Thursday, April 14, 2016

ஜரயன்னை




அன்னைகள் பெண்ணென மலரும் தருணமும், பெண்கள் அன்னையென கனியும் தருணமும் மண்ணில் காற்றின் அலையென கடந்துப்போய்க்கொண்டே இருக்கிறது. ஆனால் பெண்கள் அன்னையாகி அன்னைகள் வரமாதாவாகி வரும்  அரிதான தருணங்களில் மண்ணும்பொன்னாகிறது.

முதற்கனலில் கௌரன் என்னும் தன் துணையை இழந்த சுப்ரை என்னும் தாய்ப்பறவை தனது குஞ்சிகளிடம் 
//முதலில் என் குருதியைக் குடியுங்கள். பின்பு என் கால்களை உண்ணுங்கள். அதன்பின் என் கைகளை. என் இதயத்தை கடைசியாக உண்ணுங்கள். உங்கள் சிறகுகள் வளர்ந்ததும் பறந்துசெல்லுங்கள். என்னை நீங்கள் சிறிதும் மிச்சம் வைக்கலாகாது// என்று சொல்லும்.

தனது மகனுக்கு பாலிற்கு பதிலாக தனது விரல் அறுத்து குருதிக்கொடுக்கும் ஜரயன்னை இங்கு சுப்ரை பறவை செய்ததைத்தான் செய்கிறாள்.

புல்லாகி பூடாய் புழுவாய் மரமாகி
பல்மிருகமாகி பறவையாய் பாம்பாகி
கல்லாய் மனிதராய் பேயாய் கணங்களாய்  
வல்லசுராகி முனிவராய் தேவராய்
செல்லா நின்ற இத்தாவர சங்கமத்துகள்
எல்லா பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்
மெய்யே உன்பொன்னடிகள் கண்டு இன்று வீடுற்றேன். –மாணிக்கவாசகம்.

எந்த பிறவி எடுத்தால் என்ன? உணர்வின் ஆடிஆழத்தில் இருந்து எழுந்து வந்து  மலரும் அன்பு ஒன்றே. அது வலிதாங்கி தியாகமாகி வரமாகி வந்து நின்றுவிடுகின்றது.

வரம்தரும் இடத்தில் வந்து நிற்கும் ஜீவன் இறவாநிலை என்னும் இளமையில் வந்து நின்று கன்னியென இன்பம் விழையும் இதயம் கொள்கிறது. தெய்வம் என்றே ஆகின்றது.

தவம்போல வாழ்க்கையும் எத்தனை எத்தனை பெரிய துன்பங்களை கொடுத்தாலும் ஒரு கணம் பெரின்பத்தை ருசிக்க வைத்துவிடுகிறது.

//இனிய கனவுகளில் அவள் பெருநகர் ஒன்றின் அரசவீதியில் பட்டத்துயானைமேல் வைரமுடியும் பொற்கவசமும் அணிந்து தோளில் கதைப்படை ஏந்தி அமர்ந்து செல்லும் பேருடலன் ஒருவனை கனவுகண்டாள். அங்கே ஒரு சிறுதூண் மறைவில் நின்று அவள் அவன் தோள்கண்டு காமம் கொண்டாள். தூணை இருகைகளால் அணைத்து விழிசொக்கினாள்//

ஜரை தான் பெற்றப்பிள்ளையை இழந்து பித்தாகி மகத இளவரசனைப்பெற்று அவனுக்கு விரல் குருதி கொடுக்கையில் கன்னியென காமம் கொள்கிறாள். மானிடர் எந்த நிலையிலும் விழைவது இன்பமே.  பிறறைக்கொள்வதும் தன்னைக்கொள்வதும் அதற்காகத்தானா? தன்னைத்தான் சுவைத்த இளையஜரனும். தன்னை சுவைக்கக்கொடுத்த ஜரையும் விழைவது இன்பம்தானே.இன்பம் பெறுகையில் இளமை திரும்புகிறது அல்லது இறவாநிலை வாய்க்கிறது.

//அவள் வறுந்தலைப்பரப்பில் புதிய கூந்தல் எழுந்தது. ஈறு சுருங்கிய வாயில் ஒளிகொண்ட பற்கள் முளைத்தன. சிப்பிகள் போல் நகங்கள் கொண்டாள். நீர் நிறையும் சவ்வுப்பை தோற்சுருக்கங்கள் விரிந்து உடல் மெருகடைந்தது. அவள் நாளும் இளமை கொள்வதாக ஜரர் சொன்னார்கள்//

அன்னையாக இருப்பதே ஒரு தவம்தான்.

 RAMARAJAN MANIKKAVEL