Sunday, March 25, 2018

அவைச்சொல்லாடல்கள்அன்புள்ள ஜெயமோகன் அண்ணா,

கண்ணனுக்கு எதிர்தரப்பாக வைக்கப்படும் வைதீகர் வாதங்கள் அழகானவை சாமார்தியமானவை ஆனால் உண்மையில் லௌகீக நலன்கள், குலப்பெருமைகள், பேராசை, சிறுமைகள் என அடிப்படை கொண்டவை.  வெற்றி தாங்கள் சார்ந்த பக்கம்தான் என்று என்னவொரு உறுதியான நம்பிக்கை அவர்களுக்கு? என்னதான் செல்வமும் வலிமையையும் சாதகங்களும் இருந்தாலும் மெய்மையின் எதிராக நின்று வென்றுவிட முடியும் என்று கருத விவேகமற்ற, அறியாமை கொண்ட, முற்றிலும் உலகியலுக்கு அப்பால் நோக்கமாட்டாத மனம் வேண்டும். அவ்வாறான மனம் எப்போதும் தான் சாமர்த்தியம் என்று நம்புபவற்றை எப்போதும் மெய்மையின் சந்நிதியில் செய்து கொண்டு இருக்கிறது.

மெய்மையின் தேடல் கொண்டு தனித்துச் செல்வது ஆணவமா? சமூகம் வழங்கிய நானை, கற்பிதங்களை ஒதுக்கி இதற்கப்பால் நான் என்று ஏதேனும் உள்ளதா என்று வனங்களில், இமயமலைகளில், முற்றும் தனிமையில் இயற்கையிடம் தானே கேட்க முடியும்? அங்கு நான் என்று திருப்பிச் சொல்ல யாரும் இல்லை, நான் என்று நான் கொண்டு செல்வதற்கும் ஒரு மதிப்பும் இல்லை, மெய்மையை அணுகும் சாத்தியங்கள் அங்கு உள்ளது.  சமூகத்தில் தேடுவது தன் இடத்தை மட்டுமே.  எதிரே நான் நான் என்று ஏராளமான பேர் இருக்க எனது நானுக்கு ஒரு இருக்கை தேடிக் கொள்வது, தன்முனைப்பு தனக்கு ஒரு இடம் அமைத்துக் கொள்வது, முற்றிலும் மனிதன் உருவாக்கிக்கொண்ட உலகியல் சார்ந்தது, ஆத்மீகமானது அல்ல, இயற்கை உருவாக்கிய உலகியல் சார்ந்ததும் அல்ல.  உலகியல் வெற்றிகளைக் கூட அருளே வழங்குகிறது என்று அவன் கூறுகிறானே.  யோகியின் செஞ்சடை உண்ட மிச்சம் கங்கை என உலகு சார்கிறது என்கிறான்.

"நாங்கள் பெருக்கென இருப்பவர்கள்" வேண்டாமென்று அவன் சொல்லவில்லையே அதனினும் பெரிதாய உலகெனும் பெரும் பெருக்கில் இணைந்து கொள்ளுமாறு சொல்கிறான்.

வெற்றி தங்கள் கையில் இருப்பதாக ஒரு தரப்பு நம்பிக்கை கொண்டிருக்க மறுதரப்பில் மெய்மை பேரா இயற்கை முன்னமே வழங்கிவிட்ட வெற்றியினை வைத்துக்கொண்டே பேசுகிறது.

கால்களில் மண்ணுதறிச் செல்கிறேன் என்கிறான். எப்போதும் இப்படித்தான் நடக்கிறது, முன்பும் இப்படித்தான் நடந்தது என்கிறான்.  பாவம் கண்ணன் என்று தோன்றுகிறது.  உண்மை அவ்வாறல்ல.  ஒவ்வொரு முறையும் பேரருளை புறக்கணித்து தங்கள் ஆணவத்தால் அறிவின்மையால் வீழ்ச்சியுறும் மனிதரைக் கண்டு பெரும் கருணை கொள்ளும் வருத்தம்தான் அவன் கொள்வது.

தளத்திற்கு லீவு போட்டு விட்டு சென்று விட்டீர்கள்.  எழுதழலின் இளையயாதவரை எண்ணிக்கொண்டேன். இமையத்தின் மடி அமர்ந்து வந்தீர்.

இமயப் பெரும் தொடரை முழுமையாக மனதால் உள்வாங்க முடியாது போகலாம்.  என்றாலும் ஏதேனும் ஒரு தருணத்தில், ஒரு எழில் முன்னம், ஒரு பிரம்மாண்டதின் வியப்பில் ஒரு சில பகுதிகள், காட்சிகள் உள்வாங்கப்படலாம், கை தொழலாம்.  வெண்முரசு என்னும் பெரும் தொடரும் அப்படித்தான், கண்ணீரும் கரம் குவிதலும் என பல தருணங்களை அது எனக்கு வழங்கி இருக்கிறது.  இமயத் தொடர் என்றபோதும் பல ஆண்டுகள் அலைந்து திரிந்து ஒன்று விடாமல் ஏறி இறங்கி, கிரிவலம் வந்து என முயல்வோர் சிலர் உண்டு.  இங்கும் அப்படித்தான்.

வெண்முரசால் என்ன பயன் என்றால் இமாலயத்தின் மெய்யான பயன் என்னவோ அதேதான் இதற்கும்.  ஒப்பிலி வள்ளல் கங்கையை தலையில் வாங்கி பூமிக்குத் தந்தது போன்ற அதே போன்றது தான் தங்கள் வேலையும். வலுவுள்ள தலைகள் தானே ஆகாய கங்கையினை வாங்கி வழங்க முடியும்.


அன்புடன்,
விக்ரம்
கோவை