சொர்ணக்கடையா! இப்படி ஒரு பெயரா? யாரது? என்ற ஆச்சரியத்தை நண்பன் போக்கினான்.
அவன்தான் சொர்ணக்கடை. சௌதிக்கு வந்த புதிதில், நாட்டில் என்ன பணிச்செய்தாய் என்ற கேள்விக்கு. சொர்ணக்கடை வைத்திருந்தேன் என்று பதில் சொல்லி உள்ளான். நாட்டில் சொர்ணக்கடை வைத்திருப்பவன் எதற்கு சௌதிக்கு மண்ணு குத்தவந்தான்? ஏளனசிரிப்போடு உதித்தது சொர்ணக்கடை பெயர்.
அவன் Gas plantல் வேலைக்கு செல்லும்போது Sound Hazard Protection காரணமாக கொடுக்கப்பட்ட காது அடைப்பானை எங்க வைத்துக்கொள்வது என்று முன்னோர்களைக்கேட்க இரண்டு மூக்குளையும் சொறிவிக்க என்று பதில்வர, மூக்கில் சொறிகிக்கொண்டு Jackhammer அடித்தான்.
புறனானூற்றில் பரிசில்பெற்றுவந்த புலவர் அளித்த அணிகலன்களை அவர் சுற்றம் அணியும் இடம் மாற்றி அணிகளை அணிந்ததை இப்படி விவரிக்கிறார்.
விரல் செறி மரபின் செவித் தொடக்குநரும்
செவித் தொடர் மரபின் விரல் செறிக்குநரும்
அரைக்கு அமை மரபின் மிடற்று யாக்குநரும்
மிடற்று அமை மரபின் அரைக்கு யாக்குநரும்
கடுந்தெறல் இராமனுடன் புணர் சீதையை
வலித்தகை அரக்கன் வௌவிய ஞான்றை
நிலம் சேர் மதர் அணி கண்ட குரங்கின்
செம் முகப் பெருங் கிளை இழைப் பொலிந்தாஅங்கு
அறாஅ அரு நகை இனிது பெற்றிகுமே- புறனானூறு.
.பன்னிருப்படைக்கலத்தில் மகதத்திற்கு வரும் ஜராசந்தனை வெண்முரசு இப்படிக்காட்டுகிறது.
// அவன் தன் உடலில் அன்னை அளித் த அரசகுலத்து நகைகளை அணிந்திரு ந்தான். சிறு கைவளைகளை காதுகளி ல் குழைகளைப்போல் அணிந்தான். கா ல்தண்டைகளை நெற்றியில் கட்டி தொ ங்கவிட்டான். கணையாழிகளையும் கயிற்றில் கட்டி கழுத்தில் அணி ந்தான். ஆரங்களை கைகளில் சுற்றி க்கொண்டான். வெளிவானின் ஒளி அவன் கண்களை கூசச்செய்தது. எங் குசெல்லவும் வழிகள் தெரிந்திரு க்கவில்லை. வற்றிய ஆறுபோல செல் பவை பாதைகள் என்றே அவன் அறிந்தி ருக்கவில்லை//
ராமயணக்காலம், மகாபாரதக்காலம், புறநானுற்காலம், நிகழ்காலம் என்று விரிந்துக்கிடக்கும் காலவெளியில் மனிதன் அறியாமையை அணியும் விதம் ஒன்றாகவே உள்ளது. அறியாமையை அணியும் மனிதனைக்கண்டு நகைக்கும் மனிதனும் அப்படித்தான் உள்ளான். ஆனால் காலவெளியில் நகைக்கு பின்னால் எழும் மானிட அகம் ஒன்றாகவா உள்ளது?. ஒன்று ஞானியின் இதயமென அறியாமையை அகற்றி கனிவுக்கொண்டு கனிகிறது. மற்றொன்று அறியாமையின் பேரிருளில் மைகருமைக்கொண்டு விடம்தோய்ந்து எழுகிறது.
மகதத்திற்கு அணிகளை அணிந்து வரும் விதத்திலேயே அறியாமையை அணிந்துவருகின்றேன் என்று காட்டும் ஜராசந்தனை தங்களில் ஒருவன் என்று மக்கள் எண்ணுகின்றார்கள். மக்கள் விரும்புவதெல்லாம் தங்களை அறிவாளியாக உயர்த்தி நகைக்க வைக்கும் ஒரு அறியாமை உடைய மனிதனை. அவன் வலிமை பொருந்தியவனாக இருந்தால் அவன் தங்கள் துணை என்று மயங்குகிறார்கள். அவனுக்காக உடல் பொருள் ஆவி என்று அளிக்க முன்வருகின்றார்கள். அங்கிருந்து அவன் மக்களின் அறியாமையை மூலதனமாக்கி தன்னை முன்னவனாக்கிக்கொள்கிறான். அவன் என்ன செய்தாலும் நம்மில் ஒருவன் என்ற பாசம் கண்ணை மறைக்கிறது. நம்மைவிட அறிவில் எளியவன் என்ற பச்சாதாவம் வழிவிட்டு ஒதுங்குகிறது. புகழ்பாடுகிறது. அவன் அறிவுடையவன் என்று உயரும்போது கனவில் மிதக்கிறது.
ஜராசந்தன்போன்ற பலம்பொருந்தியவன் தன் அறியாமையை எரித்து எரித்து அதில் ஜோதி உண்டாக்கி அறிவைப்பெருக்கிக்கொள்கிறான். பத்மர் போன்றவர்க்கு அறிவு அறிவை நோக்கி அழைத்துச்செல்கிறது. ஜராசந்தனுக்கு அறியாமை அறிவைநோக்கி அழைத்துச்செல்கிறது. அவன் எப்போது அறிவில் நிற்பான் எப்போது அறியாமையில் நிற்பான் என்பது தெரியமால் உலகம் மயங்குகிறது. அறியாமையிலும் தனக்கான வழி அறிந்து, அறிவிலும் தனக்கான வழியறிந்துக்கொண்டு வாழ்க்கையை மேலும் மேலும் என ஸ்திரப்படுத்திக்கொள்கின்றான். கோட்டானுக்கு பகலி்ல் கண்தெறியாது. காக்கைக்கு இரவில் கண்தெறியாது. ஜராசந்தன் போன்றவர்கள் கோட்டானும் காகமும் ஆனவர்கள்.
இருநிலைக்கொண்ட மனிதர்கள் தனது அறியாமையை தாக்கும் மனிதர்களை தனது அறிவால் தாக்குகிறான். தனது அறிவைத்தாக்குபவர்களை தனது அறியாமையால் தாக்குகிறான்.
ஜராசந்தன் தனது தம்பிகளை கழுவேற்றுவது தனது தம்பிகளின் அறியாமைக்காக அல்ல பத்மரின் அறிவுக்காக. மீண்டும் மீண்டும் அவன் பத்மரின் அறிவை அழித்து தனது தம்பிகளை கழுவேற்றுகின்றான். வெளிப்பார்வைக்கு தனது தம்பிகள் மீது கொண்ட வஞ்சம்கோபம் இதற்கு காரணம் என்று நாம் நினைத்தாலும், உள்ளில் அவன் பத்மரையே நான்கு முறை உள்ளத்தில் கழுவேற்றுகின்றான். அவன் ஒருமுறைக்கூட தனது தம்பிகளை திரும்பிப்பார்க்கவில்லை என்பதே இதற்கு சான்று.
மனிதன் எப்போதும் ஒருவன் அல்ல இருவன். ஜராசந்தனே சான்று.
ராமராஜன் மாணிக்கவேல்