திரு ஜெ,
"அணுகிவரும் படகுகளை கூர்ந்து நோக்கியபடி “நம்மிடம் எரியம்பு எய்யும் திறன்கொண்ட ஏழு பேர் மட்டுமே உள்ளனர்” என்றான் சாத்யகி. “ஏழு என்பது மிகப்பெரிய எண்” என்று சிரித்த திருஷ்டத்யும்னன் கிருஷ்ணவபுஸின் படகுகளை நோக்கி “அவர்களிடம் இருக்கும் மிகப்பெரிய குறைபாடு என்னவென்றால் நாம் வெறும் தனிப்படகு என்று எண்ணுவதுதான். ஆனால் பாய்களை முழுதாக விரித்து வைத்திருக்கிறார்கள். அதாவது நம்முன் பன்னிரண்டு காய்ந்த வைக்கோல் குவைகள் உள்ளன” என்றான்."
இந்திரநீலம் முழுமைக்கும் ஏழு என்ற எண் மகத்துவம் பெற்றதாக கூடவே வந்து கொண்டிருக்கிறது. தற்போது திருஷ்டத்யும்னனும், சாத்யகியும் இருக்கும் படகானது போர்ப்படகாக தோற்றமளித்தாலும் அதன் மற்றொரு பரிணாமம் அதை சியமந்தகமாகவே நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறது. அதனைக் கைப்பற்றி, அது இருக்கும் நிலைமாற்றி, வேரிடம் நிலைக்கச் செய்யும் எண்ணமும், அதன்மீது ஆசை என்னும் வைக்கோல் குவைகளுடன் அதனை நெருங்கி வருகிறவர்கள், அதன் ஒளிரும் பட்டைகள் போன்ற ஏழு வில்லவர்களாலும், காத்துநிற்கும் ஏனையவர்களாலும் அழிந்துபடுகிறார்கள். இந்த விளைவே சியமந்தகத்தைக் கையகப்படுத்த நினைக்கும் சததன்வா, கிருதவர்மன் மற்றும் அக்ருவர் ஆகியோருக்கும் நடக்க இருப்பதை நம்முன் பிரதிபலித்துக் காட்டுகிறது.