Monday, April 11, 2016

தில்லைமாகாளி



அன்புள்ள திரு.ஜெ வணக்கம்.

நலம். நலமறிய ஆவல்.
தூரத்தில் இருந்தும் மிக நெருக்கமாக இருக்கின்றீர்கள். அந்த நெருக்கத்தை நெருங்க நினைத்தபோதுதான் தூரம் அறிந்தேன். ஜனவரி 11, 2016 ஊருக்கு வந்து ஏப்ரல் 05, 2016 சௌதிக்கு வந்துவிட்டேன். இந்த விடுமுறையில் உங்களை சந்திக்கவேண்டும் என்ற ஆவல் ஆவலாகவே இருக்கும்படி ஆகிவிட்டது.

சௌதியில் இருக்கும்போது இந்தியா சிறுகடுகுபோல் தோன்றுகின்றது, எந்த இடத்தையும் தாண்டிவிடலாம் என்று நினைக்கிறேன் ஆனால் ஊருக்கு வந்தபின்பு வீட்டின் தெருவாசலுக்கும் உள்வாசலுக்கும் இடையே பெரும் உலகத்தைக்காண்கின்றேன். தூரத்தைக்கண்டு வியக்கிறேன். இன்னும் காலத்தைப்பயன்படுத்தி  பயணிக்க தெரியவில்லை.

நெல் அறுவடை, பயிறு உளுந்து விதைப்பு, உறவு. நட்பு சுற்றம் தொடர் திருமணம். அம்மாவின் அம்மா மரணம். சுற்றங்களின் நலம் விசாரிப்பு என்று நகர்ந்தன நாட்கள்.

மகாசிவராத்ரி அன்னை சிவகாமசுந்தரி சமேத நடராஜபெருமான் தரிசனம். கீழகோபுர வாசல் நாட்டியாஞ்சலி கூட்டத்தில் எங்காவது ஜெயமோகன் இருப்பாரா என்று கண்கள் தேடியது அன்னிச்சை.

கடந்த ஞாயிறு 4.30-6.00 ராகுகால தில்லை மாகாளி தரிசனம். நான்கு முகம் கொண்ட பிர்மசாமுண்டீஸ்வரியாகிய தில்லை அம்மனை தரிசித்து விட்டு தில்லை மாகாளியை தரிசித்தேன். அன்னையின் நயனங்கள் காணக்கிடைத்தது பாக்கியம். காதோரம் ஒடியவிழிகள். மாக ரௌத்ரத்தில் விழிகள் மலராய் மலருமா? மலர்ந்து இருந்தது. எங்கும் அன்னையர் கூட்டம். அன்னையே அன்னைகளாய் உலவிக்கொண்டு தன்னை, தானே வணங்க தானே உயிபெற்று எழுந்து அன்னை அலையென அசைந்து ஆடிக்கொண்டு இருக்கிறாள். மாதுளம் பழம் உடைந்து மாதுளம் மணிகளாய் பரவியத்தோற்றம் அல்லது மாதுளம் மணிகள் எல்லாம் வந்து குவிந்து மாதுளம் பழமாகும் காலநேரம்.

நாயகி நான்முகி நாராயணி கைநளின பஞ்ச
சாயகி சாம்பவி சங்கரி சாமளை சாதி நச்சு
வாயகி மாலினி வாராகி சூலினி மாதங்கி என்று
ஆய கியாதி உடையாள் சரணம் அரண் நமக்கே. –அபிராமி அந்தாதிப்பாடலை வாய்விட்டுப்பாடியபோது ஆனந்தம்.

விநாயகர் முருகன் தில்லையம்மன் தில்லைமாகாளி என்று விளக்குப்போட்டுக்கொண்டு இருந்த ரெங்கம்மாள்மாணிக்கவேலை கூட்டத்தில் தேடி மீண்டும் கோயிலை வலம்வந்தேன். கோயிலில் உள்ளே தில்லைக்காளி கருவறைக்கு வெளியே வலப்புறம் சிறு மண்டபத்தில் வீரபெருமாள் வீற்றிருக்கிறார். அவரைப்பார்த்தப்படி இடப்புறம் ஐந்து நவகண்டவீரர்கள் கழுத்தில் வாள் வைத்து நிற்கிறார்கள். அவர்கள் தலையில் சின்ன சில்வர் தட்டில் குங்குமம்  நிறப்பி அதன்மீது எலுமிச்சைப்பழம் வைத்து உள்ளார்கள். அப்போது அருகில் ஜெயமோகன் வந்து செல்கிறார். எவ்வளவு தூரத்தில் இருந்தாலும் நெருக்கத்தில் இருக்கிறீர்கள் ஜெ.

மூன்றாவது சுற்றம் முடித்து வெளியில் வந்தபின்பு அருகில் வந்த ரெங்கம்மாள் “நான் உங்களைப்பார்த்துக்கொண்டுதான் இருந்தேன்” என்றாள்.

“நான் பாடிக்கொண்டு இருந்தேனே” என்றேன்.

பன்னிருப்படைக்கலம் தொடக்கம் அணிமுகப்பு அன்னையின் துதி. படித்து முடிக்கும்வரை அன்னை தில்லைக்காளியின் விழிமலர் முன் நின்றேன்.

நன்றி
அன்புடன்
ராமராஜன் மாணிக்கவேல்.