ஒன்றை சம்பாதித்து பெறுதலில் விலைகொடுத்து வாங்குதலில் நமக்கு தேர்தெடுப்பதற்கு உரிமையுள்ளது. அப்போதுகூட நாம் தேர்ந்தெடுத்தது சரிதானா என உறுதியாய் அறிந்துகொள்வது பல சமயங்களில் கடினம். வாங்கிய பல நாட்களுக்கு பிறகு நாம் ஏதேனும் குறை கண்டுபிடித்தாலும் மாற்றிக்கொள்ள முடியாமல் போய்விடலாம். விலை அதிகமான பொருளாக இருந்து அதற்கு மாற்றாக இன்னொரு பொருளை வாங்கும் வளம் இல்லாத போது நாம் அந்தப் பொருளைவைத்தே வாழவேண்டிவரும். அப்போது அந்தப் பொருளை நாம் ஏற்றுக்கொள்லவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிடுகிறது.
ஆனால் அதை மனமொப்பி ஏற்றுக்கொள்ளாவிடில் அது ஒரு உறுத்தலாகவே நமக்கு காலமெல்லாம் இருக்கும். ஆனால் அந்தப் பொருளை அது கொன்டிருக்கும் குறையுடனே ஏற்றுக்கொண்டால், எப்படியாயினும் அது என்னுடைய பொருள் என்ற நேசம் தோன்றிவிட்டால், அந்த உறுத்தலை நாம் எளிதாக கடந்துவிடலாம். அந்தப் பொருள் நமக்கென அமைந்திருக்கிறது என்ற ஒரு பந்தம் உருவாகி அந்தப் பொருளை விரும்ப ஆரம்பித்துவிடுவோம். அதை வேண்டாம் என ஒதுக்கிவிட மனமில்லாமல், அதன் பயன் தீர்ந்தபிறகும் வைத்திருப்போம்.
இப்படி நமக்கென இருப்பதால் அமையும் பந்தமும் நேசமும் உயிரற்ற பொருட்களுக்கு இருப்பதைவிட நட்பு, பாசம், காதல், மண உறவு என்பதில் இன்னும் உச்சம் அடைகிறது. யோசித்து பாருங்கள், நம் நண்பரைவிட அறிவிலும் திறனிலும் சிறந்தவர்கள் பலர் இருக்கின்றனர். நம் உறவினரை விட அன்பில் தயாள குணத்தில் சிறந்தவர்கள் இருக்கின்றனர். நாம் காதல் கொண்டவரை அல்லது மணத்துணைவரைவிட அழகானவர் நிறையபேர் இருக்கின்றனர். ஆனாலும் அவர்களை நாம் அடைந்திருப்பதால் அவர்கள் நமக்கானவர்கள் என்பதால் ஏற்பட்டுள்ள பந்தமும் நேசமும் என்றும் குறைவதில்லை. மாறாக அது வளர்ந்துகொண்டே போகிறது. சில நாம் தேர்தெடுக்க நமக்கு எவ்வித வாய்ப்பும் தரப்படாமல் இல்லாமல் அளிக்கப்பட்டிருக்கின்றன. தாய்மொழி, தாய் நாடு, தாய் தந்தையர், பிள்ளைகள், மற்ற இரத்த உறவுகள் போன்றவை அதில் முக்கியமானவை.
ஆகவே ஒரு பொருள் அல்லது ஒரு உறவு சிறந்த ஒன்று என்பதற்காக என அல்லாமல் அது நம்மை சார்ந்த ஒன்று என்பதாலேயே அது மற்றவற்றைவிட உயர்ந்ததாக நாம் கொள்கிறோம். ஆகவே நமக்கு கிடைத்திருக்கும் உறவு அல்லது பொருள் நமக்கு கிடத்திருக்காத எந்த ஒன்றையும்விட உயர்ந்தது என்பதை நாம் உணர்ந்துகொள்ள வேண்டும். இவற்றை எவ்வித மறு எண்ணமும் இல்லாமல் ஏற்றுக்கொள்வதே நம் வாழ்க்கையின் இனிமைக்கு வழிவகுக்கும். நமக்கு கிடைத்திருக்கும் அனைத்தையும் இறைப்பிரசாதம் எனக் கொள்ளவேண்டும். இறை பிரசாதத்தில் உயர்ந்தது தாழ்ந்தது என்பது ஏது? நமக்கு எது வேண்டும் என்பது அவனைத்தவிர யாருக்குத்தெரியும். ஆனால் சிலர் அவனளிப்பதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள். அதற்காக வாழ்நாளெல்லாம் துயருற்றுக்கொண்டே இருக்கிறார்கள். தமக்கு கிடைத்திருப்பதின் மதிப்பை அவர்கள் அறிவதில்லை.
வெண்முரசின் இன்றைய பகுதியில் தம்பனும் அவன் மனைவியும் அவர்களுக்கு பிறக்கும் குழந்தையை ஏற்றுக்கொள்ளவில்லை.அவர்கள் தங்களுக்கு கிடைத்த இறைப்பிரசாதத்தை சீயென தூக்கி எறிகின்றனர். அவர்கள் சிறு புழுவென அருவருத்த அவர்கள் மகன் வளர்ந்து நிற்கையில் அவர்கள் புழுக்களென சிறுத்து நிற்கின்றனர் அவர்கள் தாம் அடைந்ததின் மதிப்பறியாது தவறவிட்டவர்கள். கிடைத்ததை ஏற்றுக்கொள்ளாததில் எஞ்சுவது எப்போதும் இழப்பே எனக் காட்டுகிறது அவர்களின் கதை.
தண்டபாணி துரைவேல்