Friday, July 17, 2015

தண்டித்தல்


   குற்றம் செய்த ஒருவனுக்கு தண்டனை வழங்கவேண்டும் என்பதில் நம்மில் எவருக்கும்  மாற்று கருத்து இல்லை என நினைக்கிறேன். நமக்கு தவறு செய்தவர்கள்   கண்டிப்பாக  தண்டிக்கப்படவேண்டும் என நினைக்கிறோம். நமக்கிழைக்கப்பட்ட ஒரு தவறு தண்டிக்கப்படாதபோது நமக்கு மற்றொரு தவறு இழைக்கப்பட்டதாகக் கருதுகிறோம். அதனால் ஏற்படும் மன வருத்தம் நமக்கு குற்றம் இழைக்கப்பட்டபோது அடைந்த வருத்தத்தைவிட அதிகம்.ஆயினும் திருஷ்டத்துய்மன் கிருதவர்மனுக்கு வழங்கிய தண்டனை நம்மை  சற்றே உறுத்தவே செய்கிறது. கிருதவர்மன் குற்றம் செய்தவன். அவனே நான் எந்தக் குற்றமும் செய்யவில்லை என சொல்லவில்லை. ஆனாலும் அவன் தனக்கு அளிக்கப்பட்ட தண்டனைக்கு வஞ்சம் தீர்ப்பேன் என்கிறான்.
    தண்டனை கொடுப்பதில் கவனமாக இருக்கவேண்டிய விஷயங்கள் இருக்கின்றன.

தண்டனை வழங்குவதற்கான தகுதி: யார் வேண்டுமானாலும் ஒரு குற்றத்திற்கு தண்டனை வழங்கமுடியும் என்றால் அது ஒரு பெரிய குழப்பத்தை தரும்.   ஒரு சமூகத்தில், அதன் அரசியல் அமைப்பில், ஒரு சிலருக்கு அந்த தகுதி அல்லது பொறுப்பு அளிக்கப்பட்டிருக்கும். அந்தப் பொறுப்பற்றவர்கள் தண்டனையளிப்பது ஒருவகையில் பார்த்தால் இன்னொரு குற்றம் ஆகும். கிருதவர்மனை பிடித்துவரும் பொறுப்பு மட்டுமே அளிக்கப்பட்டிருந்தது. அந்த முயற்சியில் கிருதவர்மன் கொல்லப்பட்டிருந்தால் கூட தவறில்லை. ஆனால் திருதராஷ்டிரன் அவனை தேரில் கட்டி ஊர்பார்க்க அழைத்துவருவது என்பது ஒரு தண்டனை.  திருஷ்டத்துய்மனுக்கு தண்டிப்பதற்கான பொறுப்பு அளிக்கப்படவில்லை. அதை அவனே எடுத்துக்கொண்டது தவறாகவே தெரிகிறது.

விசாரித்து தண்டித்தல்: இது மிக முக்கியம். விசாரிக்கும்போது தான்,  தண்டனை வழங்கப்போகிறவர், குற்றத்தால் பாதிக்கப்பட்டவர், குற்றவாளிக்கு எதிராகவும் சார்பாகவும் இருப்பவர்கள், மேலும் குற்றம் புரிந்தவன் என அனைவருக்கும்  குற்றத்தைப்பற்றிய ஒரு தெளிவு கிடைக்கும். அப்போது தான் குற்றத்தின் தன்மை அளவு தெரியவரும். திருஷ்டத்துய்மன்  கிருதவர்மனிடம் என்ன நடந்தது என்பதை விசாரிக்கவில்லை. கிருதவர்மன் தவறு செய்தவன் என்ற முன்முடிவோடு இருக்கிறான். முன்முடிவு என்பது நாம் நம் கண்மீது கட்டிக்கொள்ளும் கருப்புத்துணி. அது நம் கருத்துக்கு சரியான தகவல்கள் கிடைக்காமல் தடுத்துவிடும்.

பொருத்தமான தண்டனை:  ஒவ்வொரு குற்றத்திற்கும் ஒவ்வொரு மாதிரியான தண்டனை இருக்கும். சிறிய தவறுக்கு பெரிய தண்டனை தருவது அக் குற்றத்தைவிட பெரிய குற்றமாகிவிடும் ஆபத்துள்ளது. ஒருவன் குற்றம் புரிந்துவிட்டான் என்பதால் அவனுக்கு எந்த தண்டனைவேண்டுமானாலும் கொடுத்துவிடலாம என்பதில்லை. இங்கு கொடுக்கப்பட்டிருக்கும் தண்டனை சற்று அதிகமாகவே காணப்படுகிறது. திருஷ்டத்த்ய்மனுக்கு பரிந்து பேசும் கண்ணனும் அத் தண்டனை கொடுக்கப்பட்டுவிட்டது வேறென்ன செய்வது என்றுதான் கூறுகிறானே தவிர சரியான தண்டனைதான் கொடுக்கப்பட்டது எனக் கூறவில்லை  என்பதை கவனிக்கவேண்டும்.

சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்ட தண்டனை:  ஒரு குற்றத்திற்கு, ஒரு சமூகத்தில்,  'ஒரு கையை வெட்டிவிடுதல்' போல கடுமையான தண்டனை இருக்கலாம். இன்னொரு சமூகத்தில் அதற்கு வெறும் சிறைத்தண்டனை போதும் என இருக்கலாம். ஆக அந்தந்த சமூகத்திற்கு ஏற்ப தண்டனை வேறுபடும். பாஞ்சாலம் போன்ற ஷத்திரிய நாட்டில் திருஷ்டத்துய்மன் கொடுத்தது சரியான தண்டனையாக இருந்திருக்கலாம். ஆனால் துவாரகையில் யாதவ அரசு இன்னும் ஷத்திரிய வழிமுறையில் நடக்கத்தொடங்கிவிட்டது எனக் கூற முடியாது. நேற்றுவரை சிறு சிறு குழுக்கலாக இருந்தவர்கள். ஒரு தலைவனை விட்டு பிரிவதும் இன்னொரு குழுத்தலைவனிடம் சேர்ந்துகொள்ளலும் அவ்வளவு பெரிய தவறுகளாக அவர்களுக்கு தோன்றாமல் இருந்திருக்கலாம். ஆகவே அதற்கான தண்டனை என பார்க்கும்போது இது மிகப் பெரிதாக தெரிந்திருக்கும்.

அவமதித்தல் எப்போதும் ஒரு தண்டனையல்ல:  ஒருவனை அவமதிக்கும்போது அவனின் அகங்காரம் சீறி எழுகிறது. அவன் தன் குற்றத்திற்கு வருந்துவதையும் அப்போது விட்டுவிடுகிறான். தண்டித்தவன் மேல் கோபமும் வஞ்சமும் கொள்கிறான். தண்டிக்கும்போது ஒருவன் விருப்பு வெறுப்பில்லாமல் நடுநிலையுடன் முடிவெடுக்கவேண்டும். ஆனால் அவமதிப்பவன் குற்றம் செய்தவனின் குற்றத்தைமட்டுமல்ல குற்றம் செய்தவனையும் சேர்த்து வெறுக்கிறான். சமூகத்திற்கும் குற்றம் செய்தவனுக்குமான பிரச்சினை என்பது மறைந்து தண்டிப்பவனுக்கும் குற்றம் செய்தவனுக்குமான பிரச்சினை என்று அது திரிந்து போகிறது. திருதராஷ்டிரன் மேல் கிருதவர்மன் கொள்ளும் வஞ்சம் அத்தகையது.

மன்னித்தலும் ஒரு தண்டனை: அக்ரூரருக்கு அளிக்கப்படும் மன்னிப்பு எவ்வளவு அருமையான தண்டனை. அது அவரின் குற்றத்தை அழித்து ஒழிக்கிறது. ஆனால் அவரை காயப்படுத்தாமல் விடுகிறது.  ஒருவன் தன்னுள் கொண்டிருக்கும் குற்ற நோக்கினை அழிக்காத ஒரு தண்டனையால் என்ன பயன்? அக்ரூரரின் மனதில் இருக்கும் களங்கத்தை இந்த மன்னிப்பு கழுவித்துடைத்திருக்கும் அல்லவா? இதை, மன்னிப்பை தவிர வேறு எதும் சாத்தியப்படுத்தாது.  இந்த தண்டனையால அக்ரூரர் போன்ற மதியூகி துவாரகைக்கு திரும்ப கிடைக்கிறார்.

திருஷ்டத்துய்மன் போரில் அடைந்த அனுபவத்தை இன்னும் அரசு சூழ்தலில், நீதி பரிபாலனத்தில் அடையவில்லை என்பதைக் காட்டுகிறது. கண்ணன் அந்த அனுபவமின்மையை அறிந்துகொண்டு அவனை தன் சாதுரியத்தால் காப்பாற்றிவிடுகிறான்.

தண்டபாணி துரைவேல்