Thursday, April 21, 2016

அன்னையின் வேள்வி
எத்தனை வயதானால் என்ன? யார் மனதில் போர் என்ற எண்ணம் எழுகிறதோ அவர்கள் அனைவரும் சிறுவர்கள்தான். ராஜசூயவேள்விப்பொருட்டு எழும் போரில் திரௌபதியின் மனநிலையில் இருப்பவன் அபிமன்யு மட்டும்தான்.

அன்புள்ள ஜெ, அன்னை திரௌபதியின் மனநிலையை அபிமன்யுவின் மனநிலையில் பொருத்திய விதத்தில் மானிட மனங்களின் அகவிளையாடலை பெருவெளியில் உருவமாய் செதுக்கி வைக்கிறீர்கள்.போர் என்றதும் திரௌபதியின் குழந்தை உள்ளமும். அபிமன்யுவின் முதிர்ந்த உள்ளமும் வந்து ஒன்றை ஒன்று தழுவிக்கொண்டு ஆடுகிறது. 

களமாட விரும்பும் அன்னைகளின் அபார திறமையே மைந்தர்களை தன்னைப்போல் ஆக்கிவிடுவதுதான். அவர்களை கட்டுப்படுத்தவோ வெல்லவோ காலத்தை அன்றி மண்ணில் மனிதர்கள் இல்லை. எத்தனை பெரும் வில் வைத்திருந்தாலும்  பெரும் பயிற்சிப்பெற்ற போர்வீரனாக இருந்தாலும், இறைவனே நண்பனாக அமைந்தாலும் அவனால் மனைவியை வெல்லவும் அவளுக்கு சொல்லவும் முடியாது. மனைவியின் கையில் அவன் ஒரு படைக்கலம் மட்டும்தான். நுட்பத்தின் நுட்பான இடத்தில் அபிமன்யுவை பேசவிட்டு திரௌபதியை கொற்றவையாக்கி அர்ஜுனனை பீமனை படைக்கலமாக்கிவிட்டீர்கள்.

திரௌபதி கலைமகளுக்கு நிகரென சொல்கொண்டவள். அலைமகளுக்கு நிகரென பொருள் கொண்டவள், மலைமகளுக்கு நிகரென அருள் கொண்டவள் அவள் சிங்கத்தின் மீதேறி விளையாடும் கொற்றவை யாக்குவது அவளின் குழந்தைமையும் புன்னகையும்தான். மானிடன் பெரும் நிகழ்விற்கு பெரும் செயல்கள் காரணமாகிவிடுகின்றன என்று எண்ணுகின்றான். இல்லை, அவனின் சிறு செயல்களே பெரும் களங்களை உருவாக்கி அவனை மாட்டிவைத்து ஆடி சொல்கின்றன.

ராஜசூயவேள்வி வேண்டாம் அதனால் ஏற்படும் போரால் என்ன நிலை உருவாகும் என்பதை அறிந்து இருக்கும் பீமன், சட்டென்று துரியோதனுக்காக இந்த போர் நடக்கட்டும் என்று எழுவதுதான் மானிட அகத்தின் வலிமையின் மென்மை. மனிதன் எத்தனை பலவீனமானவன். துரியனும் பீமனும் எத்தனை பெரிய நண்பர்கள் அதை எல்லாம் மறக்கடிக்கிறது துரியன் செய்த ஒற்றை தீச்செயல்.  வாரணவத தீவிபத்து. வஞ்சம்போல் கனத்தில் பற்றிக்கொள்ளும் தீ உலகில் எதுவும் இல்லை. வஞ்சத்தைப்பற்றவைக்க எதுவும்தேவை இல்லை. கொஞ்சம் வஞ்சம் இருந்தால்கூட போதும் மொத்த உலகமும் எரிந்து சாம்பலாகிவிடும். அர்ஜுனன் போன்ற  வில் எடுத்தவர்கள் வில்லாக மட்டும் பார்க்கப்படுகிறார்களே தவிர மனிதர்கள் ஆவதில்லை இதுதான் கலாவதி கதையில் காகங்கள் எழுப்பும் ஏன்? என்ற சொல்லின் பொருளா?

நேராகவோ மறைமுகமாகவோ போர் அவர்களின் நேரடியான எதிரிகளை தாக்குவதில்லை. விதியை ஒளியை தாக்குகிறது. விதியை தாக்குவதால் உயிரழிகிறது. ஒளியை தாக்குவதால் சுயம் அழிகிறது. தௌமியர் இதை இங்கு அழகாக சொல்கிறார். ஆனால் புரிந்துக்கொள்ளவேண்டியவர்கள் புரிந்துக்கொள்வதில்லை.

//தௌம்யர் “நான் உணர்வதை சொல்லிவிடுகிறேன் அரசே. இவ்வேள்வி நன்றுக்கு அல்ல. அதை என் நெஞ்சு ஆழ்ந்துரைக்கிறது. மகதத்தின் ஜராசந்தன் அல்ல இங்கு மறுதரப்பு. அது அஸ்தினபுரியின் கலிவடிவனும் அவனுடன் இணைந்து நிற்கும் கதிர்மைந்தனும் மட்டுமே. பேரழிவை நோக்கி செல்லவிருக்கிறது அனைத்தும். பேரழிவு. பிறிதொன்றுமில்லை” என்றார்//

மகாத்மா காந்தி நேரடியாக இந்த அற்புதங்களை மெய்மையில் கண்டுதான் போரை வெறுத்து அகிம்சையை உலகுக்கு வழங்கினாரா?  அகிம்சை என்பது தனக்கு எதிராக தன்னையே வைத்து பலிக்கொள்வது.

ராமராஜன் மாணிக்கவேல்