Monday, July 20, 2015

பெண்னிண் சந்தேகமும் சம்மதமும்


    கண்ணனின் மனைவியர்களுக்குள்ளே இருக்கும்  அதிகார போட்டிகள், அதில் தான் பாதிக்காமல் சாதுரியமாக நடத்தும் கண்ணனின்  சாகசங்கள் போன்றவறை ஜெயமோகன் அழகாக  படம்பிடித்து காட்டுகிறார். பெண்களை ஒரு கோணத்தில் மிக உயர்ந்தவர்களாக, மனத்திண்மையும் விசாலமும் உடையவர்களாக காட்டும் வெண்முரசு மற்றொரு கோணத்தில் அவர்களின் சிறுபிள்ளைத்தனமான அகங்காரங்களை, சஞ்சலங்களை, அதனால் அவர்கள் செய்யும் சச்சரவுகளை விவரிக்கவும் செய்கிறது.   
     ஒரு ஆணை மணந்துகொள்ள  பல பெண்கள் போட்டிபோடுவதில்லை. தானாக ஒரு ஆணிடம் சென்று தன் காதலை சொல்வதை தன்மான இழுக்காக பெண் கருதுகிறாள். காதலுக்கு சம்மதிப்பதை தான் ஒரு ஆணுக்கு வழங்கும் மிகப்பெரிய அங்கீகாரம் என்பதைப்போல் அவள் நடந்துகொள்கிறாள்.

       இதில் ஆண்கள் இவ்வளவு பெருமை பார்ப்பதில்லை. ஒரு பெண்ணை மணந்துகொள்ள பல ஆண்கள் போட்டியிடுகின்றனர்.  அதில் எந்த வெட்கத்தையும் பார்ப்பதில்லை.  பெண்களிடம் காதலை யாசிப்பது என்பதை ஒரு இழுக்காக ஒரு ஆண் கருதுவதில்லை. காதலில் பெண்ணின் அனுமதி கிடைத்த ஒருவன் பெரிதாக ஒன்றை சாதித்த திருப்தியை அடைகிறான். 

         அதே நேரத்தில் திருமணத்திற்கு பின் எல்லாம்  தலைகீழாக மாறிவிடுகிறது.  பெண் மற்ற பெண்களை இப்போது போட்டியாக கருதுகிறாள்.   தன் கணவன் திருடுபோகக்கூடியவன், ஆகவே பாதுகாக்கப்படவேண்டியவன் என நினைத்து, அதில் கண்ணும் கருத்துமாக இருக்கிறாள்.  இது அவளுக்கு ஒரு முக்கியமான வேலையாக  இருக்கிறது. ஒவ்வொரு கூட்டத்திலும் அவள் தன் கணவனால் பார்க்கப்படுபவர்கள் மற்றும் தன் கணவனை பார்ப்பவர்கள் என அனைவரையும்  கண்காணித்துக்கொண்டு இருக்கிறாள். பெரும்பாலான பெண்கள் இப்படி செய்வதை பார்க்கலாம். மற்றசில  பெண்கள் இதை யாரும் கவனிக்காத வகையில் திறமையாக செய்வார்கள். என் நண்பரின் மனைவி திடீரென்று ஒருநாள் அலவலகம் வந்து நண்பரை பார்த்துவிட்டு எங்கள் அனைவரையும் நலம் விசாரித்துவிட்டு சென்றார். இரண்டு பேருந்துகள் மாறி அவ்வளவு தூரம் அவர் வந்துபோனதற்கான காரணம் ஏனென்று எங்கள் நண்பர் உட்பட யாருக்கும்  அப்போது தெரியவில்லை.

       ஆனால் இப்படி கண்காணிக்கும் பெண்கள் தான் சமயத்தில் தன் கணவன் இன்னொருவளை மணந்துகொள்ள சம்மதிக்கவும் செய்கிறார்கள். பின்னர் காலமெல்லாம் மற்றொரு மனைவிக்கு தன்னைவிட அதிக முக்கியத்துவம் தருகிறானோ என சந்தேகித்து கண்காணித்து வருகிறார்கள்.  இது என்ன மாதிரியான விளையாட்டு என தெரியவில்லை. இன்றைய கால கட்டத்தில் ஒரு ஆண் பல மனைவிகளை மணந்துகொள்ளாமல் இருப்பதற்கு காரணம் சமூக சட்டங்களும் சூழலும் தான்.   இல்லையென்றால் சிலர் எப்படியும் மனைவியை இதற்கு சம்மதிக்கவைத்து விடுவர். சென்ற தலைமுறைவரை பலதாரமணம் நம் சமூகத்தில் பரவலாக இருந்திருக்கிறது. இரண்டு மனைவியரைக்கொண்டவர்கள் மனைவியை மதிக்காத முரடர்களாகவோ சுயநலவாதிகளாகவோ  இருந்தார்கள் என்றால் கூட புரிந்துகொள்ளலாம். ஆனால் நான் பார்த்தவரை அன்பும் இரக்கமும் கொண்டவர்களாக தான்  அவர்கள் இருந்தனர். மனைவிகளிடத்தில் மிகுந்த மரியாதையுடன் நடந்துகொண்டனர்.  அவர்கள் தன் மனைவியை எப்படியோ இதற்கு சம்மதிக்க வைத்திருந்தனர்.

   எனக்கு விளங்காததெல்லாம் எப்படி ஒரு மனைவி தன் கணவனின் மற்றொரு திருமணத்திற்கு  சம்மதிக்கிறாள் என்பதும் ஏற்கெனவே மனைவியுடன் இருப்பவனை ஒரு பெண் எப்படி மணந்துகொள்ள சம்மதிக்கிறாள் என்பதும்தான்.   இதை பெரும்பான்மையான சமூகங்கள் இயல்பாக ஏற்றுக்கொண்டது எப்படி?  இதற்கு   எதாவது உளவியல் அல்லது உயிரியல் காரணம் இருக்கிறதா?

      பல்வேறு நோய்கள், போர்கள், விபத்துகள் போன்றவற்றினால் அடிக்கடி தன் குடிகளை இழந்த சமூகங்கள் தம் இருப்பை தக்கவைத்துக்கொள்ள அதிகமான குழந்தைப்பேற்றுக்கு மறைமுகமாக தன் குடிகளை வலியுறுத்தியிருக்கும். அந்தக்காலகட்டத்தில் பெண்களைவிட ஆண்களின் இறப்பு விகிதம் அதிகமாக இருந்திருக்கும். ஆகவே அனைத்து பெண்களும் மணமாகி குழந்தைப்பெறுவது முக்கியம்  என்று கருதிய சமூகம் பலதாரமணத்தை அங்கீகரித்திருக்கும். இது சமூக பிரக்ஞையில் ஆழப்பதிந்து சென்ற நூற்றாண்டுவரை தொடர்ந்து வந்திருக்கிறது. இப்போது  இந்த காரணங்கள் இல்லாமையால் பலதாரமணம் சமூகங்களிலிருந்து விலக்கப்பட்டுவருகின்றது.  ஆண்கள் பெண்கள் மன ஆழத்தில் இருந்து இன்னும் முற்றாக இந்த தாக்கம் விலகவில்லை என்பதனால்,  ஆண் பெண் இடையேயான இந்த சந்தேக விளையாட்டு இன்னமும் நடைபெற்று வருகிறது என நினைக்கிறேன்.


தண்டபாணி துரைவேல்