Sunday, April 10, 2016

வட்டம்



அன்புள்ள ஜெவுக்கும் நண்பர்களுக்கும் வணக்கம்.

உலகம் ஒரு வட்டம் திரும்பி நடந்தால் ஒரு டிகிரி கோணத்தில் இருக்கும் ஆரம்ப புள்ளியை தொட திரும்பாமல் நடந்தால் முன்னுற்று ஐம்பத்தொன்பது டிகிரிகோணம் சுற்றி அலையவேண்டும் என்பது விதி.

திரும்புவது என்பது திருந்துவதால் வருவது, திருந்துவது என்பது எளிதாக நடக்ககூடிய காரியமா என்ன? அன்னையின் அருள்வேண்டும் அன்னை வழங்கும் ஞானம் வேண்டும்.

ரம்பகரம்பனை ஒன்றென உலகம் கண்டுக்கொண்டது ஒரு மாயை, ரத்தபீஜனை பலவென உலகம் கண்டுக்கொண்டது ஒரு மாயை. ரம்பகரம்பன் தன்னை ஒன்றென உலகம் கண்டு மயங்கியதால் பலம்கொண்டு நின்றார்கள் அழிந்தார்கள். ரத்தபீஜனை பலவென உலகம் கண்டு மயங்கியதால் அவனும் தான் தான் பலம்கொண்டு நின்று அழிந்தான்.

மகிஷியின் காமத்தில்,வெறுப்பில் கலந்து பிறந்த ரத்தபீஜன் சினத்தில் விழுந்து வளர்ந்தான். “அம்மா” என்று ஒரு அடி திரும்பி அடி எடுத்து வைத்திருந்தால் போதும் அப்படி திரும்பவிடாமல் அவனை உலகம் முழுக்க 359 அடி நடக்கவைத்தது சினம். சினத்தால் பெருகி பெருகி உலகம் முழுவதும் சுன்று அவன் வந்து சேர்ந்த  இடம் அதே “அம்மா” என்ற ஆதி இடம்தான்.

இழைக்கும் வினைவழியே அடும்காலன் எனை நடுங்க
அழைக்கும் பொழுது வந்து அஞ்சல் என்பாய் அத்தர் சித்தம் எல்லாம் 
குழைக்கும் களபக் குவிமுலை யாமாளைக் கோமளமே
உழைக்கும் பொழுது உன்னையே அன்னேயே என்பன் ஓடிவந்தே.அபிராமி அந்தாதி.

வாழ்க்கை மலரினும் மெல்லியதாக இனியதாக அகம் அறியும் ஒன்றாக இருக்கிறது, ஆனால் காமம், வெறுப்பு, சினம் அதை அறியவிடாமல் நானாக குவிந்து பெரும் சமர் முன் நிறுத்தி. இரத்தகளமாக்கி விளையாடுகிறது. எல்லா இரத்தத்தையும் இழந்து விழுந்து தடுமாறி அம்மா என்பதை அறியும் இரத்தபீஜன்களை முன்னமே அம்மாவை அறியவிடாமல் அம்மா ஏன் செய்கிறாள். அவளுக்கும் மகனோடு விளையாட ஆசையாக இருக்கிறது.

அன்புள்ள ஜெ ரம்பகரம்பன், ரத்தபீஜன் கதையில்,  இருமை, ஒருமை எனவும், ஒருமை பன்மையெனவும் மயங்கம் உலகில் மானிட அகம் நடத்தும் நாடகத்தை அழகாக வடித்து அந்த ஆடலை ரத்தபீஜனின் “அம்மா” என்ற சொல்லில் வந்து நிறுத்தும்போது அகம் ஆடலை மறந்து அமைதிக்கொள்கிறது. நன்றி ஜெ.

அன்புடன்
ராமராஜன் மாணிக்கவேல்.