Saturday, April 30, 2016

ஆடை அணிவதன் ஆபாசம் (பன்னிரு படைக்களம் - 32 )


     
பலர் முன்னிலையில் ஆடையின்றி இருத்தலை மிகப்பெரிய அவமானமாக கருதுகிறோம். ஒருவனை கொல்லுவதைவிட அவன் ஆடைகளையகற்றி பலர் முன்னிலையில்  நிற்கவைப்பதை பெரும் தண்டனையெனக் கருதுகிறோம். தன் நிர்வாணத்தையே சகித்துக்கொள்ளாத சிலர் இருக்கின்றனர். அவர்கள் தனித்து குளியலறையில் குளிக்கும்போதுகூட கொஞ்சமாவது ஆடைகளை அணிந்துகொள்வதுண்டு. காமம் சாராத போது மற்றவரின் நிர்வாணம் அருவருப்பைத்தருகிறது. அதைக் கணநேரம்கூட காணாது கண்கூசி முகம் திருப்பிக்கொள்கிறோம்.  ஒரு குழந்தையின் நிர்வாணத்தைக்கூட பொறுத்துகொள்ள முடியாத அளவுக்கு நாம் மனம் திரிந்துபோய் இருக்கிறோம். 
  ஆனால் ஆடை அணிவதுகூட சில சமயம் ஆபாசமென ஆவதுண்டு. ஒரு ஆண் பெண்போல 
உடை அணிந்து வருவதை நாம் ரசிப்பதில்லை. அது ஆபாசமெனத்தெரிகிறது.  ஒரு முறை திருநங்கை ஒருவரிடம் நீங்கள் ஏன் பெண்போல உடையணிந்து மற்றவரின் ஏளனத்திற்கு ஆளாகிறீர்கள், ஆண்களின் உடையை அணியக்கூடாதா எனக் கேட்கப்பட்டது. அதற்கு அவர் ஒரு ஆண்,  பெண்களின் உடையை அணிந்து சாலையில் நடக்கும்போது எப்படி கூசி குறுகிபோவானோ எப்படி ஆபாசமாக உணர்வானோ அதைப்போல நாங்கள் ஆண்களின் உடைகளை அணிந்தால் உணர்கிறோம் எனக் கூறினார். 
   
 ஆடைகள் ஆபாசமாவது அவரவர் கண்ணோட்டத்திற்கேற்ப அமைகிறது.  காந்தியின் உடையை ஆபாசம் என்று சொல்லிய வெளிநாட்டினர் உண்டு. ஆனால் அந்த உடையே அவரின் பெருமைகளில் ஒன்றென ஆகியது. வெறும் கோமணம் மட்டுமே அணிந்த இரமணரின் உருவம் பெரும் ஆன்மீக உந்துதலாக நிறையபேருக்கு இருக்கிறது. ஆடைகளேயற்ற திகம்பரர்கள் பல்லாயிரம் மக்களுக்கு ஆன்மீக வழிகாட்டிகளாக இருக்கிறார்கள். 
  நிர்வாணத்தை துறந்து  ஆடை அணிவது ஒருவரை ஆபாசமாக்குவதை ஒரு திரைப்படத்தில் வழியே நான் கண்டிருக்கிறேன். அது எமரால்டு ஃபாரஸ்டு என்ற ஆங்கிலத் திரைப்படம். அதில் கானகத்தில் ஒரு காட்டுவாசிகள் இனம் ஆடைகளின்றி வாழும். முதலில் சற்று நேரம் நமக்கு அதிர்ச்சியைக் கொடுத்தாலும் அந்த கானக மனிதர்களின் வாழ்வு முறை இனிய குணம், இயற்கையுடன் இணைந்துவாழும் பாங்கு ஆகியவற்றால் கவரப்பட்டு அது இயல்பென ஆகிவிடும். பின்னர் சிலரால் அந்த இனக்குழு தாக்கப்பட்டு பலர் கொல்லப்பட்டு அக்குழுவைச் சார்ந்த இளம்பெண்கள் கடத்தப்பட்டு கானகத்திற்கு வெளியே இருக்கும் நகரம் ஒன்றில் ஒரு பாலியல் விடுதியில் விற்கப்படுவர். அங்கு அவர்களுக்கு வலுக்கட்டாயமாக ஆடைகள் உடுத்தப்பட்டு கேளிக்கைபொருளாக ஆக்கப்படுவார்கள். அப்போது நாம் உணர்வோம் ஆடை எவ்வளவு ஆபாசமானது என்பதை. பின்னர் அந்த பெண்களின் இனத்தைச்சார்ந்த இளைஞன் அந்த விடுதியைத்தாக்கி அந்த பெண்களை காப்பாற்றி திரும்பவும் வனத்திற்கு அழைத்துசெல்வான்.  விடுவிக்கப்பட்ட அடுத்த நொடி அவர்கள் தங்களுக்கு அணிவிக்கப்பட்ட ஆடையை அவிழ்த்து எறிவார்கள். அவிழ்த்தெறிந்த ஆடைகளை அருவருப்பாக நோக்குவார்கள். ஆடை அணிவது ஆபாசமாவதை அன்று நான் கண்டேன்.  
    உண்மையில் ஆடை அணிவது மனித உடலை ஆபாசம் எனக் கருதவைக்கிறது.
ஆடைகளை கூட்டி குறைத்து காமஉணர்வை தேவைக்கு அதிகமாக தூண்ட காரணமாகிறது.   ஆடைகள் சில சமயம் மனிதருக்குள் சாதி மத ஏழை பணக்காரர் வேறு பாடுகளை கண்பிப்பதாக  உயர்வு தாழ்வை கற்பிக்கும் உபகரணங்கள் என  ஆகின்றன.  தன் பலஹீனமான தளர்ந்த வடிவ ஒழுங்கு குறைந்த உடலை மறைத்துக்கொண்டு போலியான  ஆளுமையை உருவாக்க ஆடைகள் பயன்படுத்தப்படுகின்றன. ஆடைகளின் காரணமாக மனிதன் தன் தோலின் உறுதியை இழந்துவிட்டான். உடல் மேல் ஒரு போர்வையென இருந்த முடிகளை இழந்துவிட்டான். தட்பவெப்பங்களின் தாக்குதலுக்கு எளிய இலக்கென மனிதன் ஆகிவிட்டான்.      விலங்குகளின் ஆடைகளற்ற உடல் எவ்வளவு இயற்கையாக இருக்கிறது. எந்த விலங்கையாவது அது ஆடையற்றிருப்பதற்காக அருவருக்கிறோமா?  ஒரு விலங்குக்கு ஆடைபோட்டால்  அது எப்படி அதை நீக்கிகொள்ளப் போராடுகிறது என்பதைப்பார்க்கலாம். 
    நிர்வாணத்தின் ஆபாசமின்மை இன்று  வெண்முரசில் காட்சிப்படுத்தப்படுகிறது.  வனத்தில் வாழ்ந்த கன்னியர்களின்மேல் நாட்டு மக்கள் தங்கள் ஆடைகளைப்போட்டு மூடுகிறார்கள். அத்துடன் தம்  சமூக விதிகளையும் அவர்கள் மேல் போட்டு அழுத்துகிறார்கள். வனத்தில் மெல்லிய பறவை இறகுகள் என மிதந்து பறந்துகொண்டிருந்த அந்த கன்னியர் குறுகிப்போகின்றனர்.  அக்கன்னியர் உடல் ஆபாசமென தெரிவதைப்போல களங்கமற்ற அவர்களின் திறந்த குணம் நேரடியான எண்ணங்களை வெளிப்படுத்துதல் நாட்டுமக்களுக்கு ஆபாசமென தெரிகிறது.  ஆனால் நாட்டு மக்கள் அவர்களை காமத்தை தூண்டும் வகையில்  நடக்கச்சொல்லி ஆபாசப்படுத்துகிறார்கள். 

“முதலில் தோள்களை குறுக்குங்கள் இளவரசி. தோள்நிமிர்வென்பது ஆண்மை. தோள்வளைதலே பெண்மை” என்று செவிலியர் அவர்களுக்கு கற்பித்தனர். “தோள்கள் வளைகையில் இடை ஒசியும். கை குழையும். விழிகள் சரியும். குரல் தழையும். நகைப்பு மென்மையாகும். ஓரவிழி கூர்கொள்ளும். சொற்கள் கொஞ்சும். ஆண்களின் நிமிர்வை எண்ணுகையில் உடல்தளரும். வியர்வை குளிர்ந்து முலை விம்மும். நேர்நின்று நோக்காது தலைகவிழ்ந்து காலொன்று தளர இடை ஒசிய முலைதழைய நின்றிருப்பீர்கள். மேலுதட்டில் மென்னீர் பூக்கும். விழியோரம் கசியும். அத்தருணத்தில் நீங்கள் பெண்ணென்று உணர்வீர்கள். அதுவே பேரின்பம் என்பது.” 

அவர்களின் களங்கமற்ற உள்ளங்களில் பெண்மை என்ற பெயரில் கள்ளத்தை புகுத்த முற்படுகின்றனர். ஒரு கனமான மூட்டையை  சுமந்திருப்பவன் குனிந்திருப்பதைப்போல்  நாட்டுமக்களின் சமூக நெறிகளின் மற்றும் வழக்கங்களின் சுமை தாங்காமல் அவர்க்ள் கூனி நிற்கின்றனர். மீண்டும் அவர்கள் கானகம் சென்றபின்னர் அந்த ஆடைகளோடு அந்த சமூக நெறிகளையும் அவிழ்த்தெறிந்து சுமைகளை களைந்து மீண்டும் தம் விடுதலையை அடைந்து நிமிர்கிறார்கள். 
நகரெல்லை கடந்து காட்டின் காற்றுபட்டபோதே அக்கன்னியரின் ஆடைகள் பறந்தகன்றன. பச்சைவெளிக்குள் அவர்கள் கூவிச்சிரித்தபடி துள்ளிப்பாய்ந்து மூழ்கிச்சென்றனர். சிலநாட்களில் அவர்களின் உடல்நலிவு முற்றிலும் அகன்றது. புதியவிதைபோல் உடல் ஒளிகொண்டது. காட்டுக்குள் அவர்களின் சிரிப்பு மலையோடை நீரொலியுடனும் கிள்ளைகளின் குரல்களுடனும் வாகைநெற்றுகளின் சிலம்பொலியுடனும் கலந்து நிறைந்தது.

என்ன சொன்னாலும் உடலை மூடும் ஆடைகளை நம்மால் இனி  துறக்கமுடியாது. ஆனால் நம் உள்ளத்தை மூடியிருக்கும் போலி கௌரவம், வீண் அகங்காரம், அசட்டுப்பிடிவாதம், நீடித்த வஞ்சம், தேவையற்ற கவலை,நிறைவேறாத ஆசை  போன்ற  ஆடைகளை களைந்துவிட்டு சிறு பிள்ளைகள் போல சிரித்து மகிழ இப்போதும் நம்மால் முடியும் அல்லவா?
தண்டபாணி துரைவேல்