Thursday, July 9, 2015

அக்ரூரரின் குரல்


அக்ரூரரின் இந்த மாற்றம் பற்றி ஜெ தெளிவாகவே குறிப்புகள் அளித்துச் சென்றுள்ளார். ஒருவிதத்தில் இந்த மாற்றம் எதிர்பார்த்ததே. முதன் முதலில் திருஷ்டதுய்ம்னன் அக்ரூரருக்கு அம்மணி மேல் விழைவு வந்திருக்கும் என்று சொல்லும் போது என் கீழ்மையே அதை என்னை ஏற்க வைத்தது என்று எண்ணினேன். பிறகு கதையும் அத்திசை நோக்கியே செல்லத்துவங்கியது. கிருஷ்ணன் வேறு கில்லாடித்தனமாக (மன்னிக்கவும்... வேறு சரியான வார்த்தை தோன்றவில்லை) நால்வரையும் சோதிக்கும் ஒரு தருணமாக இதை விட்டுச் சென்று விடுகிறான்.

அங்கே சததன்வா என்ன சொல்லி அவரை மாற்றியிருப்பான்? உண்மையில் அக்ரூரரே கிருஷ்ணனை கம்சனிடம் அழைத்துச் சென்றவர். யாதவர்களில் அவரே முதன் முதலில் கிருஷ்ணனின் திறமையை சந்தேகமின்றி உணர்ந்தவர். ஒரு விதத்தில் கிருஷ்ணன் யாதவத் தலைமை கொள்ள அவரும் பெரும்பங்கு வகித்திருக்கிறார். இப்படிப்பட்டவர் தான் கிருஷ்ணனுக்கு ஆலோசனை சொல்லுமிடத்தில் மட்டுமல்லாது அவனைக் கட்டுப்படுத்தும் இடத்திலும் இருக்க வேண்டும் என்றே விழைந்திருப்பார். அதில் தவறொன்றும் இல்லை. அவரின் அனுபவத்திற்கும், வயதிற்கும் முன்னே கிருஷ்ணன் சிறுவன் தானே!! எனவே துவாரகையின் முதல் பெரும் தலைவராக, பிதாமகராக அவர் தன்னை எண்ணியிருக்கக் கூடும்.

ஆனால் நடந்தது என்ன? கிருஷ்ணன் அனாயசமாக அனைவரையும் கடந்து செல்கிறான். எளிதாக அனைவரையும் வைத்து பகடை ஆடுகிறான். அனைத்துக்கும் மேல் துவாரகையை பாமாவின் ஆள்கைக்குள் அனுமதிக்கிறான். மெல்ல பால் திரிகிறது. அதை ஆய்ச்சியின் அனுபவத்தோடு ஒற்றறியத் துவங்குகிறாள் பாமா. அது இன்னும் அவரை அவமானப் படுத்தியிருக்கும். கிருஷ்ணன் இதில் தலையிடாமல் இருப்பது வேறு அவரைக் காயப்படுத்தி இருக்கும். இந்த இழையளவு கீறலை சியமந்தகத்தின் ஒளிச்சிதறலால் நிரப்புகிறான் சததன்வா. எளிதாக அவர் அங்கே அமைகிறார்.

இது துலாக்கோலின் சிறு தடுமாற்றம் தான். எடை மறுபுறம் ஏறும் போது மீண்டும் சமநிலைக்கு வந்தே தீரும். இது மானிடச் சிறுமையின் நீட்சி தான். ஆனாலும் அதை மீறும் நன்மையையும் அதே மானிட மனதில் இருக்கும். அக்ரூரரும் மீள்வார், பிரசேனரைப் போல!!

அன்புடன்,
மகராஜன் அருணாச்சலம்