Friday, April 22, 2016

வெண்முரசின் குந்தி.





குந்தி யது குலத்தின் சூரசேனன் மகளாகிய பிருதை வாசுதேவ கிருஷ்ணனாகிய வசுதேவரின் சகோதரி. பெண்குழந்தை இல்லாத குந்திபோஜனுக்கு தத்து மகளாக சென்று வளர்ந்தவள். திருமணத்திற்கு முன்பே துர்வாசர் கொடுத்த மந்திரத்தை சோதிக்க எண்ணி கர்ணனின் தாயானவள். தனது புனிதம் காக்க பெற்றக்குழந்தையை நதியில் விட்டவள்.

காலத்தின் திருவிளையாடலால் உடல்சுகம் தரமுடியாத பாண்டுவிற்கு முதல் மனைவியாகி, கருதானம் மூலம் முன்று குழந்தைகளுக்கு தாயாகி, தனது கணவனின் இரண்டாவது மனைவியாகிய மாத்ரியின் குழந்தைகளுக்கும் வளர்ப்புதாயாகி வாழும் விதவையான எளியத்தாய் குந்தி.

கணவன் இறப்பிற்கு பின்பு கணவனின் மூத்தவராகிய கண்ணில்லாத திருதராஸ்டிரமன்னனிடம் தானும் குழந்தைகளும் அடைக்களாமாகி அண்டிவாழும் ஏழைத்தாய் குந்தி. யாதவர்களின்பெரும் தலைவனாக விளங்கும் தனது அண்ணன் மகன் கண்ணனிடம் நேரடியாகவும் மறைமுகமாகவும் தனது பிள்ளைகளுக்காக உதவியை வேண்டும் பாசமிகுந்த அத்தை. மகாபாரம் காட்டும் குந்தியின் ஒரு விளக்கப்படம் இது.  

பாகவதம் காட்டும் குந்தி மகாபாரத குந்தியில் இருந்து ஒருபடி மேலோ அல்லது கீழோ சென்று கண்ணனின் பெரும் பக்தையாக விளங்குபவள். ‘இன்னும் இன்னும் துன்பம் இருந்தால் இன்னும் இன்னும் உன்னை நினைக்கமுடியும்’ என்று கண்ணனை கண்ணீருடன் இறைஞ்சுபவள்.

மகாபாரதம் காட்டும் குந்தியிடமோ, பாகவதம் காட்டும் குந்தியிடமோ.அரசியல் மோகம் சிறிதும் இல்லை. அரசியலின் பெரும் சிடுக்குகளில் சிக்கி மூச்சுதிணறும் அளவுக்கு அவளிடம் எந்த சக்தியும் இல்லை. விதுரர் மற்றும் கண்ணனை அன்றி அவள் வேண்டிப்பெற பெரிதாக எவரும் எதுவும் இல்லை. காரணம் விதி அவளை மீண்டும் மீண்டும் துன்பத்தில் ஆழ்த்தி கண்ணீரில் நீந்த வைக்கிறது. இப்படிப்பட்ட வாழ்க்கையில் வாழும்  அவளுக்கு எப்படி “நான் என்ற ஆணவமும்,எனது என்ற அங்காரமும்“ உடைய அரசியலில் கவனத்தை செலுத்த முடியும். அவள்இந்த அரண்மனை வாழ்க்கையை விட்டே ஆரண்யத்தில் தனது பிள்ளைகள் உடன் வாழ்வதிலே சுகம் காணக்கூடியவள் என்பதுபோல் உள்ளது. மகாபாரம் வாசிக்கும் வாசக நெஞ்சத்தின் மன இயல்பு.

குந்தி வெறும் எளிய மனைவியும் ஏழைத்தாயும் ஏங்கும் பக்தை மட்டும்தானா? என்று வெண்முரசு கேள்விக்கேட்கிறது. கேள்விகளில் இருந்து குந்தியின் அடிமனதை ஊன்றி கவனித்து பதில் சொல்கிறது வெண்முரசு.  மகாபாரதத்தில், பாகவதத்தில் இதற்கான பதில் இல்லை ஆனால் இந்த கேள்விகளை கேட்க மகாபாரதமும், பாகவதமும் காரணங்களை கொடுக்கின்றன.  

அனகையிடம் “இதோ என்னிடம் ஒரு மந்திரமுள்ளது….இதைச்சொன்னால் எனக்கு தேவர்கள் மைந்தர்களாகப் பிறப்பார்கள் தெரியுமா?” என்று சொன்னேன். “நான் சூரியனை ஒருமைந்தனாகப் பிறக்கவைப்பேன். அதன்பின்னர் கனிகளை பழுக்கவைக்கும் பொறுப்பு அவனுக்குரியது. வாயுவை இன்னொருமைந்தனாக்குவேன். அவன் என் தேர்களை இழுப்பான். அக்னியை மைந்தனாக்கி சமையலுக்கு நிறுத்துவேன்” என்றேன். அனகை “இந்திரனை என்னசெய்வீர்கள் இளவரசி?” என்றாள். நான் உரக்கச்சிரித்துக்கொண்டு “இந்திரனை விடவே மாட்டேன். என் மஞ்சத்தின் காலில் கட்டிப்போட்டு சேவைசெய்யவைப்பேன்” என்றேன். இருவரும் உரக்கச் சிரித்தோம்  [மழைப்பாடல்31.] 

துர்வாசரிடம் இருந்து பெற்ற மகத்தான மந்திரத்தை குந்திக்கையாண்டு குழந்தைப்பெற்றால் என்ற நிலையில் நிருத்திவிடுகிறது. அந்த மந்திரத்தின் காரணமாக குந்தியின் அகத்தில் எழும் எண்ணத்தின் வலிமைய வெண்முரசு விளக்குகிறது. மகாபாரதம் அந்த மனநிலையை காட்டாமல் புரிந்துக்கொள் என்று சொல்கிறது. வெண்முரசு புரிந்துக்கொண்டதை எழுத்தில் வடித்து வைக்கிறது. இப்படி குந்தியின் மனநிலை மகாபாரதத்தில் மறைக்கப்படும் இடங்களை எல்லாம் வெண்முரசு வெளிக்கொண்டு வருகின்றது. வெண்முரசு வெளிக்கொண்டுவரும் குந்தியின் மனநிலை ஒரு உளவியல் ஆய்வு. அதை ஆய்வு செய்ய எழுத்தாளன் அந்த இடத்திற்கு சென்றாகவேண்டும், வாசிக்கும் வாசகனும்கூடத்தான். கரையில் நின்றுக்கொண்டு கடலின் ஆழத்தை எப்படி அறிவது? வெண்முரசு கடலில் ஒவ்வொரு முறையும் குதிக்கச்சொல்கிறது. . 

இறைவனே மன்னன், அந்த மன்னனின் பிரதிநிதிதான் மண்ணில் மன்னன். விதியின் வசத்தால் மண்ணில் மன்னாகிய பாண்டுவின் பிரதிநிதிதான் மகாபாரதத்தைப்பொருத்தவரை திருதராஸ்டிரன்.

மன்னனும் இல்லாத கண்ணுமில்லாத திருதராஸ்டிரனுக்கு வெகுதொலைவில் இருந்தாவது ஒரு சத்திரிய மன்னனின் மகளை மனம் முடிக்க வேண்டும் என்று நினைத்த பீஷ்மரும் சத்தியவதியும், மன்னன் பாண்டுவுக்கு ஏன் யகுகுலத்தில் பெண் எடுத்தார்கள்? மன்னனாக முடியாத திருதராஸ்டிரன் பிள்ளையாவது மன்னனாகவேண்டும் என்ற ஆசையில்தான். பாண்டுவின் பிள்ளைகள் மன்னர்கள் ஆகிவிடக்கூடாது என்ற எண்ணத்தில் அவனுக்கு முதல்மனைவியை யதுகுலத்திலும், இரண்டாவது மனைவியை சத்திரிய குலத்திலும் எடுத்தார்கள். இதுவே மாற்றி மணம்கொண்டு இருந்தால்  பாண்டுவிற்கு பிறகு பாண்டுவின் பிள்ளைகள் என்றுதான் குருவம்சம் தொடர்ந்து இருக்கும். அதற்கும்மேலாக குந்திக்கு பாண்டுவால் பிள்ளைக்கிடைக்கப்போவதில்லை என்பதும் அவர்கள் கனித்ததுதான். . இந்த எளிய அரசியல் விளையாட்டை பாண்டுவும் குந்தியும் அறியாமல் இருப்பார்களா?

குந்தி யார்? எளிய மானிடப்பெண்ணா? இல்லை. யார் சாபத்திற்கு முன்பு தெய்வமே நிற்கமுடியாதோ அவர் முன் நின்று வென்றவள் குந்தி. அவளை  துர்வாசர் வாழ்த்தும்போது “தீர்க்கசுமங்கலி பவ” என்றோ “நல்மகனைப்பெறுவாய்” என்றோ வாழ்த்தாமல், உனக்கு ஒரு மந்திரம் சொல்கிறேன். அதை உச்சரித்தால் எந்த தெய்வத்தை நினைத்து உச்சரித்தாயோ அந்த தெய்வத்தை காணப்பெற்று அதன் மூலம் குழந்தை வரம்பெறுவாய் என்று அருள்கிறார். தனக்கு பணிவிடைச்செய்த பெண்ணின் எதிர்காலம் சூன்யமாகிவிடக்கூடாது என்ற தீர்க்கத்தரிசனம் இது.  

ஞானிகளும் சித்தர்களும் அடிபணிந்தவன் கர்மவினையை வேர் அறுக்கிறார்கள். குந்தியின் கர்மவினை குழந்தைப்பெற்றும் அம்மா என்று காட்டிக்கொள்ளமுடியாத நிலை. கணவன் இருந்தும் மலடியாக வாழவெட்டியாக இருக்கவேண்டிய நிலை. இந்த கர்மங்களை துர்வாசரால் நீக்கமுடியாது. அன்னை பராசக்கதியின் லோகாதாய விளையாட்டில் யாரும் உள்ள நுழைந்து கலைத்துவிட முடியாது ஆனால் விளையாட்டின் போக்கை மாற்றிவிளையாட முடியும். துர்வாசர் குந்திக்கு கொடுத்த மந்திரம் அவள் கர்மவினையோடும் அந்தினபுரியின் அரண்மனையோடும் விளையாடுகிறது. காரணம் துர்வாசர் குந்திக்கு கொடுக்கும் மந்திரம் தெய்வங்களை அருவ உடல் விட்டு மண்ணிறங்கி வந்து பருஉடல் கட்ட வைக்கும் மந்திரம். உருவுக்குள் உள்ள உள்மூலத்தை உணரும் மந்திரம்.  

இதுவரை குந்தி எளியவள்தான் தன் பலம் அறியாதவள்தான். ஆனால் அத்தினபுரியில் இருந்தால் தனக்கு ஒரு வாரிசுக்கிடைக்காது என்பதை அறியும் பாண்டு தனது இருமனைவியோடும் காட்டுக்கு சென்று தனது உள்ளகிடக்கை விவரிக்கிறான். இதை அரண்மனையிலேயே பாண்டு சொல்லி இருக்கலாம் அப்படி சொல்லி இருந்தால் அரண்மனையில் பிறக்கும் வாரிசுகள் ஆள்வதற்காக என்று மட்டும் கொள்ளப்படும் ஆனால் பாண்டு காட்டில் சென்று முனிவர்களுடன் வாழும்போது வேண்டும் வாரிசு அன்பிற்கா ஆண்டவன் ராஜியத்தை ஆளும் குழந்தைகளை மட்டுமே. அங்கிருந்து எழுகிறாள் குந்தி. வெண்முரசு இங்கு உந்தியின் உயரத்தை அவள் உள்ளத்தின் விளையாடலாய் கோலமிடுகிறது.

ஞானிகள் சாதுக்கள் ரிஷிகள் தொடர்பால் அவள் எளிய மனிதர்களைத்தாண்டி பெரும் மனிதர்களை கனவுக்கண்டு தருமத்திற்கு என்று ஒரு குழந்தை பலத்திற்கு என்று ஒரு குழந்தை வீரத்திற்கு என்று ஒரு குழந்தைப்பெற்று தனது சகோதரி மாத்திரியின் வழியாக விலங்கு வளர்ப்பு மருத்துவம் சோதிடம் என்று இரண்டு குழந்தைகளை பெறுகிறாள். ஒரு நாடு என்பது இந்த ஐந்திற்குள் அடங்கிவிடுகிறது. அங்கிருந்து அவள் அரசியல் கனவு தீவிரம் கொள்கிறது. இல்லை என்றால் ஞானிகளோடும் சாதுக்களோடும் ரிஷிகளோடும் வாழ்ந்த குந்தி பாண்டுவின் மரணத்தைக்காட்டி ஏன் அஸ்தினபுரம் வரவேண்டும். அவள் குழந்தைகளை வளர்க்கமுடியாது என்றா காட்டில் இருந்து நாட்டிற்கு வருகிறாள்?. காட்டைவிட நாட்டில்தான் தனது குழந்தைகளை வளர்ப்பது கஷ்டம் என்பதை அவள் அறிந்தே இருக்கிறாள் அதனால்தான் பீமனுக்கு துரியோதன் விடம்கொடுத்தபோது அதை யாருக்கும் தெரியாமல் மறைக்கிறாள். வாரணாவத தீவிபத்திற்கு பின்பு மறைந்து வாழ்கிறாள். இது  பதுங்கிப்பாயும் பெண்சிங்கத்தின் மன்னர்களின் நெஞ்சுரமும் அரசியல் விளையாட்டும். இந்த மனநிலைகளை வெண்முரசு  குந்தியின் மனைநிலையில் நின்று ஆராய்கின்றது.

ஜவகர்லால் நேருக்கு பெண் குழந்தையாக பிறந்ததாலேயே இந்திரா காந்தி பிரதமாராக முடிந்தது. அந்த கனவுகளை தனக்குள் விதைத்துக்கொண்டார். குந்திபோஜனின் மகளாக சென்றபிறகு பிருதை வெறும் ஆடை உடுத்தவும் சோறு திங்கவும் பெற்றுப்போடவும் மட்டுமா பயின்று இருப்பாவள் அப்படிப்பட்ட மனநிலையில் இருப்பவளை குந்திபோஜன் துர்வாசரிடம் ஒரு சீடன்போல செல்ல அனுப்பி இருப்பானா? வரம்வாங்கிய பெண்ணை சாபக்குழியில் எந்தை தந்தை தள்ளுவான்.  அழகு கலை இலக்கியம் அரசியல் என்று  இகவாழ்க்கையை தெளிந்த பிருதை ஆன்மீகத்திலும் முன்னேற அனுப்புகிறான். எதுவும் படிக்கவில்லை அரசியல்வாதி ஆகட்டும், எந்த வேலையும் கிடைக்கவில்லை புரோகிதனாகட்டும் என்று வாழும் இன்றைய நிலை அல்ல அன்று. பிருதையின் அறிவுத்தெளிவு நல் கணவனுக்கு ஒரு அமைச்சனாகவோ, அவள் சகோதரன் வசுதேவன் அமைச்சனாக இருப்பது இங்கு நோக்க தக்கது.  பாண்டுபோன்ற பலகீனமான கணவனுக்கு திரைக்குபின்னால் இங்கும் மன்னனாகவோ இருக்கும் தகுதியை உடையது. அந்த வல்லமையை வெண்முரசு குந்தியின் இடத்தில் பயன்படுத்துகின்றது.

குந்தி காதல்கன்னி, பணிவும் பண்பும் நிறைந்த மனைவி, கணவனுக்கும் இளையாளுக்கும் அன்னை. மாற்றாம் தாய் குழந்தைகளுக்கும் மாற்றாம்தாய் என்று எண்ணமுடியாத அளவு கருணைத்தாய். திருதராஸ்டிரன், அவன் மனைவி காந்தாரி, பீஷ்மர், விதுரர் என்று அவள் அனைவரிடமும் பண்போடு நடந்துக்கொள்கிறாள் அதற்கும்மேலாக தனது கணவனின் பங்கை கேட்கிறாள். அதற்காகவே அவள் குழந்தைகளை அப்படித்தேர்ந்து எடுக்கிறாள்.

குழந்தை பிறப்பு   கவனத்தில் இல்லாத ஒரு சம்பரதாயம் என்ற எளிய காமக்கணக்கை உடைக்கிறாள்.” நீ எதுவாக ஆகநினைக்கிறாயோ அதுவாகவே ஆகின்றாய்” என்ற வேத தத்துவத்தை குழந்தையாக்கிக்காட்டுகின்றாள். வெறும் காம உணர்வால் பிறக்கும் குழந்தைகள் உடல் மானிடர்களாக இருந்தாலும் உள்ளத்தால் மானிடர்களாக இருக்க முடியாது. உள்ளத்தில் எழும் உண்மையின் உணர்வால் பிறக்கும் குழந்தைகள் மண்ணில் வாழ்வாங்கு வாழ்ந்து வானுறையும் தெய்வங்கள் ஆகும் என்று நிருபிக்கிறாள். ராமனோ கண்ணனோ ஆதிசங்கரரோ, பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரோ, விவேகானந்தரோ, பரமஹம்சயோகனந்தரோ வெறும் புணர்வால் உண்டான மானிட உடல்கள் இல்லை, அன்னை தந்தையின் உள்வெளிச்சத்தால் உணர்வுகளை உள்பொதிந்த மானிடராகப் பிறந்தவர்கள். அந்த வெளிச்சத்தை குந்தியும் தனது குழந்தை பெற்று எடுப்பில் பயன்படுத்துகின்றாள். இந்த திட்டம் எதை நோக்கி?. தன்னை வீழ்த்தியவர்களிடம் இருந்து வீழ்ந்துவிடாமல் இருப்பதற்கானது.  

தேடிச் சோறு நிதந்தின்று-பல
சின்னஞ்சிறு கதைகள் பேசி-மனம்
வாடித் துன்பமிக உழன்று-பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து- நரை
கூடிக் கிழப்பருவம் எய்தி – கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும்- பல
வேடிக்கை மனிதரைப் போலே-நான்
வீழ்வேனென்று நினைத்தாயோ? பாரதியார்.

பட்டிமன்ற நடுவர் அறிவோளி ஐயா! ஒரு செய்திச்சொன்னார். நல்ல பெரிய கோயில்காளையை பசுவின் கண்ணில்படும்படி நிறுத்தி அதனோடு ஒரு எளிய காளையை சேர்த்தால் பிறக்கும் கன்று கோயில்காளையின் சாயலோடு வல்லமையோடு இருக்கும் என்று. இது உளவியல்.

ஓர் ஆண்குரல் பேசுவதும் பிருதை பதிலிறுப்பதும் கேட்டதா தானே எண்ணிக்கொண்டதா என்று அனகை திகைத்தாள். மூச்சுவிட முடியாமல் அகம் கல்லாக மாறியிருப்பதுபோலத் தோன்றியது. யமனுக்கான இரவை நெடுந்தொலைவில் யாரோ வேதமந்திரத்தால் வாழ்த்திக்கொண்டிருந்தனர் [மழைப்பாடல் 73]

முருகபெருமானுக்கு பாலபிஷேகம் செய்து குழந்தைவரம் கேட்பது முருகபெருமானைப்பெறுவதற்குதான். குந்தி இந்திரன்மகனை பெற்றப்பின்பு அவளுக்கு நாடளவேண்டும் என்ற ஆசை எழாமல் இருக்குமா? குந்தியின் மகன் கர்ணன் விதியின் கயிற்றால் கட்டப்பட்டு குதிரைச்சாணி அல்ல விடப்பட்டும் அவன் அங்கமன்னனாவது அன்னையின் உள்ளத்தில் விளைந்த வல்லமை அல்லவா? வெண்முரசு இந்த இடத்தை எல்லாம் தொட்டு விவரித்துச்செல்கிறது.

மரம் அசையாமல் இருந்தாலும் காற்று அசைக்காமல் விடுவதில்லை என்பதுபோல திருதராஸ்டிரன் மனைவிகளும்,கௌரவர்கள் நூறுபேரும் குந்தியின் அதிகார உணர்ச்சியை தூண்டுகின்றார்கள். மகாபாரதம் காட்டும் குந்திபோலவோ, பாகவதம் காட்டும் குந்திப்போலவோ குந்தி வாழவிரும்பி இருந்தால் பீமன் இடும்பியை மணந்தப்பின்பு அவனை அங்கேயே விட்டுவந்திருக்கலாம் ஆனால் குழந்தைபிறக்கும்வரைதான் பீமன் உன்னுடன் இருப்பான் என்ற நிபந்தனையுடன்தான் அவனை அங்கு விடுகிறாள். மற்றும் வாரணாவத தலைமறைவிற்கு பின்பு பாஞ்சாலியின் திருமணத்திற்கு சென்று அர்ஜுனன் பாஞ்சாலியை மணந்தே ஆகவேண்டும் என்று தூண்டுபவளும் குந்திதான். பாஞ்சாலியை ஐவருக்கும் பங்குவைப்பவள் குந்திதான் இந்த இடங்களில் எல்லாம் குந்தியின் மனநிலை மையம்கொள்ளும் அரசியல்களம்தான் காரணம். எளிய குடும்பதலைவியாக இருந்தால் குந்தி இதை எல்லாம் செய்யவேண்டியத்தேவை இல்லை. இதை எல்லாம் வெண்முரசு தனது வெளிச்சத்தில் விரித்துவைத்து குந்தியை படம்பிடிக்கிறது.

ஆக்கமும் அழிவும், வாழ்வும் மரணமும், இருப்பும் இன்மையும், நன்றும் தீதும் ஒரு நிறையளவையின் இரு தட்டுக்கள். ஒரு கணத்தின் ஒரு புள்ளியில் மட்டுமே அவை முற்றிலும் நிகராக அசைவிழந்து நிற்கின்றன. அந்த முழுமைக்கணத்தை அறிகையில்தான் மனித அகமும் முழுமைபெறுகிறது. அந்த முழுமைக்கணத்தில் முழுவாழ்க்கையையும் வாழ்பவன் காமகுரோதமோகங்களில் ஆடினாலும் யோகி. செயலாற்றாமலிருந்தாலும் அனைத்தையும் நிகழ்த்துபவன். மானுடன்போல புலன்களுக்குள் ஒடுங்கினாலும் வாலறிவன். அவன் வருவான் [ மழைப்பாடல்74 ]


கண்ணன் பிறப்பைப்பற்றி வெண்முரசு இப்படி பதிவு செய்கிறது.  அனைத்து தாயும் கடவுளை பிறப்பிக்கவே முயல்கிறார்கள். குறைந்தப்பட்சம் மன்னனாவது பிறக்கட்டும் என்று ஏங்குகிறார்கள் அந்த ஏக்கம் குந்திக்கு உள்ளது என்பதை வெண்முரசு தருமன் பிறப்பில் காட்டுகிறது.

சதசிருங்கத்தின் பனிமலைகளுக்குமேல் விண்ணில் நீண்டு ஒளிரும்வாலுடன் ஒரு விண்மீன் தோன்றியது. சிலகணங்களுக்குப்பின் அது வெண்மேகத்தில் மறைந்துகொண்டது. அதை எவருமே காணவில்லை. “அனகை” என்று மெல்லிய குரலில் குந்தி கேட்டாள். “ஷத்ரிய முறைப்படிப் பார்த்தால்கூட இவன்தான் குருகுலத்திற்கு மூத்தவன். அரியணைக்கு உரியவன், இல்லையா? மழை்ப்பாடல்74

இங்கிருந்து குந்திப்போன்றத்தாய் அரசியலில் தீவிரம் காட்டுவது இயற்கையே இதையே வெண்முரசு விவரிக்கிறது.பிறப்பும் இறப்பும் ஊடியும் கூடியும் பின்னும் வலையால் ஆனது இப்புடவி என்பதனால் ஒவ்வொரு பிறப்பும் இங்கு நிகழும் அனைத்துடனும் இணைந்துள்ளது என்பதே நிமித்திக நூலின் முதல் அறிதல்” என்றார் முதியசூதராகிய யூபாக்‌ஷர். “இப்புடவி ஒன்பதின் அடுக்குகளினாலானது என்பதனால் ஒவ்வொரு பிறப்பும் புடவி என்னும் பெருநிகழ்வின் ஏதேனும் ஒன்பது நிகழ்வுகளுடன் இணைந்திருக்கும்.



பாஞ்சாலியை மணந்துவரும் பாண்டவர்கள் “தாயே நாங்குள் ஒரு பிட்சைச்கொண்டுவந்திருக்கிறோம் “ என்று  சொல்ல, வீட்டுவேலையில் இருந்த குந்தி அவர்களைப்பார்காமலே ”ஐவரும் பங்கிட்டு உண்ணுங்கள்” என்று சொல்லி பின்பு அது பாஞ்சாலி என்று தெரிந்து மனம் பதைக்கிறாள். இங்கு ஒன்று ஐவர் நடந்துவரும் ஓசையில் பாஞ்சாலி சிலம்போ தண்டையோ அணிந்து நடந்துவரும் ஓசையோ குந்திக்கு கேட்க வாய்ப்பே இல்லையா? மற்றொன்று பாஞ்சாலத்திற்கு மணவிழாவிற்கு சென்றுவரும் பிள்ளைகள் வெற்றியுடன் திரும்பி வருகிறார்களா என்ற ஏக்கம் எதுவும் இல்லாமல் குந்தி வெறுமனே குந்தி இருப்பாளா? வெண்முரசு இந்த இடங்களை மனங்களின் அசைவில் எழும் விழைவுகளை நோக்கி நகர்த்திச்செல்கிறது. தான் கட்டமைத்த மகன்களை பாஞ்சாலியி்ன் வரவு எத்தனை தூரம் விரிக்கிறது என்பதை குந்திக்காண்கிறாள். தாயின் முன் மகனும், மனைவியின் முன் கணவனும் ஒருவனாக இருந்தாலும் குணங்கள் இரண்டு என்னும் உண்மையை வெண்முரசு மாமியார் மருமகள் எதிர்ப்பில் காட்டுகிறது. இப்படி எல்லாம் மூலத்தில் இ்ல்லை என்பது சரிதான் ஆனால் மானிடர்வாழ்க்கையில் இது எல்லாம் இருக்கிறதே. மகாபாரதம் மானிடர்வாழ்க்கையைத்தான் சொல்கிறது. அதை வெண்முரசு உடலோடு ஒட்ட உள்ளத்தோடும் சேர்த்துப்பார்க்கிறது.   

வெண்முரசு காட்டும் குந்தியின் அகத்தை உணர்ந்தால் மட்டும்தான் அவள் வெண்முரசில் எத்தனை பெரும் வல்லமையோடு வளர்ந்து உள்ளால் என்பது தெரியும்.

ராமராஜன் மாணிக்கவேல்.