Monday, April 25, 2016

யாருடைய முடி:


என்றென்றைக்கும் இருக்கப்போகும் அணுவிடைக் குறை முழுமையின்மை குந்திக்கு இந்த ராஜசூய யாகத்தின் நிறைவிலும் இருக்கத்தான் போகிறது. குந்தி இயல்பாகவே செயலூக்கம் மிகுந்தவள் அல்ல. அவளின் ஊக்கம் நிறைந்த செயல்கள் அனைத்துமே யாருக்காகவோ அவள் நிகழ்த்தும் எதிர்வினைகள் தான். 

மழைப்பாடலில் குந்திக்கும், மார்த்திகாவதி அரசி தேவவதிக்கும் இடையே நடக்கும் கண்ணுக்குத் தெரியாத பலப் போராட்டத்தின் காரணத்தை நேற்றைய பன்னிருபடைக்களம் தந்திருக்கிறது. அவள் குந்தி போஜனின் மகளாக, அவள் தந்தையின் மன்றாடலையும் மீறிச் செல்ல அந்தக் கணத்தில், அவளின் முக்கியத்துவத்தை உணராத, அவளை ஒரு பொருட்டாகவே மதிக்காத தேவவதியின் செயல்களே காரணம். கண நேரத்தில் அக ஆழத்தில் இருந்து எடுத்த முடிவு. அவள் அஸ்தினபுரி வரும் வரைக்கும் அவள் தேவவதி முன் தன் இடத்தை நிறுவிக்கொண்டேயிருக்கிறாள்.


பாண்டுவிடம் கர்ணனைப் பற்றிக் கூறாததற்கும், அக்கணத்தில் தன் மீதான மரியாதையை பாண்டு இழந்துவிடுவானோ என்ற அச்சமே காரணம். மீண்டும் அஸ்தினபுரியில் தன்னை அவமதிக்கும் காந்தாரியரிடத்து தன் முக்கியத்துவத்தை, மரியாதையை நிலைநாட்டுபவையாகவே அவள் செயல்கள் அமைகின்றன. அவள் கர்ணனை ஒரேயடியாகக் கைவிடும் முடிவை எடுப்பதும் அஸ்தினபுரியில் அவள் மரியாதையை நிலைநாட்டவே. அவள் அந்த சௌவீர மணிமுடியை அணிந்ததும் அவள் முக்கியத்துவத்தை, அவள் இடத்தை நிலைநாட்டவே. இவ்வளவு ஏன், தன் வளர்ப்புத் தந்தை குந்திபோஜனை அவரின் மரணத்தருவாயில் கூட ராஜமாதாவாகத் தான் சென்று பார்ப்பேன் என திடமாக முடிவெடுக்கிறாள் அவள்.


அப்படிப்பட்ட பிருதை இந்திரபிரஸ்தத்தில் எப்படி இருக்கிறாள்? சுருக்கமாக நம் இந்திய ஜனாதிபதி போல இருக்கிறாள். முக்கியத்துவம் இருக்கிறது, முடிவெடுக்கும் அதிகாரமின்றி. அதனால் தான் தன் மருகனிடம் நான் இங்கிருந்து ஆற்ற வேண்டியவை ஒன்றும் இல்லை என விசனப்படுகிறாள். அவளின் முக்கியத்துவம் அறிந்து அவளுக்கான இடத்தை அளித்திருக்கக் கூடியவன் கர்ணன் ஒருவனே. அவன் சத்ராஜித் ஆவான் என்று தான் அவனைக் கருக்கொண்ட போதும், முலையூட்டும் போதும் அவள் எண்ணியிருந்தாள். அவன் சத்ராஜித் ஆகியிருந்தால் அவனைப் பணியும் இந்திரபிரஸ்தத்தின் அரசியின் மணிமுடியையே அவள் ஆழ்மனம் வேட்டது. அதனாலேயே உடனடியாகவே அதன் சிறுமை அவளைத் தாக்குகிறது.
அன்புடன்,
மகராஜன் அருணாச்சலம்.