Friday, August 14, 2020

நீத்தார் கடனும் பெண்களும்


 அன்புநிறை ஜெ,


இன்று பன்னிரு படைக்களம் முடிந்து சொல்வளர்காடு துவங்கினேன். 

உத்தாலகர் வேதங்களை முழுதறிய நாற்பது வருடங்கள் ஆகிறது. அதன் பிறகு முதிய வயதில் மணம் செய்து ஆறாண்டுகாலம் கழித்து பெண் மகவே பிறக்கிறது. நீரளித்து தன்னை விண்ணேற்ற மைந்தன் இல்லையே என வருந்துகிறார். நியோக முறையில் மைந்தன் ஸ்வேதகேதுவைப் பெறுகிறார். 
இது மகாபாரதத்தில் மீள மீள வரும் பிரச்சனை. நீர்க்கடன் செய்வதற்கு யாருமில்லாமல் போவதே எரிநரகு என்றாகிறது.

நமது மரபில் பெண் குழந்தைகளை மட்டும் பெற்றவர்களுக்கு, குழந்தைப்பேறு அற்றவர்களுக்கு நீர்க்கடன் மற்றும் விண்ணேற்றம் செய்வதற்கான வழி இல்லையா? அவர்களது நிலை என்ன? பன்னிரு வகையான மைந்தர்களைப் பற்றிய குறிப்பு மழைப்பாடலில்  வரும். அதற்கான மனவிரிவும் அற்ற சமூகத்தில் இது எப்படி நிகழும்? 

பெண் வழி வாரிசுகளின் நீர்க்கடன் உரிமைகள்/கடமைகள் குறித்து தாய்வழி சமூக மரபுள்ள குடிகளில் வேறு நியமங்கள் உள்ளதா?

மிக்க அன்புடன்,
சுபா

அன்புள்ள சுபா

நானறிந்தவரை மறைந்தோருக்கான எரிகடன்களையும் நீர்க்கடன்கயும்ளை பெண்கள் செலுத்துவது பற்றிய எந்தக்குறிப்பும் இந்து மதமரபுகளில் இல்லை. இது அன்றைய ஆசாரமரபுகளின் அடிப்படை என்று கொள்வதே உகந்தது

ஆனால் இன்று பெண்கள் அச்சடங்குகளை செய்வது ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. காசியிலேயே பெண்கள் செய்வதை கண்டேன்.  இது ஒரு புதிய விஷயம், ஒரு வளர்ச்சிநிலை

ஜெ