Sunday, April 10, 2016

மக்கள் கூட்டத்தின் இயல்பு (பன்னிரு படைக்கலம் 14)


   ஒற்றை நீர்த்துளி ஒருபரப்பில் இருப்பதை கவனித்துப்பார்தால், அதற்கென தனித்து ஒரு  சிந்தனை இருப்பதைப்போல் நடந்துகொள்வதாக தெரியும்.  அது குவிந்திருக்கும் தன் உருவை காத்துக்கொள்ள முயல்கிறது. அது இருக்கும் பரப்பு சாயும்போதுகூட தயங்கி தயங்கி உருண்டுசெல்கிறது, ஒர் மலரின் இதழில் ஆனந்தமாக அமர்ந்திருக்கிறது. புல்லின் நுனியில் விழாமல் நின்று சாகசம் செய்கிறது. ஒரு விளிம்பில் சொட்டிவிடாமல் தொங்கிக்கொண்டு தன் சாதுர்யத்தை காட்டுகிறது.  அமைதியான நீர்ப்பரப்பில் அது  விழும்போது நான் இருந்தேன் என்பதுபோல் ஒரு சத்தத்தை எழுப்புகிறது. நீர்த்துளிகள் தமக்கென ஒரு இருப்பை ஒரு பண்பை தக்க வைத்துக்கொள்ள முயல்கின்றன.
 
 
    பல்லாயிரம் நீர்த்துளிகளால் ஆன ஒரு  நீர்ப்பெருக்கின் இயல்பு அந்த நீர்த்துளிகளின் இயல்பைப்போல் அல்லவா இருக்கவேண்டும். இன்னும் கேட்டால் பல்லாயிரம் மடங்கு அதிகமாக அல்லவா இருக்கவேண்டும். ஆனால் பல விஷயங்களில் நீர்பெருக்கின் இயல்பு முற்றிலும் மாறாக இருக்கிறது.  நீர்ப்பெருக்கு தனக்கென ஒரு உருவைக்கொண்டிருக்க முயல்வதில்லை. இருக்கும் இடத்தின் வடிவை அடைகிறது.  எங்கும் சற்றும் தங்க நினைப்பதில்லை.   எக்கேள்வியும் கேட்காமல் புவியீர்ப்பின் விசைக்கு தன்னை உட்படுத்திக்கொள்கிறது.  அதில் தனிப்பட்ட நீர்துளிகள் ஒன்று சேர்ந்தது என்பதையே நாம் மறந்துவிடுகிறோம். ஓடும் நீர்ப்பெருக்கின் வேகம் சுழல் துள்ளல் சிதறல் வீழ்ச்சி எதுவும் 
தனிப்பட்ட நீர்த்துளியின் இயல்புக்கு மாறானதாக இருக்கிறது.  
   
 
இதைப்போல் தனிப்பட்ட ஒரு மனிதனின் தயக்கம், அறவுணர்வு, ஊக்கம், துணிவு, பயம், சிந்
திக்கும் திறன் போன்றவைக்கு  முற்றிலும் மாறானதாக ஒரு மக்களின் கூட்டம் கொண்டிருக்கிறது. மற்றொரு தனி மனிதனின் கூற்றை ஐயமுற்று, நம்பமறுக்கும் ஒரு மனிதன், ஒரு  கூட்டம் சொல்வதை அப்படியே ஏற்றுக்கொள்கிறான். அவனுக்கு மிகச் சரியென்று தோன்றியப்பபாதையை விட்டு  கூட்டத்தின் சொல்கேட்டு மாற்றிக்கொள்கிறான்.  எப்போது கூட்டம் போகும் பாதையில் தானும் செல்வதே பாதுகாப்பென நினைக்கிறான்.  ஒரு கூட்டத்திற்கு தனி மனிதனுக்கு இருக்கும் அற உணர்வு, அதை மீறுவதற்கான அச்சம், எதுவும் இருப்பதில்லை. தனிமனிதன் செய்யத் தயங்கும் செயல்களை ஒரு கூட்டம் மகிழ்வோடு செய்கிறது. ஒரு நிறுவனத்திற்கெதிராக சிறு குரல் எழுப்பக்கூட அஞ்சுவான் தனி மனிதன். ஆனால் ஒரு மனிதக்கூட்டம் அந்த நிறுவனத்தையே அடித்து நொறுக்கிவிடுகிறது.
      
  இன்றைய வெண்முரசில் மக்களின் குழு உளவியல் நன்றாக விளக்கப்பட்டிருக்கிறது.    இந்த மனித கூட்டத்தின் இயல்புகளை பத்மர் சொற்களின் வாயிலாகளிபடுத்தப்படுகிறது. 
“அரசே, மக்கள் விந்தைகளையும் மாயங்களையும் நம்ப விழைபவர்கள். இவனைக் குறித்த கதைகளை அவர்கள் முன்னரே நம்பிவிட்டனர். ஆகவே இதையும் அவர்கள் நம்பியாகவேண்டும்” என்றார் பத்மர்.
 
   ஆம், ஒரு தனி மனிதன் எந்த ஒரு அதிசய நிகழ்வையும் நம்ப மறுப்பான். அதை கண்டதும் அவன் முதலெண்ணம் இதில் எதோ ஏமாற்றுவேலை இருக்கிறது என்பதாக இருக்கும். அப்படியே அதை ஏமாற்றுவேலை என  நிறுவ முடியவில்லையென்றாலும் அதை நம்ப மறுப்பான்.  ஆனால் ஒரு கும்பல் உடனே அதிசயங்களை நம்புகிறது. மொத்த இந்திய நாடே பிள்ளையார் பால் குடிப்பதாக நம்பி பால் கிண்ணங்களுடன் அருகிலிருக்கும் பிள்ளையார் கோயிலுக்கு விரைந்ததை நாம் கண்டிருக்கிறோம்.  இன்னமும் ஒரு மணி நேரத்தில் பூகம்பம் வரப்போகிறது என எண்ணி புதுச்சேரி நகர மக்கள் முழுதும் வீடு விட்டு வெளிவந்து இரவு முழுதும் கழித்ததை கண்டிருக்கிறேன். ஒருவராவது பூகம்பம் இதுவரை சொல்லிவிட்டு வந்திருக்கிறதா என அறிய முற்படவில்லை. மற்ற மக்கள் நம்புகிறார்கள் அந்த ஆதாரமே போதும் என நினைக்கிறார்கள். கடந்த முறை சுனாமி வந்த ஒரு வாரத்திற்கு பிறகு இன்னொரு சுனாமி வந்துகொண்டே இருக்கிறது என்ற வதந்தியை நம்பி  பல்கலைக்கழகம் உட்பட அனைத்து கல்லூரி பள்ளிகளுக்கு விடுமுறை விட்டிருக்கிறார்கள். ஆனால் தனிப்பட்ட ஒரு மனிதனிடம் என் வீட்டில் நேற்று ஒரு  பாம்பு புகுந்தது  என்றால் என்ன  ஆதாரம் என்று கேட்பார்கள். அது தவறில்லை. ஆனால் அவனே ஒரு கூட்டத்தில் ஒருவனாக  ஒரு சாதாரண பொய்யை, அபத்தமான வதந்தியை  எளிதாக நம்புவான். 

   அதைப்போல் ஒரு தனிமனிதனை நாம் நினைக்கும்படி மாற்ற முடியாது. ஆனால் ஒரு கூட்டத்தை தகுந்த சொற்களோடு தான் விரும்பியபடி  மாற்றுவது அவ்வளவு சிரமமில்லை. கூட்டத்தில் அதை நிறையபேர் ஏற்றுக்கொள்கிறார்கள் என்ற பிரமையை தோற்றுவித்தால் போதுமானது.

சந்தையிலிருப்போர் சொற்திரைகள் அற்ற வெறும் விழைவால் மட்டுமே ஆனவர்கள்” பத்மர் சொன்னார். “அவன் அங்கே சென்று நின்று அவர்களின் விழைவுகளுடன் உரையாடினான். ஒரேநாளில் பல்லாயிரம்பேரை வென்றான். பெரும்படையெனத் திரண்டு நம் அரண்மனைமேல் வந்து அறைந்தான்.”  
 
ஒரு மக்கள் தலைவன் மக்களுக்கு ஒரு அச்சத்தை மூட்டி தன்பக்கம் இழுக்க முடியும். அதைப்போல் தனி ஆட்களாக மக்கள் கொண்டிருக்கும் அச்சத்தை ஒரு கூட்டத்தில் அவர்கள் நீக்கிகொள்வார்கள். பாதுகாப்பான முறையில் தன் வீரத்தை வன்முறையை வெளிப்படுத்த கூட்டம் மிகவும் வசதியானது  அல்லவா
?
 “ஆம், உண்மை. அவர்கள் அச்சத்தால் ஆனவர்கள். அச்சம் அவர்களை எளிதில் வெல்லும். ஆனால் அவர்கள் அவ்வச்சத்துக்காக எப்போதும் நாணமும் கொண்டிருக்கிறார்கள். அச்சத்தைக் கடக்கும் ஒவ்வொரு வாய்ப்பையும் அவர்கள் எடுத்துக்கொண்டு கொண்டாடுகிறார்கள். கூட்டமாக ஆவதே அவர்களின் அச்சத்தை அழிக்கும் முறை. இளவரசே, நாம் அவர்கள் மேல் கொண்டுள்ள தளை என்பது அச்சமே. அச்சம் அழிந்த மக்கள்திரள் என்பது நம்மால் ஆளப்பட முடியாத நாடு.” 

    இப்படி  இன்னும் பல  'மக்கள் கூட்டத்தின் உளவியல் நுட்பங்கள்' பத்மரின் பல்வேறு  கூற்றுக்களாக இன்று வெண்முரசில் கொடுக்கப்பட்டிருக்கின்றன்.

தண்டபானி துரைவேல்