Tuesday, April 12, 2016

கதைகளுடன் போரிடுவது (பன்னிரு படைக்களம் 16)


கிருதி சலிப்புடன் “கதைகள்… கதைகளுடன் போரிடுவதைப்போல கடினமானது பிறிதொன்றில்லை” என்றான்.

 
ஆம்  உண்மையில் கிருதி மக்கள் எழுச்சியில் தோற்கடிக்கப்பட்டு நாடிழந்து வாடுவதற்கு பெரும் காரணமாக அமைவது இப்படி பெருகிய கதைகளால்தான். இது ஒரு எதிர் நாயகனின் கூற்றாக வெண்முரசில் வந்தாலும்,  ஒரு மிக முக்கியமான கருத்து இந்த வரியில் அடங்கியிருப்பதாக நான் கருதுகிறேன்.

   இந்த வரி இந்தக் கால கட்டத்திலும் எவ்வளவு பொருத்தமாக இருக்கிறது என சிந்தித்துப்பார்க்கிறேன்.  பொதுமக்கள் யாருக்கும் வெற்று தகவல் கேட்பதில் அல்லது அதைச் சொல்வதில் விருப்பமில்லை.  எல்லாவற்றிலும் ஒரு கதை இருக்க வேண்டும். அதனால்  தானறிந்த ஒற்றைவரியையும்  ஒரு கதையாக அலங்கரித்தே அதை சொல்கிறார்கள்.  அந்த ஒற்றை  வரியைத்தவிர மற்றவை அவர்களின் ஊகங்கள், எதிர்பார்ப்புகள், பயங்கள்.   அப்படி சேர்க்கப்பட்டதினால் தகவல்கள் பல சமயம் தேவையற்ற முக்கியத்துவத்தைப் பெறுகின்றன. சில சமயங்களில் திறனற்ற வெற்று ஆள் ஒரு நாயகனாக உருவெடுக்கிறான்.  ஒரு சாதாரண குற்றம் செய்த ஒரு தலைவன் சமூக விரோதி எனத்தூற்றப்படுகிறான். பலராலும் வணங்கப்பட்ட ஒரு மகான் கோமாளி என குறுகி நிற்கிறார். சிறு விபத்து ஒரு மதக்கலவரம் என விஸ்வரூபம் எடுக்கிறது. சென்ற தேர்தலில் பெரிய வெற்றிபெற்ற கட்சி தோற்று சிறுத்துப்போகிறது. மூட நம்பிக்கைகளை பெருகுகின்றன.  அதே நேரத்தில் இத்தகையக் கதைகளின் பரவலின் காரணமாக  பெரும் மக்கள்புரட்சிகளும் நடத்தப்பட்டிருக்கின்றன.    சமூகத்தில் பெரும் பாதிப்பு ஏற்படுத்தும் நிகழ்வுகளுக்கு காரணமாகவும் இருக்கின்றன. சமூகம் கட்டப்போகும் கதைகளின் காரணமாகவே பலர் ஒழுக்கத்துடன் வாழ்வதை நம் காண்கிறோம்.  இதைப்போன்ற கதைகளே சிலரை தற்கொலை வரை கொண்டுசெல்கின்றன. இப்படி தனிமனித வாழ்விலும்  இந்தக் கதைகள் ஆற்றும் பங்கு குறிப்பிடத்தக்கது. 

   இந்தக் கதைகளின் பலத்தை அறிந்த சிலர் தன்னுடைய குறுகிய அரசியல் நோக்கத்திற்காக இதைப்போன்ற கதைகளை தயாரித்து பரவ வைக்க முற்படுகின்றனர். அவர்கள் நல்லஅரசியல் தலைவ்ர்களின் மேல் அவதூறூ கதைகளைக்கட்டி, அவர்களின் வாழ்வின் சிறு சந்தேகங்களை ஊதிப்பெருக்கி அவர்களின் ஆளுமையை சிதைக்கப்பார்க்கிறார்கள். இவ்ர்களும் சமூக விரோதிகள் என்ற வகையில் அடங்குவார்கள் என்றே சொல்லவேண்டும்.  உண்மையை அறிந்த சிலர் எப்போதும் இச்சமூகத்தில் இருந்துகொண்டுதான் இருப்பார்கள். அவர்கள்மூலம் உண்மை வாழ்ந்துகொண்டிருக்கும். அவர்கள் மெல்ல மெல்ல இந்தக் கதைகளை களையெடுத்துக்கொண்டு இருப்பார்கள்.

   இப்படிப் பெருகும் கதைகளை எதிர்கொள்வது எப்படி என்பது எவருக்கும் தெரியவில்லை. அவையே சுவாரஸ்யம் குறைந்து தேய்ந்து அழிந்தால்தான் உண்டு. கொடும் வல்லரசுகளால்கூட இந்தக் கதைகள் பரவுவதை தடுக்கமுடிவதில்லை. நாம் நம் சலித்திருக்கும் வாழ்க்கையை இதைப்போன்ற கதைகளைக் கேட்பதின்மூலம், நம்புவதன்மூலம் போக்கிக்கொள்ள முயல்கிறோம். நமக்கு நேரிடையாக கேடு நிகழாதவரையில் இந்தக் கதைகளைப்பாற்றி அவற்றின் உண்மைத்தன்மையைப்பற்றி எவ்வித கவலையுமின்றி இருக்கிறோம். அவற்றை நாமும் இன்னும் சில வரிகளைக் கூட்டி பரப்பவும் செய்கிறோம். ஒரு அறிவுள்ளவனாக நாம் எந்தக் கதைகளையும் அவை எவ்வளவு பிடித்தமான தகவல்கள் போல் தெரிந்தாலும் ஆதாரம் இல்லாமல் நம்பக்கூடாது என்று உறுதிமேற்கொள்ளவேண்டும்.  ஒரு  பொய்மை இப்படி பரவும்போது தன்னால் முடிந்த அளவு எதிர்ப்பதும் அதை மக்களுக்கு வெளிப்படுத்துவதுவும் தன் கடமை என நாம்கொள்ள வேண்டும்.



தண்டபாணி துரைவேல்