Tuesday, August 18, 2020

கனவுகள்

 

அன்புள்ள ஜெ

திரும்பி வெண்முரசை வாசிக்கும்போது மனதை வேறுவகையான உணர்ச்சிகள் அலைக்கழிக்கின்றன. பிரயாகையை வாசித்துக்கொண்டிருந்தேன். அதில் படகில் போகும்போது பாண்டவர்கள் இளைஞர்களாக தங்கள் மண்ணாசையையும் புகழாசையையும் பேசிக்கொண்டிருக்கும் இடம் படபடப்பை அளித்தது. எவ்வளவு அப்பட்டமான தாகம். அதுதான் குருக்ஷேத்திரத்திலே அவ்வளவு பெரிய அழிவை அளித்தது. ஆனால் இளைஞர்கள் அதைப்பேசும்போது அழகாக இருக்கிறது

அந்தக்காட்சியே அழகாக வர்ணிக்கப்பட்டுள்ளது. கங்கையில் படகு செல்கிறது. அவர்களின் விழைவு கனவு போல அதில் பாய்கள் புடைக்கின்றன. அது இனிமையான கனவு, ஆனால் வாழ்க்கையையே பலிகோருவது. ஆனால் அப்போது அது தெரிவதில்லை. அதை பின்னர் நினைத்தால் அவர்கள் கசப்படைந்திருப்பார்கள். சொல்லப்போனால் நிறைவேறாத கனவுகள்தான் இனிமையானவை

ராஜசேகர்