Tuesday, August 11, 2020

பீஷ்மர்

 அன்புள்ள ஜெ

வெண்முரசு மகாபாரதம் என்று சாதாரணமாகச் சொல்பவர்களை சந்தித்துக்கொண்டே இருக்கிறேன். அவர்களுக்கு நவீன இலக்கியத்தின் சாத்தியங்கள் என்னென்ன என்று தெரியாது. நான் அவர்களிடம் பீஷ்மரின் கதையை மட்டும் சுருக்கமாகச் சொல்வேன். பீஷ்மர் தன்னை புரு என நினைக்கிறார். ஆனால் முதற்கனல் நாவலில் நாகசூதன் காட்டிய நஞ்சுக்கோப்பையில் அவருடைய முகம் யயாதியாக தெரிகிறது. அதிர்ச்சி அடைகிறார்.

நான் உங்கள் சாவின்போது வருவேன் என்று நாகசூதன் சொல்கிறான். அவன் களிற்றியானைநிரையில் வருகிறான். அவன் கொண்டுவரும் பறவை அவருடைய சொல்லை மட்டும் சொல்லாது. அதுதான் அவருடைய கடைசிச்சொல். புரு என்று அது சொல்லவில்லை. அவர் உயிர்துறக்கிறார்.

புரு போல இளமையிலேயே முதுமைகொண்ட வாழ்க்கையை வாழ்ந்தவர், உள்ளூர யயாதியாகவே இருந்தார். சாகும்போது புருவாக உள்ளேயும் மாறினார். அதுதான் அவர் நிறைவு. இந்த கதையை எங்கே கேட்டீர்கள் என்றேன். அவரால் பதில்சொல்லமுடியவில்லை. வெண்முரசின் இந்தப்பயணமே அதன் ஆழம். அதைவாசிக்க மரபிலக்கியமும் நவீன இலக்கியமும் தெரிந்த வாசகர்களால்தான் முடியும். ரெண்டில் ஒன்றில் பழக்கமிருந்தாலும் முடியாது

எஸ்.கிருஷ்ணகுமார்