Saturday, August 15, 2020

தேவவிரதன்



 இனிய ஜெயம் 


இந்த எட்டாவது ஓவியத்தில் முதன் முறையாக தேவ விரதன் எனும் பீஷ்மர் தோன்றுகிறார். இந்த ஓவியம் சார்ந்து சில சிந்தனைகள் எழுகிறது. ஏன் இந்த ஓவியத்தில் பீஷ்மரின் முகம் இல்லை?  பொதுவாக வெண் முரசின் ஓவிய மாந்தர்களுக்கு ஏன் முகமில்லை? 

ஷண்முகவேல் முகமற்ற கதாபாத்திரங்களை சித்தரிப்பதன் வழியே, தமிழ்நிலத்தின் தீவிர ஆளுமைகள் உள்ளிட்ட பொது மனதில் இருக்கும் முக்கியமான விடுபடல் ஒன்றினை கையாளுகிறார். அந்த விடுபட்டல் பொது மனதில் இருக்கும் பிற நுண் கலைகள் (ஓவியங்கள், சோழ செப்பு சிலைகள் போல) சார்ந்த ரசனை பயிற்சி இன்மை. 

கோழி முட்டை என்று ஒரு எழுத்தாளர் எழுதியதை தொடரும் ஒரு கோழி முட்டை ஓவியத்தை காணும் ஒருவன் வெகு எளிதாக ஐயையே எம் மனதுல இருந்த கோழி முட்ட இது இல்ல என்றுவிடுவான். ஐயா நீவிர் ரசித்த சிறந்த ஓவியம் ஐந்தினை ஒரு தர வரிசை பட்டியலின் படி சொல்லுங்களேன் என்று அவனிடம் கேட்டு பாருங்கள் தலையை சொறிவான். 

இது வெகுஜன தளத்தில் என்றால் தீவிர தளத்தில், அந்த வெகுஜனன் சொன்ன அதே கூற்றை கோட்பாட்டு மட்டையடி வாதகதியில் உரைப்பார்கள். இதே சூழல் கேரளத்தில் நிகழ்ந்தால் நிச்சயம் தமிழ் நிலத்தின் அசட்டுத்தனம் அங்கே இருக்காது. காரணம் களமெழுத்து போல ஏற்றுமானூர் ஓவியங்கள் போல இப்போதும் அங்கே பொது மனதின் முன் தோற்றத்தில் இருக்கும் ஓவிய மரபு. 

வாசுதேவன் நாயர் எழுதிய இரண்டாம் இடம் நாவலுக்கு வாசுதேவன் நம்பூதிரி வரைந்த பீமனை நிராகரிக்கும் ஒரு வாசகனை அங்கே பார்க்க முடியாது. மாறாக தமிழ் நிலத்தின் அகழியோ தாண்ட முடியாத ஆழம் கொண்டது. உதராரணமாக இரண்டாம் இடம் நாவல் குறிஞ்சி வேலன் மொழியாக்கத்தில் 2000இல் தமிழில் வந்தது. அட்டை ஓவியம் நம்பூதிரி. மொத்த நூலிலும் அவ்வோவியர் குறித்து சிறு குறிப்பு கூட இல்லை.

கேரளா மலப்புரம் மாவட்டம் பொன்னானியில் 1925 இல் பிறந்த வாசுதேவன் நம்பூதிரி, அவரது அருகாமை ஊரின் சுகபுரம் கோவில் கலைகளால் பதின் வயதில் கவரப்பட்டு, சென்னை ஓவியக் கல்லூரியின் துவக்ககால மாணவராக தேவி பிரசாத் ராய்சௌத்ரி யின் கீழ் ( சிற்பி தனபால் இவரது இணையர்) சிற்பங்களும் ஓவியங்களும் பயின்றார்  பஷீர் கதைகளுக்கு இவர் வரைந்த ஓவியங்கள் புகழ் பெற்றவை. மீஸான் கற்கள் நாவல் இவரது கதைச் சித்திரங்கள் அடங்கியதே. கலாமண்டலத்தில் செப்புத் தகட்டில் இவர் உருவாக்கிய மகாபாரத சித்திர வரிசை கேரளம் கொண்டாடும் பொக்கிஷமாக விளங்குகிறது. 

நம்பூதிரி வரைந்த பீமனில் கதகளி மற்றும் சோழ செப்பு சிலைகளின் உருவ அமைதிகளின் இணைப்பை காணலாம். மீஸான் கற்கள் கான் பகதூர் பூக்கோயா தங்கள் அப்படியே பேண்ட் சட்டை போட்ட கதகளி பாத்திரமேதான். தங்கள் மற்றும் பீமன் இருவரது கைகளின் விரல்களின் முத்திரை கதகளி முத்திரைக்கு அருகே வருவது.

ஆக கேரளத்தில் தமிழ் நிலம் போல, எதையுமே தெரிந்து கொள்ளாமல் எனக்கு தோணுச்சு என்று ஒன்றை மறுக்கும் அசட்டுத்தனம் நிச்சயம் கிடையாது. தமிழிலோ தீவிர தளத்திலும் பிற கலைகள் சார்ந்த அறியாமையும் எளிய அடிப்படைகளை கூட அக் கலை சார்ந்து தெரிந்து வைத்துக் கொள்ளக் கூடாது எனும் தன்னம்பிக்கையும் செயல்பாட்டில் இருக்கிறது. 

அடுத்ததாக ஒவ்வொரு கலையும்  தனித்துவமான முறையில் தொடர்புறுத்துகிறது. எழுத்தாளன் மொழியால். ஓவியன் வண்ணங்களால் இப்படி. படைப்பாளியின் ஆழ்மனம். அதிலிருந்து கிளர்ந்து புற வயமாக வடிவம் கொள்ளும் ஒன்று. அந்த புறவயமான வடிவத்திலிருந்து படைப்பாளியின் ஆழுள்ளத்தை உறிஞ்சி தனது ஆழுள்ளத்தில் நிறைத்துக் கொள்ளும் ரசிகன். இது ஒரு வட்டம். முழுமை. இதுவே இந்தியக் கலையின் இயங்கு விதி. (இந்த அடிப்படை சொரணை அற்ற கூட்டமே பின்நவீனத்துவ தத்துவர் சொன்னவற்றை அது சார்ந்த சொரணையும் இன்றி  தமிழ்  நிலத்தில்தரவிறக்கி சாமியாடிக் கொண்டிருந்தனர். ஆட்டம் இன்னும் ஓய்ந்த பாடில்லை) இந்த முழுமை வட்டத்தின்  எழுத்தும் ஓவியமுமான இரு வேறு வேறு தனித்த ரசனையை ஒரே சமயத்தில் அனுபவிக்கும் டபுள் தமாக்கா சந்தோஷத்தையே வெண்முரசில் ஜெயமோகனும் ஓவியர் ஷண்முகவேலும் வாசகர்களுக்கு அளிக்கிறார்கள்.

உதாரணமாக இந்த பீஷ்மர் ஓவியம்.  ஜெயமோகன் மொழியால் சித்தரித்த பீஷ்மரை ஓவியர் என்னவாக மறு உருவாக்கம் செய்திருக்கிறார்? ஏன் பீஷ்மருக்கு முகம் இல்லை? அடிப்படை பதில் ஓவியர் யார் பீஷ்மரோ அவரை சித்தரிக்கவில்லை. எது பீஷ்மராக வெளிப்படுகிறதோ அதை சித்தரிக்கிறார் என்பதே. இந்த புரிதலின் பின்புலத்தில் ஓவியத்தைக் காண்போம். பீஷ்மரின் கால்களை பார்க்க முடியவில்லை. ஒளியில் பூமியில் எங்கோ புதைந்திருக்கிறது. முகத்தைப் பார்க்க முடியவில்லை. கண்காணா உயரத்தில் விண்ணில் எங்கோ புதைந்திருக்கிறது. ஆம். விண்ணும் மண்ணும் இணைய எழுந்து நிற்கும் வியனுறு. விஸ்வரூபன். வில் ஏந்தி போரில் இறங்கும் பீஷ்மருக்குள் எழுந்து நிற்கும் ஆற்றல் இது. 
எது பீஷ்மர் எனும் நாமம் சூடி இங்கே வந்ததோ அந்த ஆற்றல் இது. அந்த அகவயமான ஆற்றலின் புறவயமான கலை வெளிப்பாடே ஷண்முகவேலின் இந்த பீஷ்மர்.


கடலூர் சீனு