பராசரரின்  மாணவனாகிய என்னிடம் வேதங்களை, வேதங்களை தொகுக்கும் பணியை ஒப்படைத்தார்,  36 ஆண்டுகாலம் முயன்று, வேதங்களை சம்ஹிதை ஆக்கினேன்,  400 ஞானியர் எனக்கு மானவர்களாயினர், 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை எங்கள் ஞான சபை கூடியது, என்று வேத மரபை முன் நிறுத்தி, குருகுலம் அமைத்திருந்தவர்

                          பராசரர்
அன்னையின் கருவிலேயே, நால் வேதமும், ஆறு மதங்களும், தரிசனமும், தத்துவமும், கற்று மண்ணுக்கு வந்து, கைலாய மலைசரிவில், பீதவனத்தில், தவமியற்றி, குருகுலமைத்து, புராண சம்ஹிதை இயற்றிய,பராசரர்,

பராசரரின் குருநாதரான,புலஸ்தியர்,
                                                                             
குந்திக்கு நினைத்ததை அடையும், மந்திரத்தை உபதேசித்த, துர்வாச மாமுனிவர்.
பின்னாளில் துரியோதனனுக்கு குருவாக கதாயுத பயிற்சி அளிக்கும்  பலராமர்
அதர்வண வேதம் மூலம் திரௌபதி பிறக்க காரணமான, மகாயாஜர், உபாயாஜர் போன்ற  குருமார்கள்..நம் பாரத கதை  முழுவதிலும் காணமுடிகிறது, காமரூபம் முதல் காந்தாரம் வரை, குமரி முதல் இமயம் வரை, குருமார்களையும், பாடசாலைகளையும் நோக்கி மாணவர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.  சில இடங்களில், தகுதியான மாணவனை தேடி உயர்ந்த குருமார்கள் அலைந்த வண்ணம் இருப்பதையும் காணமுடிகிறது

வென்முரசு முழுவதுமே சூதர்கள் மூலமே கதை நகர்த்தும் நேர்த்தியை கையாண்டிருக்கும் நம் ஆசான் ஜெமோ,  சூதர்கள் பற்றி குறிப்பிடுகையில், '' மானுடம் சிந்தும் அத்தனை உணர்சிகளையும், அந்தந்த கணங்களிலேயே, அள்ளி வைத்துக்கொள்பவன். அந்த நேரத்தில் அவனை சூழ்ந்திருக்கும் அத்தனை பொருள்களிலும் மின்னும் விழிகள் அவனுடையது,
இங்கு வாழும் அனைத்தும், மண்ணிலும்,சூதர் சொல்லிலும் இறுதியில் சென்று படிகின்றன,தண்டுகளில், இலைகளில், தளிர்களில்,மலர்களில், கனிகளில் நிறைந்து, மீண்டும் எழுகின்றன. - என்கிறார்

அவர்  சொற்கள் எப்பொருள் கொண்டவை என்பதை எவரறிவார்/
நாம் விரும்பும் பொருளை அவற்றில் அள்ளிக்கொடிருக்கிறோம்''-

னும் இந்த வரிகள் நம் ஆசானுக்கான வரிகள், ....ஆம் .....
அவர் சொற்கள் எப்பொருள் கொண்டவை என்பதை எவரறிவார் /
நாம் விரும்பும் பொருளை அவற்றில் அள்ளிக்கொண்டிருக்கிறோம்;;
எனினும் 
என் வரையிலான புரிதல்களையும், புல்லரித்தல்களையும், இங்கே தொகுத்துள்ளேன், இதுவும் ஒரு தரப்பு, என்கிற நிலையிலான வாசிப்பனுபவம் தான் என்னுடையது,  நண்பர்களின் சிந்தனையும்,, விவாதமும்,மேலும் என் போன்ற இளம் வாசகர்களுக்கு திறப்பாக அமையும் என்று நம்புகிறேன்
                           
                            நன்றி..