Tuesday, July 14, 2015

கொல்லும் கண்ணன்


    குழந்தையாய் மழலையில்  கொஞ்சும் கண்ணன், தயிர் கலங்களை உடைத்து விளையாடும் குறும்புக் கண்ணன், மக்களை மழை வெள்ளத்திலிருந்து காக்கும் கண்ணன்,  இசையால் கவரும் குழலூதும் கண்ணன், காணும் கன்னியரின் மனமெல்லாம் திருடும் காதலிக்கும் கண்ணன், வெறும் மணலிலிருந்து மாபெரும் நகரை உருவாக்கும் மதிநுட்பக் கண்ணன், அரச அரசியர்களை சதுரங்கக் காய்களாக வைத்து விளையாடும் அரசியல்வாதி கண்ணன். இப்படி பல்வேறு விதங்களில் கண்ணனை வெண்முரசில் அனுபவித்து வருகிறோம். இருப்பினும் பகைவர்களை தேடி பிடித்துக் கொல்லும் கண்ணன் அதிர வைக்கிறான். ஆனால் இந்த பாத்திரம் இல்லாமல் கண்ணன் வடிவம் முழுமையாகாது.  வேறு வழியில்லை கண்ணனின் இந்த வடிவத்தையும் நாம் புரிந்துகொள்வேண்டும்.

  கண்ணன் தன் பிறந்த சில நாட்களிலிருந்தே கொல்லும் கண்ணனாகவும் இருந்து வருகிறான் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். பூதகியில் தொடங்கி கம்சன் முதலிய பலரை கொன்றவன்தான் அவன். அதை நாம் கொலை எனக் கொள்ளவில்லை. ஏனென்றால் கொலையுண்டவர்கள் பெரும் கொலையாளிகள்.  அவர்களை கொல்லப்படுவதை நாம் எதிர் பார்த்துக்கொண்டிருந்தோம். ஆகவே  இதுவரை  அவன் கொல்வதை நாம் பெரிதுபடுத்தவில்லை. ஆனால் இன்று கண்ணன் எதிரிப்படைகளின் சாதாரண வீரர்களை, குடிகளை கொல்லச் செய்கின்றான்.


   இன்றைய போர்களில் பிடிபட்ட எதிரி படைவீரகளை அனேகமாக கொல்வதில்லை.  மரியாதையகக்கூட நடத்தப்படுகிறார்கள். ஆனால் தருமம் தழைத்தோங்கியதாக கூறப்படும் அந்தக் காலத்தில் இப்படி கொல்லப்படுதல் இயல்பாக நடந்திருக்கிறது என்பது அதிர்ச்சியளிக்கத்தான் செய்கிறது.  ஒரு பெரிய மேற்கத்திய மதத்தின் நிறுவனர்  தன் எதிரிகளை வெற்றிபெற்ற பின்னர் எதிரிகளின் குழந்தை பருவத்தை தாண்டிய  அனைத்துஆண்களையும் கொல்லச் சொல்கிறார். அனைத்து பெண்களும் அடிமையாக்கப்படுகின்றனர். நம் நாட்டிலேயே அசோகர் தன் சகோதரர்கள் அனைவரையும் கொன்று அரசை பிடித்ததாக ஒரு வரலாறு சொல்கிறது.


    பிடிபட்ட எதிரிவீரர்கள் ஏன் கொல்லப்படவேண்டும். எதிரி அரசன் எடுத்த முடிவை கண்ணை மூடிக்கொண்டு நிறைவேற்றும் இயந்திரம் போன்றவர்கள் அவர்கள். அவர்களை கொல்லுவது அவர்கள் மேல் உள்ள வெறும் கோபத்தினாலா?  தலைவன் செய்த  வஞ்சத்திற்கும் கொடுமைகளுக்கும் அவர்களின் மீறப்படாத ஆணையின்படி நடந்த வீரர்களை ஏன் பழிவாங்கவேண்டும்?


    அப்போதைய காலத்தில், அதுவும் அரசன் ஒரு குலக்குழு தலைவனாக இருக்கும்போது,  வீரர்கள்   அவர்கள் தலைவனிடம் வெறும் ஊதியத்தால் பிணைக்கப்பட்டவர்கள் அல்லர். தலைவனிடத்தில் விசுவாசத்தால் இணைக்கப்பட்டவர்கள். ஒவ்வொரு வீரனும் தலைவனின் ஒரு அங்கத்தைப்போன்றவர்கள். குடிகள் அரசனை  கடவுளின் அடுத்த நிலையில் வைத்திருப்பவர்கள். அரசன் செய்யும் அனைத்து செயல்களுக்கும் தன் ஒப்புதலை கேட்காமலேயே அளித்திருப்பவர்கள். அவனால் விளையும் நலங்கள், கெடுதல்கள்  யாவற்றையும் எவ்வித கேள்வியும் இல்லாமல் அனுபவிப்பவர்கள். ஆக தன் தலைவனை வெல்பவனை தன் முதல் எதிரியாக கருதுவார்கள்.  அவனை அவன் நாட்டு மக்களை பழிவாங்கும் எண்ணம் இயல்பாக பெற்றிருப்பார்கள். ஆகவே ஒரு தலைவனை மட்டும் கொன்றுவிடுவதால் அச்செயல் முடிவுபெறுவதில்லை. அவனுடைய ஒவ்வொரு வீரனிடத்திலும் குடிமகனிடத்திலும் அவன் இருப்பு தொடர்ந்துகொண்டு இருக்கும். அவர்கள் தம் தலைவனை வென்ற எதிரிகளின் மேல்  அதிக வஞ்சத்துடன் இருப்பார்கள். 


     எதிரி நாட்டில் வென்று உள் சென்றுள்ள வீரர்களுக்கு அவர்களால் விளையும்  ஆபத்து யூகிப்பதற்கும் கடினமானது.  அவர்கள் தெருக்களில் வீடுகளிலிருந்து எப்போது கிளம்பிவந்து தாக்குதலை தொடர்வார்கள் என்ற தலைக்கு மேல் தொங்கும் கத்திபோல் வென்ற தலைவன் மற்றும் அவன் வீரர்களுக்கு இருக்கும். அப்போதைய போர்களில் வீரர்களின் எண்ணிக்கையைவிட சூழல் மற்றும் தனிப்பட்ட வீரர்களின் திறன், மதிநுட்பம் மிகுந்த வினையாற்றும். ஆகவே கொல்லாமல் விடப்படும் ஒவ்வொரு வீரனும் ஒரு மிகப்பெரிய ஆபத்தை விளைவிக்கும் ஆயுதம். அவர்களை அழிக்காமல் வெற்றி முழுமையடையாது.அங்கிருக்கும் கிறு குழந்தைகள் முதியவர்கள் தவிர மற்ற அனைத்து ஆண்களில் எவர் வேண்டுமானாலும்  வீரர்களாக இருக்கக்கூடும் என்பதால அவர்களும் கொல்லப்படுகிறார்கள்.


    ஆக இத்தனை கொலைகளுக்கும் காரணமாக யாரைச்சொல்ல முடியும். யர் போருக்கு காரணமாக இருந்தாரோ அவர் மட்டுமே காரணம். போர் ஆரம்பிக்கப்பபட்ட பின்னர் நிக்ழ்வது  தொடர் நிகழ்வுகள். யாரும் யாரையும் குற்றம் காட்ட முடியாது அல்லது எல்லாவற்றுக்கும் எதிரியை குற்றம் சாட்டிக்கொள்ளலாம். போரை ஆரம்பிப்பவன், போருக்கு காரணமான காரியத்தை செய்பவனாவான்.  அப்படி பார்த்தால் கண்ணன் இதுவரை செய்த போர்கள் எதற்கும் அவன் காரணமாக இருந்ததில்லை. போர்கள் அவன் மீது திணிக்கப்பட்டன. அதை அவன் திறம்படச்செய்கிறான்.அவ்வளவுதா
ன்.
துரைவேல்