சொந்த வீட்டில் இருப்பவர்களுக்கில்லாத ஒரு சுதந்திரம் வாடகை வீட்டில் இருப்பவர்களுக்கு இருக்கிறது. எப்போது வேண்டுமானாலும் வேறு வீட்டிற்கு குடி பெயர்ந்து சென்றுவிடலாம். செல்லும் வீடு பழையதாக இருந்தால் கூட நம்மை பொருத்தவரை அது புதிதுதானேன்? புது வீடு புது சூழல் புது நட்பு என அது ஒரு வகையில் உற்சாகம் தரும் ஒன்று. ஆனால் வீட்டைக் காலி செய்து போகும்போது ஒரு முறை திரும்பி நோக்கினால், அந்த வீடு கொண்ட வெறுமையை அது தன் குதூகலத்தை இழந்து வாடியிருப்பதை காணலாம். நாம் ஒவ்வொரு இடமாக சென்று பார்த்து வருவதை, பொருட்கள் எதுவும் விடுபட்டுள்ளதா என்பதற்கல்ல தன்னிடம் விடைபெற்றுக்கொள்ளவே என அவ்வீடு நினைத்துக்கொண்டிருக்கும். அவ்வீட்டிற்கு ஒரு முகமும் கண்களும் இருப்பதாக நாம் கற்பனை செய்தோமானல் அந்தக் கண்களில் கண்ணீர் ததும்பி இருப்பதை காணமுடியும்.
ஒரு செவுலித்தாய் ஒரு விதத்தில் தாயைவிட மகளுக்கு நெருங்கியவள். தாய்க்கு மற்ற பிள்ளைகள், கணவன் என கவனிப்பதற்கு மற்றவர்கள் இருக்கிறார்கள். செவுளித்தாய்க்கு அம்மகள் ஒருத்திதான் எல்லாம். கையில் தவழ்ந்தவள், பின்னர் கண்களில் அப்புறம் கருத்தில் தவழ்ந்து எப்போது அவளுக்கு குழந்தையாகவே இருப்பவள். அந்தத் தாயின் உலகம் அவளே என ஆகிவிடுவதால், அந்த மகள் அடுத்த சொல் என்ன சொல்வாள், அடுத்த அடி எங்கே வைப்பாள், அடுத்த செயல் என்ன செய்வாள் என எல்லாம் அறிந்தவளாய் இருப்பாள். ஆனால் ஒரு நாள் அம்மகள் அவளை விட்டு செல்ல வேண்டியிருக்கும். செல்லும் இடம் புதிதானதாக, அவளுக்கு பிடித்தமானதாக இருக்கும். அந்த பரவசத்துடன் அவள் அனைத்தும் மறந்து மறுபிறப்பென அடுத்த வாழ்வில் நுழையும்போது பிறந்த அகம் சென்ற பிறவியென தூரத்தில் சென்றுவிடும். அதனுடன் செவுலித்தாயுடனான உறவும் குழந்தைக்கால நிகழ்வாய் மனதின் ஓரத்தில் சென்றுவிடும். ஆனால் அந்தத் தாய், குடியிருந்தவர் காலி செய்த வீடு போல களையிழந்து வெறுமை கொண்டுவிடுகிறாள். அவளின் வாழ்வின் நோக்கம் முடிந்துவிட்டதைப்போல் இருக்கிறது. மகளின் நினைவுகளை, அவள் விட்டுச் சென்ற தடயங்களை தன் கைகளால், கண்களால், சிந்தையால் வருடி வருடி அந்தத் தாய் தன் வாழ்நாள் முழுதும் மீட்டெடுத்துக்கொண்டிருக்கிறாள்
அமிதையின் இந்த நிலையை வெண்முரசு அழகாக படம் பிடித்து காட்டுகிறது. அந்தத் தாயின் மனம் தயிர் கலயத்தைப்போல், ருக்மணி தன் துணைவனை அடையப்போகும் ஆனந்தம் ஒரு பகுதியாகவும், அவள் தன்னை விட்டு பிரியப்போவதன் துயரம் இன்னொரு பகுதியாகவும் கொண்ட கயிற்றால், கடையப்படுகிறது.
பணி நிமித்தம் என் மனைவி தூர நகர் ஒன்றில் சில ஆண்டுகள் இருக்க நேரிட்டதால் என் மகன்கள் இருவருக்கும் செவுலித்தாயாக இருக்கும் பேறு பெற்றவன் நான். குழந்தையை குளிப்பாட்டும், உண்வு தயாரித்து ஊட்டும், கதை சொல்லி தூங்க வைக்கும், இயற்கையின் கூறுகளை ஒவ்வொன்றாக அறிமுகப்படுத்தும் மகிழ்ச்சிகள் பல அடையப்பெற்றேன். உலகின் மிக இனிமையான வேலை, செவுலித்தாயாக இருப்பது என அறிந்துகொண்டேன்.
இப்போது என்மகன் பட்ட மேல் படிப்புக்காக இன்னும் சில நாட்களில்
அமெரிக்கா செல்ல இருக்கிறான். அதற்கான
எதிர்பார்ப்பும் பரவசமும் அவனுக்கிருப்பதை காண்கிறோம். அவனை
அறிவியல் என்ற வரனை மணந்துகொண்டு வேறுவீடு செல்லும் மகள் போல்
எனக்கு நினைக்கத்தோன்றுகிறது. இனி அவன் வீட்டிற்கு வருவது என்பது வெறும்
விடுமுறைக்காக என ஆகிவிடும். அவனுடைய அணுகும் முகவரி எனது வீட்டு
முகவரியாய் இனி இருக்காது.அவன் என்ன உண்கிறான், என்ன உடுக்கிறான், என்ன
செய்கிறான் என்பது பார்த்தறிவதாய் இல்லாமல் கேட்டறிவது என ஆகிவிடும். என்
கைவிரலை அழுந்தப் பற்றியிருந்த சிறு கை வளர்ந்து உறுதியடைந்து ஆனால்
இப்போது பிடி நழுவிசெல்கிறது...
என் மனதின் ஆழத்தில் நான் அமிதையை உணர்கிறேன். வெண்முரசின் இந்தப்பகுதி எனக்காக எழுதியதாய் உள்ளது.
தண்டபாணி துரைவேல்