Thursday, April 28, 2016

மூன்றாம் விழி



இருவிழியால் இயல்வதையும் மூன்றாம்விழியால் இன்மையையும் காணத்தெரிந்தவனுக்கு நந்தி மட்டுமே அளிக்கும் அழகு என்ன?” என்று கேட்கின்றான் ஜராசந்தன். இந்த கேள்வியின் முடிவில் வடித்து எடுக்கப்பட்ட உண்மை என்பது இன்பம் என்பதாகும். அதாவது இருவிழியால் இயல்வதையும் மூன்றாம்விழியால் இன்மையையும் அறிகின்றவனுக்கு இன்பம் கிடைக்கின்றது.

வலிக்காமல் கிடைப்பது எல்லாம் இன்பம் இல்லை வலிக்க வலிக்கப்பெற்றாலும் இன்மையை அறியும் மூன்றாவது கண்ணால் இன்பம் காணப்படுகின்றது.

காண்டவனத்தில் துயிலும் சயனருக்கு கல்லில் இருக்கும் அன்னை மூன்றாவது கண்ணுக்கு தெரிகிறாள். அவளின் பாதத்தில் தொடங்கி விழிவரைக்கண்டு சயனர் தன் கழுத்து அறுத்து இன்பத்தை உண்கின்றார்.
பௌண்டரீகத்தில் கிருஷ்ணவாசுதேவன் யுத்தக்கலத்தில் தன்னை நெருங்கி நெருங்கி படையாழியோடு வரும் வாசுதேவகிருஷ்ணனின் பாதத்தில் தொடங்கி விழியில் வந்து நிற்கிறான்.
//கைகள் அம்பெடுத்து வில்நிறைத்துத் தொடுக்க, அவன் விழிகள் கரியவனின் ஒளிவிடும் நகங்கள் கொண்ட கால்களை நோக்கின. மஞ்சளாடை அணிந்த தொடையை, கச்சையில் வேய்குழல்சூடிய இடையை, மென்மயிர்ச்சுருளணிந்த மார்பை, அணித்தோள்களை, குண்டலங்களாடிய காதை, இளநகை மலர்ந்த இதழ்களை. அவ்விழிகளை அவன் மிக அருகிலென கண்டான். அவன் ஆடியில் நாளும் கண்ட அதே விழிகள்.//
கிருஷ்ணவாசுதேவனுக்கு இங்கு இன்மையை அறியும் மூன்றாம் கண்கிடைக்கிறது. தொடையில் அம்புப்பட்டு தெரிக்க அலறிக்குனியும் தருணத்தில் கழுத்தறுக்கும் படையாழி. அக்கணத்தில் இருகைகளை குவித்து தேர்தட்டில் விழுகிறான். இன்மையை காண்கின்றது அவது மூன்றாம் கண்.  
சயனர் சென்றது ஒருபாதை, சிற்பத்தொழிலையே கண்ணாக கருத்தாக தவமாக செய்தவர். பௌண்டரீக கிருஷ்ணவாசுதேவன் சென்றது வேறுபாதை. கிருஷ்ணன்போல் நடிப்பது.  ஆனால் இருவருக்கும் இ்ன்மையை அறியும் மூன்றாம்விழி முளைக்கையில் அறியும் இன்பம் ஒன்றே. இருவருமே வலியறிகின்றார்கள் குருதி வடிக்கின்றார்கள்.. வலியோ குருதியோ அவர்கள் அறியும் இன்பத்தை தடுத்துவிடவில்லை.
சயனர் கண்டது அன்னையின் தரிசனம். பௌண்டரீக கிருஷ்ணவாசுதேவன் கண்டது வாசுதேவகிருஷ்ணன் தரிசனம். இரண்டும் ஒரே இன்பத்தை விளைவிக்கின்றது. இரண்டும் ஒன்றா? அபிராமிப் பட்டர் அன்னையை இந்தப்பாடலில்  அலைகள் உடைய கடலில் அனல்வீசும் கண்களை உடைய ஆதிசேடன்மீது துயிலும் மேலானப்பொருளே என்கிறார். அன்னையே அண்ணன் நாரயணன். நாரயணனே அன்னை நாரயணி என்று காட்டுகின்றார். 

திங்கட் பகவின் மணம் நாறும் சீறடி சென்னிவைக்க
எங்கட்கு ஒருதவம் எய்தியவா எண் இறந்தவிண்ணோர்
தங்கட்கும் இந்தத் தவம் எய்துமோ தரங்கக் கடலுள்
வெங்கட்பணி அணைமேல் துயில் கூருலும் விழுப்போருளே! –அபிராமி அந்தாதி
ராமராஜன் மாணிக்கவேல்