Wednesday, April 13, 2016

அகக்கோயிலின் இருள் மூலையிலிருந்து எழுந்துவரும் கொடுந்தெய்வம் (பன்னிரு படைக்களம் - 17)


      தெய்வம் என்பது ஒரு உச்சம். ஒருவர் அன்பின் உச்சத்தில் இருக்கும்போது அவரிடம் கருணைத்தெய்வம் எழுகிறது, ஒருவர் கலையில் உச்சத்தைக் காண்கையில் கலைத்தெவத்தை தரிசிக்கிறோம். நற்குணங்களின் உச்சத்தில் ஒருவர் இருக்கும்போது அக்குணத்திற்கான தெய்வம் அவருள் எழுந்தருள்கிறது.   இந்த நற்குணங்களுக்கான நம் உள்ளத்தை கோயிலென சொல்வார்கள்.  நாம அதில் நற்குண தெய்வங்களை எழுந்ததருள வேண்டி வணங்குகிறோம். ஆனால் இந்த நற்குண தெய்வங்கள் அவ்வளவு சீக்கிரம் எழுந்தருள்வதில்லை. அதற்கு நாம் பலவிதங்களில் நாம் வந்தனைள், பூஜைகள் செய்து தொழுது அழைக்கிறோம். அவ்வளவு செய்தாலும் அத்தெய்வம் முழுதாக இறங்கி வருவதில்லை. அது அரிதாக கண நேரம் தோற்றம் காட்டி சென்றுவிடுகிறது. அதை நீண்ட நேரம் நிறுத்தி வைக்க முடிவதில்லை. 
  

  ஆனால் நாம் அழைக்காமலேயே விரைந்தெழுந்து நிற்கும் தெய்வங்கள் உண்டு.  கவலையின்  உச்சத்தில் அதற்கான தெய்வம் வந்து நிற்கிறது. அது நம் எண்ணம் செயல் எல்லாவற்றையும் ஒரு பனிப்பொர்வைபோல் போர்த்திக்கொண்டு அதையன்றி வேறு எதையும் காண விடாமல் செய்கிறது. அழுகை, கவனக்குறைவு தளர்ச்சி, செயலின்மை, சுய இரக்கம் போன்ற ஆயுதங்களை தன் கரங்களில் ஏந்தி வருகிறது அத் தெய்வம்.  ஒருவர் சீற்றத்தின் உச்சத்தில் இருக்கும்போது அவருள் சினத்தின் தெய்வம் எழுகிறது.  பற்களைக் கடித்துக்கொண்டு, உடலை முறுக்கி ஆங்காரம் கொண்டு கரங்களில் கடுஞ்சொல், வன்முறை, ஏளனம், பழிப்பு போன்ற ஆயுதங்களை ஏந்தி   கனலென உள்ளும் புறமும் எரிய நின்றாடுகிறது. ஆசைவயப்படுதலின் உச்சத்தில் ஒரு தெய்வம் வருகிறது. அதன் கரங்களில், கள்ளம், கரவு, சுயநலம், வஞ்சகம் என்பவற்றை ஏந்திவருகிறது.    ஆனால்  இந்தத் தெய்வங்களை  வழிபட்டு வருந்தி அழைத்து வருவதில்லை.  நம் ஒரு சிறு செய்கையை, சிறு எண்ணத்தை ஒரு கவனச் சிதறலை,  அவற்றுக்கான வந்தனை, அழைப்பெனக் கொண்டு உள்ளத்தில் ஆவாஹனம் கொள்கின்றன  அந்தத் தெய்வங்கள்.
          

 ஆனால் சினம் ஆசை போன்ற தெய்வங்களின் துணைத்  தெய்வமாக நாம் அழையாமலேயே நம்மில் எழுகிறது கொடூரகுணத்திற்கான தெய்வம். அதன் கரங்களில் பல்வேறு கொலைஎண்ணங்கள், சித்திரவதைக்கான சிந்தனைகள்,  குரோத நச்சுப்பைகள், கொண்டிருக்கிறது. அது எழுந்த பின்னர் அந்தத் தெய்வத்தை தவிர மற்ற தெய்வங்கள் ஒவ்வொன்றாக நம்மை விட்டு விலகிவிடுகின்றன.  அது நம்மை ஆக்கிரமித்து நன்மை தீமை  என ஆய்ந்தறியும் நம் சிந்தனையை செயலிழக்கச் செய்கிறது.    ஒரு கட்டத்தில் நம் சுயநல சிந்தனையைக்கூட வீழ்த்தி, குரோதம் ஒன்றே குணமென ஆக்குகிறது.   அப்போது நாம் செய்வது  சரியா தப்பா போன்ற எண்ணமெல்லாம் எழுவதில்லை.   அப்போது நாம் குரோதத்தில் செய்யும் தீங்குகள் நமக்கு மகிழ்வளிக்கின்றன  அவை மகிழ்வளிக்கின்றன் என்பதால் மீண்டும் மீண்டும் சிய்கிறோம்.   ஆம் அப்போது நாம் அசுரன் என ஆகிறோம். 
   

அப்படி எழும் அசுரன் என்னவெல்லாம் செய்வான் என ஜராசந்தன் நிகழ்த்திக்காட்டுகிறான். இந்தப் பகுதியை படிக்கையில் மனம் அதிர்கிறது என்றாலும், இவை எதுவும் நமக்கு புதிதில்லை, பல்வேறு அரசர்களின் சிறைச்சாலையில் அவர்கள் நடத்திய போர்களில் அவர்களின் படைகள் புகுந்த நாடுகளில் நடத்தப்பட்ட வன்கொடுமைகளில் மிகச்சிறிதளவே இங்கு கூறப்பட்டிருக்கிறது. இது ஹிட்லரோடு முடிந்துபோன ஒன்றல்ல. இன்னும் தினம் தினம் பல்வேறு நாடுகளில் நடத்தப்பட்டுவருகின்றது. நம் நாடும் இதில் விதிவிலக்கல்ல. எதோ ஒரு காரணம், மதம் மொழி சாதி, அரசியல் எனக்கொண்டு அசுரர்கள் பிறந்து எழுந்து வெறியாடுகிறார்கள். 

    நான் அப்படி இல்லை என்கிறீர்களா. சற்று சிந்தித்துப் பாருங்கள். சாலை விபத்தொன்றில் நீங்கள் பாதிக்கப்படும்போது அதற்கு சம்பந்தப்பட்டவர் மீது உங்களுக்கு வரும் குரோதத்தை நினைவுகூர்ந்துபாருங்கள். ஒரு பகைவனை  உங்களாலோ அல்லது பிறராலோ எப்படியெல்லாம் தண்டிக்கப்படவேண்டும் என்ற உங்கள் சிந்தனையை திரும்பிப்பார்த்திருக்கிறீர்

களா? உங்கள் இனத்தைச் சார்ந்தவருக்கு வேறு இனத்தவர் தீங்கிழைக்கிறார்கள் என அறியும் நீங்கள்  வேறு  இனத்தவர் எவராவது,  அவர் அப்பாவியாக இருந்தாலும்,எப்படியாவது பாதிப்படையவேண்டும் என நீங்கள் எதிர்பார்க்கவில்லையா?  ஒரு தீங்கை  நாமே செய்வதற்கும்  அப்படி செய்யப்பட வேண்டும் என நினைப்பதற்கும் பெரிய வேறுபாடு இல்லை. பெரும்பாலான சமயங்களில் சமூகத்தின் தண்டனைக்கு பயந்து, எதிரியின் பலத்தை முன்னிட்டு, அல்லது நம் ஆற்றல் போதமையின் காரணமாக என எதோ ஒரு காரணத்திற்காக   நாம் நம் குரோத எண்ணங்களை செயல்வடிவமாக்குவதில்லை. அதனால் நமக்குள் எழுந்த அந்த அசுரன் பல சமயங்களில் பிறர் கண்களுக்குத் தெரியாமல்  போய்விடுகிறான். அவன் எழுந்ததை நாமும் பின்னாட்களில் மறந்து போய்விடுகிறோம். 

   ஒரு முறை எனக்கொரு தீங்கு ஒருவரால் நிகழ்ந்தது. அப்போது அவரை எப்படியெல்லாம் வஞ்சம் தீர்க்கவேண்டுமெ என் என்னுள்ளத்தில் எண்ணம் தோன்றியது என்பதை நினைத்துப்பார்க்கிறேன். அவ்வகை கொடுமைக்காரனா நான் என எண்ணி என்னையே அஞ்சினேன். என்னுள்ளிருந்து எழுந்த அந்த கொடிய அரக்கனை எவ்வித ஆயுதமுமின்றி வெறும் அபயக் கரம் கொண்டு குரோதமென்பதே துளியுமற்ற குழந்தை வடிவில், நானே அதுவென அமர்ந்திருக்கும் ஆனந்தரூபனை, ஐயப்பதெய்வத்தை மீண்டும் மீண்டும் துதித்து ஒரு வழியாக கரை சேர்ந்தேன். 

   இந்தக் கொடுந்தெய்வம் நம் உள்ளத்தில் தோன்றாமல் இருக்க என்ன செய்யவேண்டும். அது நாம் அழைக்காமலேயே நம்முள் குடியேறும்தெய்வம். அதற்கு எதிரான ஒரே தற்காப்பு,  அனைத்தையும் மன்னிக்கும் பெருங்குணம் கொள்வது. அதை தன் வாழ்வில் நடத்திக்காட்டியவர் இயேசுபிரான். கொடிய சித்திரவதைக்கு ஆளாகி, முள்கிரீடம் அணிந்து சிலுவை சுமந்து நீண்ட வழி நடந்து கல்வாரி மலையேறி அவர் சிலுவையில் அறையப்பட்டபோதும் அவர் தன்னுள் குரோதத்திற்கு இடம் கொடுக்கவில்லை. இறுதியாக அவர், 'இவர்கள் அறியாது செய்கிறார்கள், பிதாவே இவர்களை மன்னியுங்கள்'   என்றபோது அந்தக்கொடுந்தெய்வம் தன் ஆற்றலெல்லாம் இழந்து அவர் காலடியில் வீழ்ந்தது. தன்னை முற்றிலும் தோற்கடித்த ஒரு மனிதகுமரனைக் கண்டு வணங்கிநின்றது
 
தண்டபாணி துரைவேல்