இன்றைய அத்தியாயம் முழுதும் சமன்படுத்தப்பட்ட நாற்களத்தில் தொடங்குகிறது. அரசி எங்கும் நகரவியலாத சமனிலையில் பாரதவர்ஷத்தின் அரசியல் நிலைபெற்று நிற்கிறது. அதில் சிம்மம் இடபத்தை வெட்டினால் அரசி நகர இடம்கிடைப்பதை இளைய யாதவர் கண்டறிகிறார். அதாவது சிம்ம மாதத்தில் (ஆவணி) சிம்மமேறிய கொற்றவை இடப நன்னாளில் பிறந்த ஜராசந்தனை வீழ்த்த ராஜசூய யாகம் செய்யலாம் என்று இளைய யாதவர் சொல்கிறார். அஸ்தினபுரியின் நிமித்திகர் "சிம்மம் முன்னகரும்போதோ, எருது பின்னகரும்போதோ" போர்நிகழ வாய்ப்பிருப்பதாகச் சொன்னதை நினைவுகூரலாம். ஆனால் அந்நகர்வு நாற்களத்தில் சமனிலைக் குலைவுக்கு வழிவகுக்கும். பல்வேறு விசைகளால், இணைவு பிரிவுகளால் சமனிலை திரும்பவேண்டும்.
அந்தச் சமனிலை குருக்ஷேத்ரம்தானே? அவ்வாறுதானே அரசி பாரதவர்ஷத்தின் சக்கரவர்த்தினியாக அமையவியலும்? அதைத்தவிர வேறொரு சமனிலையை அரசி ஒப்பமாட்டாள் இல்லையா? அதைப்பற்றியே தௌம்யரும் பேசுகிறார். மகதத்தின் எருது அல்ல, அஸ்தினபுரியின் கலிவடிவனும் அவனைத் துணைக்கும் கதிர்மைந்தனுமே மறுதரப்பு என்கிறார். ஆனால் அரசி குருதியை விழையும்போது அவரால் என்ன செய்யவியலும்?