வெண்முகில்
 நகரத்தில் பூரிசிரவஸ் காந்தாரியைப் பார்க்கச் செல்லும் ஒரு இடம் வரும். 
அப்போது கிருஷ்ணன் காந்தாரியின் மடி மீது காலைப் போட்டுக் கொண்டு குழல் 
இசைத்துக் கொண்டிருப்பான். அங்கே இருக்கும் அனைத்து மகளிரும் அதைக் கேட்டு 
மயங்கி போய் இருப்பர். முதலில் சற்று அசட்டையாகக் கேட்கத் துவங்கும் 
பூரிசிரவசுக்கு முதலில் வரும் எண்ணம் அவன் இத்தனை நேரமும் ஒரே ராகத்தைத் 
தான் இசைத்துக் கொண்டிருக்கிறான் என்பது தான். இதற்கா இவர்கள் இப்படி 
மயங்குகிறார்கள் என எண்ணிக் கொண்டிருக்கும் போதே அதில் இருக்கும் 
வேறுபாடுகள் தெரியத் துவங்குகின்றன. ராகத்திற்கு வெளியே இருந்து ரசிக்கும் 
வரை ஒரே போன்று தோன்றிய ஒன்று, அதனுள் செல்லச் செல்ல பிரம்மாண்டமாய் 
உருக்கொள்ளத் துவங்குகிறது. முன்பு இசைத்த பகுதிக்கும் தற்போது இசைக்கும் 
பகுதிக்குமான வேறுபாடு அதி பிரம்மாண்டமாய் அவனுக்குப் புரியத் 
துவங்குகிறது. ஒவ்வொரு சிறு மாற்றத்திற்காக காத்திருப்பதே காலம் என்று 
அறிகிறான் அவன். 
இது பிரபஞ்ச இயக்கம் முதல் 
மானுட மனதின் செயல்படு வழிகள் வரை பல தளங்களுக்கும் விரித்து எடுக்கத்தக்க 
ஒரு உருவகம். அதை நாம் கதைகளுக்கும் பொருத்திப் பார்க்கலாம். வெண்முரசு 
முழுவதும் அந்தந்த பகுதிகளுக்குப் பொருந்தி வரும் வகையில் சூதர் கதைகளும், 
புராணக் கதைகளும் வந்து கொண்டேயிருக்கின்றன. (இந்த புராணம் என்பது விளங்க 
இயலாத மன ஓட்டங்களை, மானுட நிகழ்வுகளை தலைமுறை தோறும் கடத்திச் 
செல்வதற்காகவே ஏற்பட்ட ஒன்று. ஒரு வகையில் விஸ்வகர்மனின் குழப்பம் போன்றதே 
இவற்றை முறையாகப் புரிந்து கொள்வதும். அத்தனை தெளிவாக அனைத்தும் 
இருக்கையிலும் விளங்கிக் கொள்ள கடினமாக இருப்பதே இவற்றின் வசீகரம். இதைப் 
பற்றி தனியாகவே எழுதலாம்)
ஒருவகையில் பெரும்பாலான
 புராண கதைகளின் மாந்தர்களை ஏதேனும் ஒரு வகையில் மகாபாரத மாந்தர்களாகக் காண
 இயலும். சில கதைகள் ஒன்றோ இரண்டோ பொருத்தங்களைக் கொண்டிருக்கும். சில 
அப்படியே பாரத்தத்தில் வருவது போன்றே இருக்கும். இன்றைய பன்னிருபடைக்களம் 
18 அப்படிப்பட்ட ஒன்றே. இங்கே சகஸ்ரகவாசன் கதை அப்படியே கர்ணனை 
நினைவூட்டுகிறதென்றால், நர நாராயணர்கள் நமது அர்ச்சுனனும், கிருஷ்ணனும் 
தானே. ஒரு வகையில் வெண்முரசின் தனித் தன்மைகளுள் இவ்வுத்தியும் ஒன்று 
எனலாம்.
அன்புடன்,
மகராஜன் அருணாச்சலம்