Sunday, July 1, 2018

செந்நாவேங்கை – பெருந்தோழி



வெண்முரசின் பாத்திரங்களுக்கு மிக வலுவான உளவியல் பின்னணி இருப்பதை நாம் அனைவருமே கவனித்திருப்போம். சில சம்பவங்கள் இத்தகைய பின்னணி எதுவுமில்லாமலேயே அரங்கேறி விடுவதும், அதன் பிறகு அதற்குக் காரணங்களை கண்டடைவதும் வெண்முரசின் வாசிப்பில் நிறைவே நிகழ்ந்துள்ளன. வெண்முரசில் பெருந்தோழி மாயையின் பாத்திர வடிவமைப்பு அத்தகைய ஒன்று. பொதுவாக நாம் அறிந்த நிகழ்வுகளுக்கு மாறாக குருதியள்ளி கூந்தல் முடிப்பேன் என சூளுரைப்பது மாயை. பன்னிரு படைக்களத்தில் அவ்வாறு சூளுரைத்த மாயை மீண்டும் வருவது குருதிச்சாரலில் தான். இத்தனை நாள் அவள் அந்த வஞ்சத்தை விடாமல் பற்றி இருக்கிறாள். ஏன்? முதன்மை வினாவாக அவள் ஏன் இத்தகையதோர் வஞ்சினம் உரைத்தாள்?

வெண்முரசு நனவுள்ளத்துக்கு உகக்காத, புரிந்து கொள்ள இயலாத சில உணர்வுகளை, கதாபாத்திரங்களுக்கு இடையேயான ஊடாட்டங்களாக, அவர்களுக்குகிடையேயான நிகழ்வுகளாக முன்வைத்து செல்வது வழக்கம். இதில் முக்கியமானது அர்ஜுனனுக்கும், கர்ணனுக்குமான உணர்வுகள். முக்கியமாக திரௌபதியை முன்வைத்தான உணர்வுகள். வெண்முகில் நகரத்தில் திரௌபதியுடனான தனி இரவு நாள் முழுவதும் அர்ஜுனனை ஆக்கிரமிப்பது சினம் தான். இன்னதென்று அவனாலேயே விளங்க இயலாத சினம். அதை சகதேவன் அவன் மனதில் உள்ள பெண் அவன் அன்னை என்பதால் அவனுக்கு வந்த சினம் என விளங்கிக் கொண்டு அவனுக்கு அன்னை சிவகாமி மீது ஆசைப்பட்ட அந்தகாசுரனின் கதையை சூதர்களைக் கொண்டு பாட வைக்கிறான். அக்கதையில் அன்னை அந்தகனிடம் நான் உனக்கு ஊட்டிய தாய்ப்பால் போதவில்லை எனக் கூறுமிடத்தில் அவன் அதுவரை குந்தியின் மீதிருந்த விலக்கம் ஓய்ந்து விடுபடுவான் என எதிர்பார்க்கிறான். அது ஓரளவு உண்மை தான். ஆனால் அன்று அந்த சூதர்களிடம் பெருந்தோழி மாயை சொல்லும்படி  பணித்தது அக்னிதேவன் மீது காதல் கொண்ட ஸ்வாஹா தேவி, அவன் காமம் கொண்ட சிவையின் உருவில் அவனை அடைந்து அவனது அறத்துணைவியான கதையை. அர்ஜுனன் அக்கதையைக் கேட்க மாயையயே வரவழைக்கிறான். அக்கதையின் முடிவில் அவளுடன் உறவும் கொள்கிறான். திரௌபதிக்கு முன்பாக அவளுடன் உறவு கொண்டு அவனில் நிறைந்த மொத்த சினத்தில் இருந்தும் விடுதலை கொள்கிறான். இதன் தொடர்ச்சியாக அமைவது தான் அர்ஜுனன் திரௌபதியின் முதல் இரவு நிகழ்வுகள்.

முதலில் உருமாற்றம், நிஜம், நிழல் என விரியும் ஸ்வாஹா தேவியின் கதையை மாயை ஏன் தேர்ந்தெடுத்தாள்? அர்ஜுனன் கொண்ட பெருஞ்சினம் எதனால்? சகதேவன் எண்ணியது போன்று அவன் அன்னையுடனான விலக்கம் தான் அதற்குக் காரணமா? (சகதேவன் குந்தியைப் பற்றியும், அவளுக்கும் பீமனுக்குமான ஓர் உரையாடலைப் பற்றியும் பேசிய பிறகே அவன் சற்று இயல்பாகிறான். எனவே சகதேவன் அவனது சினத்துக்கு குந்தியுடனான அவனது விலக்கம் கொண்ட உறவே காரணம் என நினைக்கிறான்.) இந்த சினத்தை திரௌபதியுடன் இணைத்து விளங்கிக் கொள்வதே சரியாக இருக்கும். அர்ஜுனன் கொள்ளும் சினம் அவன் முன்பு ஒருவனிடம் கண்டது. அது ஐந்தாவது அம்பை, கேசினி கிளியை அடிக்கச் செலுத்தும் முன் கர்ணன் உடலில் ஊறிய சினம். இங்கே ஸ்வாஹா தேவியின் கதையில் வரும் நிஜம், நிழல் என்பதாக அர்ஜுனன், கர்ணனை வைத்துப் பார்த்தால் அர்ஜுனனின் சினத்தின் காரணம் இன்னும் தெளிவாக விளங்கும். மாயையுடன் கூடுவதால் அர்ஜுனன் விடுபடுவதும் இச்சினத்தில் இருந்து தான். இதை உணர்ந்து தான் திரௌபதி கொந்தளிக்கிறாள்.

அதிலும் குறிப்பாக அர்ஜுனனுக்குச் சொல்ல அந்த கதையை ஏன் தேர்ந்தெடுத்தாள்? அதையும் திரௌபதியே கூறுகிறாள், மாயையுடனான உறவின் மூலம் அவன் அவளை மாயையின் நிழல் ஆக்கி விட்டதாக. அர்ஜுனன் கூறுவதைப் போல இது திரௌபதியும், மாயையும் ஆடும் ஆடல். இளவயதில் இருந்தே திரௌபதியைக் காணும் கண்கள் மாயையும் கண்டே வருகின்றன. அக்கண்கள் இருவருக்கும் இருவகையில் பொருள் அளித்திருக்கக் கூடும். மாயையைப் பொறுத்தவரையில் அவை அவளுடைய அழகின்மையையும், திரௌபதியின் நிழலாக, திரௌபதியின் மாற்றுருவாக, திரௌபதியின் குறைகள் தேங்கிய அகமுடையவளாக அவளை ஆக்கி இருக்கின்றன. திரௌபதியைப் பொறுத்த வரையில் அவை மாயையை திரௌபதி என்றே காண்பதாகக் கூறியிருக்கின்றன. இக்கண்களே அவர்களுக்கு இடையேயான உறவின் ஆழத்தைத் தீர்மானித்திருக்கின்றன.

பிரயாகையில் தருமனைக் கண்ட பிறகு வரும் திரௌபதிக்கும், மாயைக்குமான உரையாடல் இதற்கு ஒரு மிகச் சிறந்த சான்று. மாயையை மிக நுட்பமாகச் சீண்டி, அவமானப்படுத்துகிறாள் திரௌபதி. அதற்குக் காரணம் அவள் கர்ணனைப் பற்றி மாயையிடம் வினவி, அறிய வேண்டிய தருணத்தில் ஒரு காதலிளம்பெண்ணாக மாயை முன் நிற்க வேண்டி வந்ததே. திரௌபதியைப் பொறுத்தவரை அது ஒரு வித நிர்மால்யம் தான். அது அவள் பிறர் அறியாவண்ணம் வைத்திருந்த ஒரு அபூர்வம். அதை மாயை அறிந்த ஒரு கணத்தில் அவளது ஆழம் சீண்டப்பட்டிருக்கக் கூடும். அன்று மாயை அடைந்த ஒரு விலகலை அவள் அர்ஜுனனை திரௌபதிக்கு முன் காமம் ஆடுவதன் மூலம் நிகர் செய்கிறாள். அல்லது அவ்வாறு எண்ணுகிறாள். அந்த நிகழ்வுக்குப் பிறகு மாயைக்கும், திரௌபதிக்குமான உறவு பற்றி வெண்முரசு எதுவும் சொல்லவில்லை.

என்ன தான் நடந்திருக்கக் கூடும்? திரௌபதி மாயையைப் பொருட்படுத்தாமல், அப்படி இரு நிகழ்வு நடந்ததன் சுவடே இல்லாமல் கடந்து சென்றிருப்பாள். மாயையுடன் பாரா முகத்தோடு கூட இருந்திருப்பாள். கர்ணனைக் குறித்து திரௌபதியின் கன்னி இள நெஞ்சை அறிந்த மாயையின் எண்ணத்தை அவளது உடல் அசைவிலேயே அறியும் திரௌபதி அடுத்ததாகச் செய்வது இத்தகையதோர் புறக்கணிப்பைத் தான். மாயையும் ஒரு மீளா குற்ற உணர்வில் சென்று சேர்ந்திருக்கக் கூடும். அவளது வாழ்விலும் அர்ஜுனன் தாண்டிய பிறிதோர் ஆண்மகன் இல்லை. அவ்வகையில் அவளும் ஒரு சுபகையே. இதற்குப் பிறகு மாயை வருவது பன்னிருபடைக்களத்தில் தான். அவளது குற்ற உணர்வே அவளை அத்தகையதோர் வஞ்சத்தைத் தேர்ந்தேடுக்க வைத்திருக்கலாம். வாழ்வில் பிடிப்பின்றி வாழ்ந்த அவள் தன் கொழுக் கொம்பாக இவ்வஞ்சத்தைப் பற்றியிருக்கலாம். அவள் பற்றியெரியும் உடலாகத் தான் இத்தனைக் காலமும் இருந்தாள். கொழுங்குருதி பூசி தன் ஐம்புரி கூந்தலை நீள் சடையாக மாற்றி வைத்திருக்கிறாள்.

இப்போது மாயை தீயிடை வீழ்ந்து அந்த நெருப்பை திரௌபதியிடம் கையளித்துச் சென்றிருக்கிறாள். உண்மையில் மாயை திரௌபதிக்குச் சொன்னது என்ன? அவர்கள் பேசிக் கொள்ளவே இல்லை. இருப்பினும் மாயையின் தோற்றம் அவளுக்கு அவள் மணத் தன்னேற்பிற்கு முன் கேசினி அன்னை ஆலயத்தில் அவள் அறிந்த மூதன்னையரை நினைவூட்டுகிறது. காட்டுத் தெய்வத்தையே கட்டிய மூதன்னையின் கருணையை நினைவூட்டுகிறது. அன்னையர் ஆண்ட அறம் பிழைக்காத மண்ணை நினைவூட்டுகிறது. அவளை சூழ இருந்த கோரைப் புல்வெளியை எரித்து நரிகளை விரட்டிய உக்ர சண்டியாக மாற்றுகிறது. எனவே தான் இதுநாள் வரையில் என்னில் வஞ்சம் இல்லை என கூறிய திரௌபதி மாயையின் எரிபுகலுக்குப் பின் மூதன்னையாக மாறி ஆணையிடுகிறாள். குருதி கொண்டு கூந்தல் முடிந்து நிலை நாட்ட வேண்டியதே அறம் என அறைகூவுகிறாள். வெண்முரசின் குறும்பாத்திரங்களின் வரிசையில் மாயை நீங்கா இடம் பெற்றுவிட்டாள்.

அன்புடன்,

அருணாச்சலம் மகராஜன்