Monday, July 20, 2015

கிருஷ்ணனின் தோல்வி


சென்ற சென்னை வாசகர் சந்திப்பில் இந்திர நீலம் மையக் கதையோடு  எவ்வாறு இணையப் போகிறது என்பது இன்னும் தெளிவாகவில்லை என்று பேசிக் கொண்டிருந்தோம். இதோ கடந்த இரு அத்தியாயங்களில் அதற்கான விடையை ஜெ அளித்து விட்டார் என்றே கருதுகிறேன்.

பாரதத்தின் மிக முக்கியமான முரண் குருஷேத்ர யுத்தத்தில் கிருஷ்ணன் பாண்டவர் பக்கமும், துவாரகை (அதன் படைகள்) துரியன் பக்கமும் நின்றமை. இதற்கு கிருஷ்ணனை மையமாக வைத்து  அவன் யாரை முதலில் பார்த்தான், யார் முதலில் வந்தது என்ற கேள்வியை முன் வைத்து, கிருஷ்ணன் தான் ஒரு புறமும், துவாரகையின் படைகள் மறுபுறமும் பிரித்ததாகவும், அர்ஜுனன் கிருஷ்ணனைத் துணை கொண்டதாகவும் கதை உள்ளது. ஆனால் யதார்த்தத்தில் ஒரு மன்னனை அவனது படைகளே எதிர்க்குமா என்பது மிக மிக முரணானது. மேலும் அப்போரில் பலராமர் கலந்து கொள்ளாமல் நடுநிலை வகித்திருப்பது இன்னும் முரண்.

உண்மையில் யாதவர்களுக்கிடையே கிருஷ்ணனின் மீது வெளிச்சொல்லவியலாத ஓர் ஒவ்வாமை உருவாகி இருந்திருப்பதையே அது காட்டுகிறது என்று நினைக்கிறேன். எனவே தான் கிருஷ்ணன் குலக் குழுக்களின் முடிவை எதிர்க்காமல் தான் மட்டும் தனியாக பாண்டவர் பக்கம் வருகிறார். முழுப்படையையும் அவர் துரியன் வசம் கொடுத்திருந்தால், அவ்வாணையை அவர் விடுத்திருந்தால் சாத்யகி பாண்டவர் பக்கம் வந்திருக்க மாட்டான். யாதவ குல அந்தம் சாத்யகிக்கும், கிருதவர்மனுக்குமான பூசலில் தானே ஆரம்பம்!! கிருஷ்ணனை எதிர்க்க விரும்பாமல், அதே சமயம் தன் சொந்த குடியை போரில் சந்திக்காமலும் இருக்கும் பொருட்டே பலராமர் நடுநிலை வகித்திருக்கக் கூடும்.

அத்தகைய நிலை வருவதற்கான முதற் கனல் இன்று அவன் அரசவையில் நடைபெற்று விட்டது.துரைவேல் அவர்கள் சொன்னது  போல் திருஷ்டதுய்மன் தன் எல்லையை மீறி விட்டான். சியமந்தகம் தொடர்பான  பூசல்கள் யாதவர்களின் உட்பூசல். அதில் திருஷ்டதுய்மனை நுழைத்தது பெருந்தவறு. அத்தவறைச் செய்தது பாமா!! கிருஷ்ணன் கிளம்பும் போது, மிகத்தெளிவாக சொல்கிறான், "மன்று சூழ்ந்து அரசியல் தேற அக்ரூரர். படை கொண்டு வெல்ல கிருதவர்மன், துவாரகையைக் காக்க - சாத்யகி." திருஷ்டதுய்மனிடம், அவன் அங்கேயே இருந்து சாத்யகியை துணைக்கும் படியும் அவனது சொல்லுக்கும் வாளுக்கும் உரிய  வேலை வரக்கூடும் எனவும் தான் சொல்கிறான். அதாவது சாத்யகியையும், திருஷ்டதுய்மனையும் துவாரகையிலேயே இருக்கும் படித் தான் சொல்கிறான். அவன் சொன்னது போல நடந்திருந்தால் கிருதவர்மன் சததன்வாவைக் கொன்று சியமந்தகத்தைக் கொண்டு வந்திருப்பான். இவ்வளவு பெரிதாக பிரச்சனை வந்திருக்காது.

ஆனால் பாமா அவசரப்படுகிறாள். இவர்கள் யாரையும் நம்பாமல் திருஷ்டதுய்மனை நம்புகிறாள். அவனைப் பொறுப்பானவன் ஆக்குகிறாள். அவன் அவனுக்குத் தெரிந்த விதத்தில் நடந்து கொண்டான். இன்று ஒட்டுமொத்த அவையிலும் அவன் தனியனாக, மிகத் தெளிவாக அவன் இழைத்தது அநீதி என்று முகத்திற்கு நேரே கூறப்பட்டவனாக, எந்த தனிமையில் இருந்து வந்தானோ, அதே தனிமையில் அமர்ந்திருக்கிறான்.

இன்றே யாதவ குடிகளை இணைத்துக் கட்டி கிருஷ்ணனின் போட்ட முடிச்சில் சிறு நெகிழ்வு நேர்ந்து விட்டது. இச்சிறு நெகிழ்வு மொத்தமாக அவிழ்ந்து மீண்டும் குழுக்களாக அவர்களை மாற்றப் போகிறது. இங்கே அனைத்தையும் உணர்ந்து, அதனால் விளையப்போகும் எவ்வித பாதிப்பையும் சிந்திக்காமல், எப்போதும் போல் இயல்பாக இருக்கிறான் கிருஷ்ணன். அதுவே அவனை அனைவரிடமிருந்தும் வேறுபடுத்தும் அம்சம். நாம் என்றுமே கற்றுக் கொள்ள மறுக்கும் அம்சம். அதுவே அவனை நம்முன் கடவுளாக்கிய அம்சம். அதுவே விதி என்பதை நாம் ஏற்றுக் கொண்டேயாக வேண்டும் என்று நமக்கு அறிவுறுத்தும் அம்சம்.

அன்புடன்,
மகராஜன் அருணாச்சலம்