Wednesday, August 19, 2020

வெண்முரசின் கதைகள்

 

அன்பின் ஆசிரியர் அவர்களுக்கு

     எல்லோருக்கும் போலவே எனக்கும் வெண்முரசு முடிந்தது வருத்தமாகவே இருந்தது. ஆனாலும் அதை மறுபடியும் படித்துப் புரிந்து கொள்ள ஓர் ஆயுள் போதாது. உங்கள் தளத்தை நான் முதன் முதலில் அடையும்போது வெண்முரசைப் பற்றி ஒன்றும் தெரியாது. எல்லாப் பதிவுகளையும் ஒவ்வொன்றாய் படிக்க ஆரம்பித்தேன். வெண்முரசைப் பற்றி அறிந்ததும் அது மகாபாரதக்கதை என்று அதை மட்டும் விட்டுவிட்டு மற்றவற்றை படிப்பேன். ஒருநாள் வேறொரு கட்டுரைக்குப் பதிலாக வெண்முரசு திறந்தது. அத்தனை நாள் அதை எப்படி விட்டோம் என்று ரொம்பவே வருத்தப்பட்டேன். பின் முதற்கனலில் இருந்து படிக்க ஆரம்பித்தேன். பிள்ளைகளுக்கு இரவில் கதை சொல்லும்போது முதற்கனலில் இருந்து ஆரம்பித்தேன்.

     இரண்டு நாட்கள் சென்றதும் என் கணவர் என்னிடம் தனியாக அந்தக் கதை எல்லாம் பிள்ளைகளுக்கு சொல்லவேண்டாம் என்று சொல்லி விட்டார். எனவே எனக்குள் நான் மட்டுமே மகிழ்ந்து, அழுது, சிரித்து, உணர்ச்சி வசப்பட்டு படிக்கிறேன். ஆனால் எப்படியும் பீமன் கதை சொல்லிவிடுவேன். அழகியல், தத்துவங்கள், வேதங்கள், வேதாந்தம் அவைகளை விட எனக்கு வெண்முரசின் பெண்கள் தான் மிகப் பிடித்தமானவர்கள். எத்தனை விதமான பெண்கள். சில கோவில்களில் உள்ள சிலைகளைப் பற்றிப் படிக்கும்போது ஒவ்வொரு பெண் சிலையின் தலை அலங்காரங்கள், நகைகளின் வடிவங்கள் ஒரே போல் இருக்காது என்று படித்திருப்போம். அதேபோல் ஒவ்வொரு பெண்ணிற்கும் எத்தனை வேறுபாடுகள். சத்தியவதி, குந்தி, வசுமதி, கௌரவர்களின் அம்மாக்கள், தேவயானி, சர்மிஷ்டை, பானுமதி, அசோக சுந்தரி, அசலை, மாயை, சம்விரதை,  எல்லோருக்கும் மேலாக மகுடம் போல் ராதை மற்றும் பாஞ்சாலி இன்னும் இன்னும் எண்ணிக்கையில் அடங்கா. என்னோடு பணிபுரிகிற பெண்கள் ஒவ்வொருவருக்கும் நான் ஒரு புதிய புராணப் பெயர் எனக்குள் வைத்துள்ளேன்.

     இதுவும் ஒரு பெரிய கோவில் கட்டுவது போல் பிரம்மாண்டமாய் கட்டி எழுப்பி விட்டீர்கள். அம்மாடி எவ்ளோ பெரிசு என்று வியந்து வெளியில் நின்று விடலாம். எத்தனை தூண் இருக்கு என்று எண்ணி வைக்கலாம். இப்படிக் கட்டலாமா விதி என்ன சொல்கிறது என்று ஆராய்ச்சி செய்யலாம். இது எங்களைப் புண்படுத்துகிறது என்று போர்க்கொடி தூக்கலாம். இலக்கணப் பிழை, எழுத்துப்பிழை என்று நடுவில் ஓடலாம். கண்ணீர் மல்க சாமி கும்பிடலாம். ஒவ்வொன்றாய் இழை பிரித்து ரசிக்கலாம். யாரும் என்ன வேணாலும் செய்யலாம். அது பிரம்மாண்டமாய் நிற்கும்.

     இமைக்கணம் படிக்கும்போது பயமாய் இருந்தது. கடவுள் இருக்கிறாரா இல்லையா, செத்து எங்கே போவோம். நிஜமாலுமே நினைத்தேன். ஒழுங்கா பெந்தகோஸ்தே நம்பிக்கை படியே இருந்திருக்கலாம். பரலோகம் உண்டு. இயேசு கிறிஸ்து உண்டு. மறுவாழ்வு கிடையாது. நாம உண்டு. நம்ப பாரம்பரியப்படி கைதட்டி பாட்டுப்பாடி அல்லேலூயா சொல்லி அழுது மன்றாடி சந்தோஷமாய் இருந்திருக்கலாம். எல்லா நம்பிக்கைகளும் சிதறி உடைந்து போனது. ஆனாலும் பைபிளின் வசனங்கள் புதியதாய் தோன்ற ஆரம்பித்தது. இடைக்கிடையில் மற்ற வெண்முரசின் புத்தகங்கள் எடுத்துப் படிப்பேன். இமைக்கணம் மறந்தும் எடுக்க மாட்டேன். ஆனால் மறுபடியும் நிதானமாக படிக்க ஆசை உள்ளது. எனக்குப் புரியாத, தெரியாதப்  பகுதிகளை அறிந்து கொள்ள உதவியது கடிதங்கள்தான். கடிதம் எழுதிய ஒவ்வொருவருக்கும் நன்றி.

     வெண்முரசின் முடிவைத் தெரிந்து கொண்டபோது என்னமோ நானே பெரிய சாதனை செய்ததுபோல் மகிழ்ச்சியாய் இருந்தது. அன்று வீட்டுக்குப் போகும்போது பிள்ளைகளுக்கு ஸ்வீட் வாங்கிக்கொண்டுப் போனேன். உங்கள் தளம் ஒவ்வொரு நாளும் படிக்கும்போதும் நிறைய பேர்கள் என்னோடு உண்டு என்று நினைக்கத் தோன்றும். இத்தனைக்கும் ஒருவரோடு கூடத் தொடர்பில்லை. வீட்ல யாருக்கும் மகாபாரதம் படிக்கிறேன் என்று தெரியாது.

வாழ்த்துக்கள் சார். 

டெய்ஸி பிரிஸ்பேன்