Wednesday, August 19, 2020

குந்தியின் சபதம்

 

அன்புள்ள ஜெ

குந்தியை வெண்முரசு முழுக்க ஒருவகையாகவே காண்கிறோம். ஆவேசமான ஒர் அன்னை. தன் குழந்தைகள் நலனுக்காக என்னவேண்டுமென்றாலும் செய்பவள். சூழ்ச்சிக்காரி. ஆனால் குந்தியின் மனநிலையைப் புரிந்துகொள்ள முக்கியமான அத்தியாயம் மழைப்பாடலில் குந்தி பாண்டுவை ஆழமாக அடையாளம் காணும் இடம். [மழைப்பாடல் 54] நான் மிகுந்த மனஎழுச்சியுடன் வாசித்த அத்தியாயம் அது. அதன் அழகையும் உணர்ச்சிகரத்தையும் இன்னமும்கூட நான் வாசித்துமுடிக்கவில்லை. 

குந்தி பாண்டுவை அணைத்து ‘ஏன் எப்போதும் ஒரு பதற்றம்?’ என்று கேட்கிறாள்.  ‘தெரியவில்லை. ஆனால் எப்போதும் இப்படித்தான் இருக்கிறேன்” என்று அவன் சொல்கிறான்.பயப்படவேண்டாம்,நான் இருக்கிறேன். என்னையும் என் கணவனையும் என் சுற்றத்தையும் நாட்டையும் பேணிக்கொள்ள என்னால் முடியும். எனக்குத் துணையோ படைக்கலங்களோ தேவையில்லைஎன்று குந்தி சொன்னாள். “ஆம் அதையும் அறிவேன். நீ கொற்றவை. எனக்காக அன்னபூரணியாக தோற்றமளிக்கிறாய்.” என்று பாண்டு சொல்கிறான். 

அந்த இடம்தான் அவளை நிரந்தரமாக பாண்டுவுக்கு கட்டுப்பட்டவளாக ஆக்குகிறது. வாழ்நாளெல்லாம் அவள் போரிட்டது கணவனின் ஆசைக்காகத்தான். அது நிறைவேறிய மறுகணமே விடுதலைபெற்றவள் ஆகிவிடுகிறாள்

சரவணக்குமார்