அன்புள்ள ஜெ ,
உங்கள் எழுத்துக்களுடன் பயணிக்கும் எளிய வாசகன் நான்.. இதுவரையில் உங்களுக்கு கடிதம் எழுதியதில்லை.. சிறு பயம்தான்.என் முதல் கடிதம். உங்களின் அறம் , ஏழாம் உலகம் , விஷ்ணுபுரம் , ஊமைச் செந்நாய் எழுத்துக்களின் விரல்ப் பிடித்து நடந்து முதற்கனலும் , மழை பாடலும் படித்து முடித்துவிட்டேன் .. மிகத் தாமதம்தான்.. உணர்ச்சி கொத்தளிப்புகள் அடங்கவில்லை.. அம்பையின் பகுதிகளை ஒரு பதட்டத்துடனும் , பயத்துடனும் தான் படித்து முடித்தேன்.. சிலிர்த்து விட்டது .. நீங்கள் அந்த பகுதியை எழுதும் பொழுது அம்பையை உணர்ந்தீர்களா.. இதுவரை நான் படித்த , கேட்ட , பார்த்த மஹாபாரதத்தில் சத்தியவதி, குந்தி, அம்பை, அம்பிகை, அம்பாலிகை , காந்தாரி எல்லாம் வெறும் துணை பாத்திரங்கள் போலவே சித்தரிக்கப் பட்டிருக்கீறார்கள்.. இங்கே முதற்கனலிலும் , மழைப் பாடலிலும் இவர்கள் விஸ்வரூபம் எடுத்து நிற்கிறார்கள் . எளிய கன்னியாய், அரசியல் சதுரங்கத்தில் ஒரு காயாய் , வன்மமாய், வெறியாய் , வைராக்யமாய் இந்த பெண்கள் ஆட்டும் ஆட்டம் எத்தனை உணர்ச்சிமிக்கது..இவர்களை மட்டுமின்றி சிவை, அனகை, ஷியாமை , ஊர்ணை என அறியா பாத்திரங்களை மறக்க முடியா பாத்திரங்களாய் மாற்றிய உங்கள் எழுத்துக்கு நன்றி ஜெ..
நன்றி,
சையத்