Wednesday, July 22, 2015

வெண்முரசில் கனவுகள் - மகராஜன் அருணாச்சலம்

நண்பர்களே,


வெண்முரசில் தொன்மங்களை வெளிப்படுத்தப் பயன்படுத்தப்படும் உத்திகளில் இரண்டு முக்கியமானவை.

1. சூதர் பாடல்கள்
2. கனவுகள்

வெண்முரசு கனவுகளைப் பயன்படுத்தும் விதமே தனித்துவமானது. இதுவரையிலும் வந்த கனவுகள் அனைத்துமே அக்கதாபாத்திரங்களின் நனவிலி மனதின் தன்னிச்சையான வெளிப்பாடுகளே! இது வரையிலும் வந்திருக்கும் சில கனவுகளைப் பார்ப்போம்.


1. ஊர்வரையின் கனவு: முதற்கனலில் பீஷ்மர் வழக்கம்போல் அரண்மனையை விட்டு ஊர் சுற்றும் போது (அரண்மனையில் இருக்க விரும்பாமல், அவரது இருப்பை விரும்பாதவர்களால் என்று வாசிக்கவும்!!), வழியில் தங்கியிருக்கும் ஓர் ஊரின் தலைவரின் மகளே ஊர்வரை. அவள் கனவில் பீஷ்மரைத் தாக்க வரும் ஒரு காட்டுப் பன்றியிடமிருந்து அவரைக் காப்பாற்றுகிறாள். அந்த காட்டுப்பன்றி அவளைக் கண்டதாலேயே அவரைத் தாக்காமல் செல்கிறது. அதனால் அவரை திருமணம் செய்ய முன்வருகிறாள். பீஷ்மர் அவரின் சூழ்நிலையால் மறுத்துவிடுகிறார். அப்போதும் அவர், பெண்ணே உன்னை மணந்தால் நான் வாழ்வேன் என்பது உண்மை, ஆனால் என் விதியை என்றோ முடிவு செய்துவிட்டவன் நான், என்றே கூறுகிறார். உண்மையில் அவர் யாருக்கு இப்பதிலுரைக்கிறார்? ஏன் இந்த கனவு இங்கு உரைக்கப்பட வேண்டும்? கதைக்கும், ஊர்வரைக்கும் என்ன தொடர்பு? இதற்கெல்லாவற்றிற்கும் பதில் பிறிதொரு அத்தியாயத்தில் ஜெ தந்திருப்பார்.


2.சிகண்டியின் கனவு: சிகண்டி தன் பிறவி நோக்கம் வெல்லுமா எனறறிய சந்திக்கச் செல்லும் நாகசூதனிடம் தனக்கு வந்த ஒரு கனவைச் சொல்கிறான். அதில் அவன் ஒரு காட்டுப்பன்றியாக பீஷ்மரைக் கொல்லச் செல்கிறான். அவருடன் இருக்கும் ஒரு பெண்ணைக் கண்டு தயங்குகிறான். அப்பெண் அவன் தாய் அம்பை போல இருந்ததாகச் சொல்கிறான்.


ஊர்வரையின் கனவோடு ஒத்துப் போகும் கனவு இது. சிகண்டி இக்கனவிலிருந்து ஒன்றை அறிகிறான். தன் தாய் பீஷ்மரைக் கொல்லச் சொன்னது வஞ்சத்தால் அல்ல. அவர் மீது கொண்ட பெருங்காதலாலேயே! ஆம். பீஷ்மர் இயற்கைக்கு எதிராக, மானுடத்தின் ஆதார விசைகளுக்கு எதிராக ஓர் ஒறுத்தல் வாழ்வை வாழ்கிறார். அதனாலேயே சலிப்புற்று, எதிலும் பிடிப்பில்லாமல், கனிந்த விளாங்கனி ஓட்டுக்குள் என இருக்கிறார். ஓட்டிலிருந்து ஒட்டாத கனியை அறிந்தவள் அம்பை ஒருத்தியே. அவள் முன் தன் ஓடை ஓர் இரும்புக் கோட்டையாக மாற்ற முயன்று பரிதாபமாகத் தோற்கிறார் பீஷ்மர்.


அவரை அவரதுகூட்டுக்குள்ளிருந்து விடுவிக்க நினைத்தவள் அம்பை. அவளை அவ்வாறுஎண்ண வைத்தது அவள் அவர் மேல் கொண்டிருந்த பெருங்காதல். அன்பாலும், இனிய வாழ்வாலும் அவரை வெளிக்கொணர அவள் செய்த முயற்சிகள் வியர்த்தனமானதாலேயே, அவரை மரணிப்பதன் மூலமாகவாவது விடுதலை அளிக்க எண்ணுகிறாள் அவள். ஆம், அவள் பீஷ்மரைக் கொல்ல வேண்டும் என சிகண்டிக்கு உத்தரவிடுவது அவர் மீது கொண்ட குரோதத்தாலோ, வெறுப்பாலோ அல்ல. அவர் மீதுகொண்டிருந்த மாளாப் பெருங்காதலே அவளை அம்முடிவை நோக்கித்தள்ளியது. அதையே அக்கனவுகள் பீஷ்மருக்கும், சிகண்டிக்கும் உணர வைக்கின்றன. அதற்குப் பிறகு சிகண்டி பீஷ்மரை வெறுப்பதில்லை. அவரைக் கொல்ல வேண்டும் என்பது அவனளவில் ஓர் செயல் மட்டுமே. அச்செயலில் எந்த விழைவையும் அவன் கலப்பதில்லை. அதனாலேயே அவனால் அச்செயலை வெற்றிகரமாக முடிக்க இயல்கிறது.


3. குந்தியின் கனவு: வண்ணக்கடலின் துவக்கத்தில்வருகிறது இக்கனவு. ஒருவகையில் இது ஒரு அகவெளிச் சலனம்(hallucination) என்று கூடச் சொல்லலாம். சதசிருங்கத்திலிருந்து குந்தி தன் ஐந்து புதல்வர்களோடும், தன் அணுக்கத்தினரோடும் அஸ்தினபுரிக்கு வரும் வழியில் ஒரு அதிகாலையில், ஓர் ஆற்றின் கரையில் நிகழ்கிறது இது. அவள் முன் பேருருவம் கொண்டு எழுந்து வருகிறான் கார்க்கோடகன். கர்ணனைப் பற்றிய அக்கனவு நம் வாசகர்கள் அனைவருக்கும் பரிச்சயமான ஒன்று. அதிலும் சில அசாத்திய இணைவுகளை நிகழ்த்தியிருப்பார் ஜெ.


குந்திக்கு கர்ணன் இருக்குமிடம் தெரியும். பாண்டு உயிருடனிருக்கும் போதே அவன் ஒற்றர்களை ஏவி விட்டு தேடச் சொல்கிறான். ஆனால் அவள் அவனது இருப்பையே மறக்க வேண்டும் என நினைக்கிறாள். அது அவளது இடத்தை அஸ்தினபுரியில் நிலைநாட்டிக் கொள்ள அவள் மனது ஆடும் ஆட்டம். மிக நுட்பமான உளவியல் நாடகம் அது. தான் மிக விரும்பிப் பெற்ற ஒரு மகனை மறந்தாக வேண்டும், அதே சமயத்தில் அவளுக்கு எந்த குற்ற உணர்வும் எஞ்சலாகாது. அவனைப் பற்றிய தகவல்களை தன் நனவிலியில் மறைக்க, அவள் அந்த நனவிலியுடன் நடத்தும் நாடகமே அக்கனவு. அதே போன்று அவள் அக்கனவின் இறுதியில் அவனை மறந்தும் விடுகிறாள்.


இக்கனவு நிகழுமிடத்தைக் கவனியுங்கள். அது ஓர் ஆற்றின் கரை. நம் நனவிலி நாம் எண்ணிப் பார்க்க இயலாத வேகத்தில் பாய்ந்தொழுகும் ஆறு என்றே உருவகப் படுத்தப்படுகிறது. அந்த ஆற்றின் கரையிலேயே அவள் கார்க்கோடகனைச் சந்திக்கிறாள்.


ஏன் கார்க்கோடகன்? மழைப்பாடலில் கர்ணனைக் கருவுற்றிருக்கும் குந்தி அவனை கருவழிக்க நினைக்கிறாள். அதற்கு வரும் ஓர் முதிய மருத்துவச்சி ஓர் பெரிய ராஜ நாகம் தீண்டி இறக்கிறாள். அவள் தோழி அனகை அந்த நாகம் அவளை நெடுநேரமாக பின்தொடர்ந்து வந்து கொண்டிருந்தது என்று கூறுவாள். அன்றிலிருந்து கர்ணன் பிறப்பு வரை அந்த நாகம் அவளுடன் இருக்கும். எனவே கர்ணன் என்னும் போது இயல்பாகவே நாகமாக அவளது ஆழ்மனம் வெளிப்படுகிறது.


4. துரியனின் கனவு: குந்தியின் கனவு வந்த அடுத்த அத்தியாயத்திலேயே இள வயது துரியோதனனின் கனவு வருகிறது. தன் தனிமையில் சலிப்புற்று, உச்சகட்ட எரிச்சலில் தன் தம்பியரை போட்டு அடிக்கிறான் துரியன். இந்த இடத்தில் வெண்முரசில் அதிகம் பேசியிராத துச்சாதனின் ஒரு முகம் வெளிப்படும். தன் தம்பியருக்கும், அண்ணனுக்கும் இடையில் தானாகவே சென்று விழுவான் அவன். அதன் மூலம் தன் தம்பியரின் மீது விழும் அனைத்து அடிகளையும் அவனே தாங்கிக் கொள்வான். துச்சாதனன் அண்ணன் மீது மட்டுமல்ல, தன் தம்பியரின் மீதும் அதே அளவு பிரியம் வைத்திருப்பவன். 


அவ்வாறு அடித்த பிறகு அவன் தூங்கி விடுகிறான். துயில் எழும் அவன் முன் அடி வாங்கி காயமுற்று தூங்கிக் கொண்டிருக்கும் அவன் தம்பியரைப் பார்க்கிறான். ஆதூரம் மேலெழ கிளம்பி தன்  ரதத்தில் ஏறி மேற்கு கரை ஏரிக்கு செல்கிறான். அந்த பின்னரவில், நிலவெழுந்த ஏரியில் துரியன் கனவெழுந்து வருகிறான் கார்க்கோடகன். அவன் தான் துரியனுக்கு நிறைவைத் தருபவனாக வரப் போகிறவனை, அவன் முழு முதல் எதிரியை அவனுக்குக் காட்டுகிறான். அதன் பிறகே துரியன் தன் நிலையின்மை நீங்கப் பெறுகிறான். இக்கனவும் ஒருவித அகவெளிச் சலனம் தான். நாகம்  என்பது துரியன் பிறப்போடு இணைந்த படிமம். எனவே அவன் ஆழ்மனமும் ஓர் நாகமாகவே தோன்றுகிறது. இதே நாகத்தைத் தான் அவன் தன் கொடியாகக் கொள்கிறான். இதே நாகம் தொடர்பான ஒற்றுமை தான் அவனை கர்ணனுடன் மாறா நட்பு கொள்ளச் செய்கிறது. (இங்கே கனவுடன் தொடர்பில்லாத ஒரு குறிப்பு - கர்ணனின் கொடி: யானைச் சங்கிலி. என்ன ஒரு இயல்பான கொடித் தேர்வு!! ஆம். கர்ணன் என்னும் யானை ஒரு மிகச் சிறிய, எளிதில் உடைத்துத் தெறிக்கக் கூடிய ஆனால் யானையால் உடைக்க இயலாத சங்கிலியால் தானே வாழ்நாள் முழுவதும் கட்டுண்டிருக்கப் போகிறது!!  மற்றொரு வகையில் துரியன் என்னும் யானையைக் கட்டுறுத்தும் சங்கிலி என்றும் கூட கொள்ளலாம்)


5. பாமாவின் கனவு: இந்திரநீலம் முழுவதும் கனவுகள் ஒரு உத்தியாகவே வருகிறது. முழு துவாரகையையும் பாமா கனவில் கண்டு விடுகிறாள். ஒரு வித 'தேஜாவூ' தான் அவளுக்கு உண்மையில் துவாரகை செல்லும் போது நிகழ்கிறது.


ஆனால் நான் மிகவும் வியந்தது, அவளின் கிருஷ்ணனுக்கு அமுது அளிக்கப் போகும் அந்த ஏழு அடிகளில் வரும் சப்த கன்னியரின் கனவே. அக்கனவுகள் வாயிலாகவே பாமா தன் சுய அகங்காரத்தைக் கிழித்து தன்னை முழுவதுமாக அவனுக்கு அர்ப்பணிக்கிறாள். அதில் வரும் முதல் கன்னிக்கு அவள் அளிக்கும் பதில் மிக நுட்பமானது. அதன் மூலம் அவனுக்கு ஒரு தாயாக அவள் இருப்பாள் என்றே துவங்குகிறாள். ஆம். அவள் என்றுமே தன்னை ஒரு பேரன்னையாகவே கருதி வருபவள் தானே. அவளின் அன்னை என்ற மெய்ப்பாடின் வழியாகவே அவளுக்குள் அவன் மீதான பெருங்காதல் நிறைகிறது. அந்த மெய்ப்பாடே அவளை அவனை என்றுமே கட்டுப்படுத்தி வைக்கச் சொல்கிறது. நன்றாகப் பார்த்தால் கிருஷ்ணன் என்றுமே தவறைக் கண்டிக்கும் கோபமான தாய் முன் தலைகுனிந்து சமாளிக்கும் ஒரு குழந்தையாகவே அவள் முன் எப்போதும் இருப்பான்.


6. சிசுபாலனின் கனவு : இதே சப்த கன்னியரும் சிசுபாலனோடு உரையாடும் அந்த அகவெளிச் சலனமும் மிக முக்கியமானது. ஒரு விதத்தில் நமது ஒட்டுமொத்த ஞான மரபையே சுட்டி நிற்பது. ஒரு கன்னியில் காதலை நிறைத்த அதே சப்த மாதாக்களும் இங்கே மானுடம் கொள்ளச் சாத்தியமான அனைத்து எதிர்குணங்களையும் சிசுபாலனின் முற்பிறவிகளாகக் காட்டுகின்றனர். கூடவே சிசுபாலன் என்று ஆகி வந்த தொன்மத்தையும் கூறுகின்றனர். இதன் மூலம் காட்டப்படும் ஒன்று உண்டு. எதிர்குணங்கள் அவை எதிரானவை என்பதாலேயே நிறைவை அடையத் தடையாய் இருப்பதில்லை. எதிர்நிலைகளில் உன்னதத்தை அடைந்தவரும் முக்தியைத் தான் அடைவர். சுவாமி விவேகானந்தர் சொல்வது போல, "நல்லவனாக இருந்தால் மகத்தான நல்லவனாக இருங்கள். தீயவனாக இருந்தால் மகத்தான தீயவனாக இருங்கள்" என்பது நம் மரபு நமக்களித்தது. எதையும் வெறுக்கவில்லை நாம். எனக்குத் தெரிந்து உலகின் வேறு எந்த மரபும் இந்த முழுமையைத் தன்னகத்தே கொண்டிருப்பதில்லை.


இவை தவிர அம்பைக்கு வரும் அந்த மூன்று தேவியரின் கனவுகள், பீஷ்மருக்கு வரும் அவரது இறந்து போன தமையர்களைப் பற்றிய கனவுகள் போன்றவையும் குறிப்பிடத் தக்கவையே. மொத்தத்தில் வெண்முரசின் கனவுகள் அந்த அந்த கதாபாத்திரங்களின் ஆழ்மன இச்சைகளோ, அவற்றின் நிறைவேறாத ஆசைகளோ அல்ல. மாறாக அவை அந்த கதாபாத்திரங்களின் நிலையை அவர்களுக்கே உணர்த்தும் விதமாகவோ, அவற்றின் வாழ்வைத் தீர்மானிக்கும் ஓர் முடிவைத் தெளிவாக எடுக்க   உதவும் விதமாகவோ மட்டுமே உபயோகப்படுத்தப் பட்டிருக்கும். மட்டுமல்லாது அக்கனவுகளில் நிகழ்பவை அனைத்தும் பெரும்பாலும் ஏதாவதொரு வகையில் அக்கதாபாத்திரங்களோடு தொடர்புடையதாகவோ இருக்கும். நன்றி.


அன்புடன்,
மகராஜன் அருணாச்சலம்