மன்னர்களின்
அரசியலிலிருந்து, குலங்களின் அரசியல், மதங்களின் அரசியல் சாதிகளின்
அரசியல், குடும்ப உறவுகளின் அரசியல், பணக்காரர்களின் அரசியல்,
படித்தவர்களின் அரசியல் என அனைத்தும் ஒரு பெண்ணின் திருமணத்தை பாதிப்பதாக
இருந்துவருகிறது.
ஆணுக்கு இந்த பாதிப்பு இல்லையா? பெரும்பாலும் இல்லை, அல்லது பெண்ணைக் காட்டிலும் மிக மிகக் குறைவாக மட்டுமே ஆணுக்கு உள்ளது. ஒரு பெண், படிக்காத ஒருவனை, தன்னைவிட வசதி குறைவானவனை, தன் குடும்பத்தினர் விரும்பாத ஒருவனை , வேற்று சாதியைச் சார்ந்தவனை, வேற்று மதத்தினை சார்ந்தவனை திருமணம் செய்ய விழைந்தாள், அவள் சமூகம எப்படி எதிர் வினை புரிகிறது என்பதைக் காண்கிறோம். பெண்ணின் விருப்பம் என்பது இடது கையால புறந்தள்ளப்படுகிறது. இது, ஆண் விஷயத்தில் அவன் சமூகம் காட்டும் எதிர்ப்புக்கு, பல மடங்கு அதிகம்,
.
வயதானவனா, பல பெண்களை முதலிலேயே மணந்திருப்பவனா, தன் மகள் விரும்பும் அழகுள்ளவனா, அறிவுள்ளவனா, பண்புள்ளவனா என எதைப்பற்றியும் சிந்திக்காமல், தன் அரசியலுக்கு பலனளிக்குமா என்பதைமட்டுமே கவனத்தில் கொண்டு மன்னர்கள் தம் பெண்களுக்கு வரன்களை பார்க்கிறார்கள். ஒரு ஒப்பந்தம் போல், ஒரு பரிசைப்போல், ஒரு அபராதத்தொகைபோல் அல்லது ஒரு காணிக்கைபோல் தம் மகளை ஒருவனுக்கு கையளிக்கிறார்கள்.
எளிய ஏழைக் குடும்பங்களில் குறைவாக உள்ள இந்த அநீதி, படிப்படியாக அதிகரித்து மன்னர்களின் குடும்பத்தில் உச்சத்தில் இருக்கிறது. பெண்களின் திருமண சுதந்திரம், குடும்பத்தின் சமூக அந்தஸ்து உயர உயர, வெகுவாக குறைந்துகொண்டே போகிறது.
ஆணின் விதை விழுந்து முளைத்தெழும் நிலம் என பெண்ணை கருதுகிறார்கள். குழந்தை முழுதுமாக தந்தையின் ரத்தம். தந்தையின் வாரிசு, தந்தையின் வழிதோன்றல் என்றே மனிதர்கள் கூறிவருகிறார்கள். ஒரு குழந்தையின் அனைத்திற்கும் சரிபாதி உரிமை உடையவள் தாய் என்பது கவனத்தில் கொள்ளப்படுவது இல்லை. அவளை ஆணின் குழந்தையை பெற்று வளர்க்கும் வெறும் கருப்பை எனமட்டுமே கருதி கையாள்கிறார்கள்.
அவளை மணம்புரிந்த மன்னனும் அவளை தனது முழுதான உடைமை, தனக்கேயான, தன் மானம் காத்துவைக்கப்படும் ஒரு பெட்டகம் எனக்கொள்கிறான். அதனால் எதிரி மன்னன் இவனை வெல்லும்போது இவனை இழிவு படுத்துவதற்கு இவன் மனைவியை இழிவு படுத்த வேண்டும் என நினைக்கிறான்.
ருக்மணியின் அண்ணன் தன் தங்கையை வைத்து அரசியல் செய்ய நினக்கிறான். ருக்குமணி பாமாவைப்போல் தன் துணிவால், மதி நுட்பத்தால், நல்லூழால், இந்த அரசியல் ஆட்டத்தில் அலைகழிக்கப்படாமல் தப்பித்துவிடுவாள் என நினைக்கிறேன். சில பெண்கள் இன்னும் சாமர்த்தியமாக அந்த ஆட்டத்தை தானும் எடுத்து விளையாடுகிறார்கள் - குந்தி, திரௌபதிபோல. ஒரு சிலர் வீறுகொண்டு எழுந்து இந்த அநீதியை தட்டிகேட்கிறார்கள் அம்பையைபோல. வெண்முரசு ஆண்களின் அகங்கார சூதாட்டத்தில் பெண்கள் சிறைபிடிக்கப்பட்டும் வீழ்த்தப்பட்டும் ஏமாற்றப்பட்டும் அலைகழிக்கப்படுவதை கூர்மையாக சொல்லிச் செல்கிறது, ஒருவேளை இதுதான் வெண்முரசுவின் நோக்கமோ என எண்ணத் தோன்றுகிறது.