கதை முழுதும் வந்துகொண்டிருக்கும் இருமை எது என்பதை அருணாச்சலத்தின் வாசிப்பு உணர்த்தியிருக்கிறது. ஆழமும் இருப்பும் இதுவரை வந்த கதைமாந்தர் அனைவருக்குள்ளும் போர்புரிவதை உணரலாம். ரம்பகரம்பன் முதல் பிருஹத்ரதன் வரை.
ஜரையன்னை இருப்பில் பிள்ளைப்பேறில்லாதவள். அவள் பிறவிக்குறிகள் அவ்வாறே சொல்கின்றன. ஆழத்தின் அடியிலிகள்வரை சென்று பிள்ளைப்பேற்றை அடைகிறாள். அதையும் இருப்பில் இழந்தபிறகு ஆழத்திற்கே சென்று மகிஷப்பிள்ளையுடன் மகிழ்ச்சியாக வாழ்கிறாள்.
பிருஹத்ரதனின் நிலையும் அதுவே. இருப்பில் மாமன்னனாகும் தகுதி அவனுக்கு வாய்த்தது. பிள்ளைப்பேறு வாய்க்கவில்லை. ஆழத்தில் சென்று அதை அடைய முயல்கிறான். தமஸாரண்யம் ஆழத்தின் காடு. மெய்ம்மை முழுதறிந்த காக்ஷீவானின் ஆழம். அங்கு சென்றபிறகே பிள்ளைப்பேறு வாய்க்கிறது. அந்தப்பிள்ளையை ஆழத்தின் பிடியிலிருந்து முழுதும் மேலே கொண்டுவர விடியலுக்குள் சுருதவாகினி ஆற்றைக்கடக்கவேண்டும் என்ற விதி இருக்கிறது. அதைச் செய்யமுயலும்போதே அணிகையும் அன்னதையும் ஆழத்திற்கு ஆட்படுகின்றார்கள். குழவி விஸ்வகர்மாவால் பிளக்கப்பட்ட சம்க்ஞையாகவும் சாயையாகவும் பிறக்கிறது.
வாசிப்பின் ஆழங்களுக்குச் செல்வதுதான் எவ்வளவு பெரிய அனுபவம்!
திருமூலநாதன்