Wednesday, March 28, 2018

உயிர்க்கோளத்தை சுழல வைக்கும் இறப்பெனும் விசை. (இமைக்கணம் -1)


          
 நாமிருக்கும் பேரண்டம்  விரிந்துகொண்டிருக்கிறது.  விண்மீன்கள் பிறந்து வளர்ந்து வெடித்து  கருந்துளையென உருமாறுகின்றன. கோள்கள் விண்மீன்களை சுற்றியபடியும் தன்னைத்தானே சுழன்றபடியும் இருக்கின்றன. உலகில் எறியப்படும் எதுவும்  மீண்டும் நிலத்தில் வந்து விழுகின்றது.   இப்படியான அனைத்து நிகழ்வுகளுக்கும் காரணமென இருப்பது ஈர்ப்புவிசை மட்டுமே.  ஒரே விசையினைக்கொண்டு அண்டத்தின் அனைத்து  விசைகளையும் வகுத்துக்கொள்ள முடியும் என்று அறிவியலாளர்கள் கருதுகிறார்கள்.  அதாவது அண்டப் பேரியக்கத்திற்கு மூலமாக இருப்பது ஒரே விசையென கருதப்படுகிறது. 

         
 அதைபோன்று உலகில் உயிர்க்குலங்கள் பல்கிப் பெருகி இருப்பதும், அவை பல்வேறு உடல் அமைப்புகளை, பல்வேறு திறன்களை கொண்டிருப்பதும் மற்றும் அவைகளுக்கென  பல்வேறு உணவு முறைகள் இருப்பதும்,  அவற்றுக்குள் விதவிதமான பகைகள்,  ஒருங்கிணைப்புகள் போன்றவை ஏற்பட்டிருப்பதும், அவை கால ஓட்டத்தில் பரிணாம வளர்ச்சிகொண்டு மாறுதல்களை தம் உடலிலும் திறன்களிலும்  அடைவதும் தொடர்ச்சியாக  நடந்து வருகின்றன. அதற்கான ஒரே விசையென இருப்பது அவற்றின் உயிரச்சம் ஆகும்.  தனிப்பட்ட  உயிர் தன்னைக் காத்துக்கொள்ள உணவு தேடி நிதம் உண்கிறது. பிற உயிர்களிடத்திலிருந்து தன்னைக்காத்துக்கொள்ள திறன்களைக் கொள்கிறது. ஒரு உயிரினம் அழியாமல் இருக்க இனப்பெருக்க விருப்பம் அதன் ஆழ்மனதில் விதைக்கப்பட்டுள்ளது.  இப்படி பசியும் காமமும் ஒரு உயிர் வாழ்வதற்கான ஆதார விசைகளாக இருக்கின்றன. இந்த இரு விசைகளிலிருந்து  அந்த உயிர் தன் வாழ்வுக்கான அனைத்து ஊக்கங்களையும் முயற்சிகளையும் உருவாக்கிக்கொள்கிறது.  காமமும் பசியும் உயிர்வாழ்வதற்கான இச்சையிலிருந்தே தோன்றுகின்றன. ஆக உயிர்குலம் இயங்குவது உயிரிச்சையின் காரணமாக என்று நாம் சொல்லலாம்.  

       
   உயிரிச்சையின் காரணமாக உயிரச்சம் உருவாகிறது. உயிரச்சம் ஏற்படுவது உயிர்கள் தான் இறந்துபோவோம் என்பதை அறிந்திருப்பதனால்தான்.  இறப்பற்ற வாழ்க்கை இயக்கமற்றுப்போகும் என்பதை வெண்முரசு மிகச் சிறப்பாக விளக்குகிறது.  உயிரச்சம் அற்றுப்போகும்போது அனைத்து உயிர்களும் கல்லைப்போல் மண்ணைப்போல் ஜடப்பொருட்களாக ஆகிவிடுகின்றன.  இறப்பே உலகின் உயிர்ப்புத்தன்மைக்கு காரணமாகிறது என்பது ஒரு வியப்புக்குரிய  முரண்.  ஆம் உண்மையில் சிறிது காலத்திலேயே இறக்கக்கூடிய மற்றும்  எளிதில் பிற உயிர்களால் கொல்லப்படக்கூடிய உயிர்கள்  அதிக எண்ணிக்கையில் பிறக்கின்றன. அவையே புவியை பெரும்பாலும் நிறைத்துள்ளன.  ஆனால்  மற்ற  அதிக நாட்கள் வாழும் உயிர்கள், மற்ற உயிர்களால் கொல்லப்பட முடியாத பெரு விலங்குகளின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருப்பதைக் காண்கிறோம்.   

       
  ஜடப்பொருள் எப்போதும்  அன்னமென ஆவதில்லை. அன்னத்திலிருந்தே அன்னம் பிறக்கிறது.  உயிர்களின் உடல்களே  அன்னமென ஆகின்றன.  ஆகவே ஒரு உயிர்  பிற சில உயிர்களை அன்னமெனக் கொள்கின்றது. பின்னர் அது மற்ற உயிர்களுக்கு அன்னமென ஆகின்றது.  உயிர்கொண்டெழுந்தவை எல்லாம்  இறந்த உடல்களை புசிப்பவை.  ஒரு உயிர் உண்டு உடல் வளர்க்கிறது. பின்னர் அது உண்ணப்படுவதாக ஆகிறது. சிறு நுண்ணுயிர்கள் முதல் பெருந்திமிங்கலங்கள் வரை ஒன்றுக்கொன்று அன்னமென ஆகிநிற்கும் பெரும் சுழல் இது.    இந்தச்சுழலே உயிர்க்கோளத்தை இயக்குகிறது. இந்தச் சுழலை இறப்பே நடத்துகிறது.  உலகில் உயிருள்ள அனைத்திற்கும் இறப்பு என்பது விதிக்கப்பட்டிருக்கிறது. பெரு வனங்கள் தீக்கிறையாகி  இறந்து ஒரு புதிய வனம் பிறப்பெடுக்கிறது. 
    

இறப்பு ஒரு உயிரை செயலில் ஆழ்த்துகிறது.  இறப்பு இருப்பதால் அதிலிருந்து தப்பிக்க செயல்களில் உயிர்கள் ஈடுபடுகின்றன.  அந்த ஆதாரச் செயல்களிலிருந்து மற்ற செயல்கள் பிறக்கின்றன. உயிர்களின் ஆழ்மனதில் தன் இருப்பை தன் சந்ததிகள் வாயிலாக தக்கவைத்துக்கொள்ளும் உணர்வு பதிக்கப்பட்டுள்ளது. அதுவே அதன் இனப்பெருக்கம் செய்ய தூண்டுகின்றன. தன் சந்ததியை உருவாக்கி பேணிவளர்த்தலுக்கும் இறப்பு உருவாக்கும் உயிரச்சம் காரணமாக இருக்கிறது.  இறப்பு இல்லாமல் போகும்போது உயிரச்சம் இல்லாமல் போகிறது. வெண்முரசின் இந்த அத்தியாயம் இறப்பின் மகத்துவத்தை நமக்கு உணர்த்துகிறது. இறப்பில்லாதபோது உலகு எப்படி செயலற்றுப்போகும் என்பதை இப்படி காட்சிப்படுத்துகிறது:
   

உடல் இறப்பை ஒழிந்தமையால் உள்ளமைந்த அனலும் அவிந்தது. ஆகவே பசி இல்லை. பசி மறைந்ததும் சுவை அழிந்தது. விழைவும் தேடலும் ஒழிந்ததும் வஞ்சமும் மறைந்தது. காமம் கரைந்தழிய பிறப்பு நின்றுவிட்டது. முழுச் செயலின்மையில் ஒவ்வொரு உடலும் ஆங்காங்கே மண்ணில் ஒட்டிப்படிந்து கிடந்தன.  இறப்பே பசியென்றாகி உலகை ஆண்டது என்று அறிந்தது பிரபாவன். பசியே விழைவென்று உயிர்களை செயல்கொள்ளச் செய்தது. செயலில்லாத உயிரென்பது வெறும் பருப்பொருளே. பாறைகளும் யானைகளும் ஒன்றென்றாயின. முதலைகள் மரக்கட்டைகளாயின. நாகங்கள் சுள்ளிகளாக. பறவைகள் சருகுகளாக. வண்டுகள் கூழாங்கற்களாக. மானுடர் சேற்றின் அலைகளாக. இறப்பு இல்லாமலானபோது உயிர் என்பது வெறும் உணர்வென்றாகியது. காலப்போக்கில் அதுவும் அழிந்து இன்மையே எஞ்சியது.

தண்டபானி துரைவேல்