Saturday, August 22, 2020

அறிதல்நிலைகள்

 

அன்புள்ள ஜெ

நான் வெண்முரசில் மழைப்பாடல் வரைத்தான் படித்திருக்கிறேன். ஆனால் கிருஷ்ணஜெயந்தி அன்று வாட்ஸப்பில் இந்த படமும் வரிகளும் வந்தன.

கண்ணானாய்!

காண்பதானாய்!

கருத்தானாய்!

காலமானாய்!

கடுவெளியானாய்!

கடந்தோய்

கருநீலத் தழல்மணியே!

அந்த சொற்களின் வரிசையே ஆச்சரியமாக இருந்தது. கண்ணனைப்பற்றிய வரி. நாம் அறிவதன் அடுக்குகள். கண்ணானவன், அக்கண்களால் காணப்படுவனவாக ஆனவன். அந்த பிரத்யட்சத்தின் உள்ளே அமையும் கருத்தாக ஆனவன். அந்த கருத்து திகழும் காலமானவன். காலத்தின் விரிவான கருவெளியானவன். அனைத்தையும் கடந்தவன்.

subjectivity ,objective reality ,cosmic idea, cosmic time, Cosmos, absolute என்று ஆறு நிலைகளில் நாம் அறிபவை திகழ்கின்றன. ஆறுநிலைகளிலும் திகழ்பவன்.ஆனால் என் கையிலிருக்கும் கருநீலக்குழந்தை.

பக்திபாவத்தில் எப்போதுமே ஒரு absolute உணர்வும் கூடவே ஒரு mundane உணர்வும் இருக்கும். அறியவே முடியாதவன் என்றும் இந்தகோயிலில் இந்த வடிவில் இருப்பவன் என்றும் ஒரே சமயம் சொல்லுவதே பக்திப்பாடல்களின் மரபு. ஓர் உரைநடை இந்த அளவுக்கு செறிவாக எழுதப்பட்டு ஒரு நாவலாக ஆகியிருக்கிறதென்றால் அதை நினைத்தே பார்க்கமுடியவில்லை. ஒரு பரவசநிலையில்தான் எழுதப்பட்டிருக்கவேண்டும்

ஆர்.கண்ணன்