Saturday, April 30, 2016

சீர்மை என்னும் சீரழிவு: (பன்னிரு படைக்களம் 30)நோய்க்குப் பிந்தைய அஸ்தினபுரி சீர்மையான ஓர் நகராக மாறியிருக்கிறது. ஒவ்வொன்றும் எப்படி இருக்க வேண்டுமோ அப்படி இருக்கிறது. ஒவ்வொரு சிறிய பிழைகளும் கண்டறியப்பட்டு களையப்படுகின்றன. பிழை செய்பவர்கள் தண்டிக்கப்படுகிறார்கள். எங்கும் சட்டத்தின் ஆட்சி. அமைதி தவழும் அழகான நகரம். முதன் முறையாக அஸ்தினபுரிக்குள் நுழையும் ஒருவன் தற்காலத்தின் ஞாயிற்றுக் கிழமையில் ஒரு ஐரோப்பிய நகரில் நுழைந்தால் அடையும் அனுபவத்தை அடைவான். எனக்கு அது உண்டு. நகரின் ஆழ்ந்த அமைதி முதலில் நமக்குள் ஏற்படுத்துவது அச்சத்தையே. நம்மையறியாமலேயே மெதுவாகவே உரையாடுவோம். தொலைகாட்சி சத்தங்கள் குறைக்கப்படும். குழந்தையின் குரல் கூட குறைந்தாக வேண்டுவதற்காகக் கண்டிக்கப்படும். நம்மையறியாமலேயே உள்ளம் விழிப்பு நிலையில் தான் இருக்கும், எப்போதும். சில நாட்களுக்குப் பிறகு நமக்கு அவை பழகிவிடும். இந்த ஒத்திசைவு என்பது நமக்கு நாமே விரும்பி இட்டுக் கொள்ளும் தளைகள்.

துரியனின் மாற்றம் தான் இதில் நமக்கேற்படும் உச்ச கட்ட அதிர்வு. அவனைப் பார்க்கச் செல்லும் அஸ்வத்தாமன், ஜெயத்ரதன் மற்றும் சிசுபாலன் மூவருமே அவ்வச்சத்தை உணர்கின்றனர். முதலில் அவர்கள் அந்த அறைக்குள் நுழையும் போதே அவர்களுக்கு அந்த அச்சம் ஆழ்மனதில் தோன்றியிருக்கும். நண்பர்களைப் பார்த்தவுடன் உச்ச கட்ட உற்சாகக் குரலில் எழுந்து வரும் துரியனையே அவர்கள் அதுவரை அறிந்திருந்தார்கள். முற்றிலும் மாறாக முகமன் கூடச் சொல்லாமல், ஆடாமல் அசையாமல் பார்வையை மட்டுமே அளித்த துரியன் அவர்களுக்குள் மட்டுமல்ல நமக்குள்ளும் தான் ஒரு அதிர்வைத் தருகிறான். துரியன் மொத்தமாகவே பேசுவதைக் குறைத்துவிட்டிருக்கிறான். கர்ணனே பேசுகிறான். அவனே முடிவுகளை அறிவிக்கிறான். அவனே உணர்வுகளையும் காட்டுகிறான்.
துரியன் மிகச் சீரான தாழ்ந்த குரலில் பேசுகிறான். பெரும் அதிகாரம் உள்ளவர்களின் தாழ்ந்த குரல் ஏற்படுத்தும் அச்சமும், அது கடத்தும், உணர்த்தும் பொருளும் உடனடியாக நிறைவேற்றப்படும் ஒரு கட்டளையாகவே அமைவதை என் அனுபவத்திலும் நான் உணர்ந்திருக்கிறேன். அத்தகைய குரலிடம் நாம் பூசலிட முடியாது, அதனுடன் நாம் மறுதலிக்க முடியாது, அதனுடன் நாம் விவாதிக்க முடியாது. நம்மால் முடிந்ததெல்லாம் ‘ஆம், அவ்வண்ணமே’ என்று சொல்வது மட்டும் தான். மீறிச் சொன்னால் ஒரேடியாகச் சென்று விட வேண்டியது தான்.

அந்த குரல் தான் விதுரரை வஞ்சம் கொள்ளச் செய்கிறது. இத்தனைக்கும் அவன் அவரிடம் சொன்னவை நான்கே சொற்கள். “இது என் ஆணை”, “செல்க” – முகத்துக்கு நேராக அமைச்சராக உங்கள் எண்ணம், உங்கள் ஆலோசனை அல்ல, என் சொற்கள், என் எண்ணம், என் விருப்பம் மட்டுமே இனி இங்கு செல்லும். இனி உங்கள் அறிவு தேவையில்லை என்பதே அந்தச் சொற்களின் முழுக் கனமும். விதுரரின் தன்னுணர்வு தோன்றிய நாள் தொட்டு அவருள் இருந்து வந்த அச்சம், அவருள் இருந்து வந்த சூதர் என்ற தாழ்வுணர்ச்சி அத்தருணத்தில் பொங்குகிறது. அதுவே வஞ்சமாகவும் திரிகிறது. இவ்வஞ்சம் நிச்சயம் துரியன் அழிய வேண்டும் என்று விரும்பும் வஞ்சமல்ல. ஆனால் துரியன் ஆணவம் புண்பட வேண்டும் என்று விழையும் வஞ்சம். விதுரனுக்கு இத்தகைய அவமானம் திருதாவின் மரணத்திற்குப் பிறகே நிகழும் என்று திருதா உறுதியுடன் இருந்தார். ஆனால் இப்போது அவர் இருக்கும் போதே அது நிகழ்கிறது. ஒரு வகையில் அவ்வாறு உறுதியுடன் இருந்த திருதா மறைந்து விட்டார் என்று கூட இந்நிகழ்வைப் பார்க்கலாம். இனி துரியனின் செய்கைகளை கேள்வி கேட்பதில் திருதாவின் பழைய அற உணர்வு அதே கூர்மையுடன் இருக்காது.

மீண்டும் வெண்முரசு உவமைகளில் உணர்வுகளைக் கடத்துகிறது. விதுரர் உள்ளே நுழைகையில் திறக்கும் கதவின் ஒலி வலிக்கூச்சல் போல் ஒலிக்கிறதாம். இந்நிகழ்வுகள் அனைத்தையும் ஒரு அந்தணரா, ஷத்ரியரா என்று முடிவாகாத ஒருவரின் மகனின் பார்வையில் சொன்ன விதத்தில் ஜெ ஒரு படைப்பாளியாக முத்திரை பதிக்கிறார்.

அன்புடன்,
அருணாச்சலம் மகராஜன்