Monday, March 5, 2018

வாலறிவு



ஜெ,

முப்பது வருடங்களாக அறிந்த குறள் "கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின்". படித்து என்ன பயன் கடவுளை வணங்காவிட்டால் என்றே உரைக்கப்பட்டிருக்கிறது. நாத்திகர்கள் கூட கற்றுணர்ந்த பெரியவர்களை மதிக்காவிட்டால் என்ன படித்து என்ன பயன் என்றே எழுதியிருக்கிறார்கள். ஆசீவகத்துடைய அறிவின் வைப்பு முறையை விவரிக்கும் வெண்முரசு வாலறிவனுக்கு தரும் அர்த்தம் உருவாக்கிய நிலைகுலைவு இந்தக் கணம் வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது. 

கல்வி தன்னிலையை உருவாக்கி அளிக்கிறது. அந்தத் தன்னிலையை பிரபஞ்சத்தோடு விரித்துக் கொள்ள வேண்டும். கலையின், ஆன்மீகத்தின், சாதனையின் வழியாக, வாழ்வதன் வழியாக.  அதுவே 'அதற்குத் தக நிற்பது'. கல்வி கண்களைத் தருகிறது, அதைக் கொண்டு விசும்பைக் காண வேண்டும். பயணத்தில் பாதி தூரமே கல்வி. விரித்துக் கொள்ளாத, கரைத்துக் கொள்ளாத தன்னிலையை உருவாக்கிக் கொள்வது பயனற்ற செயல் மட்டுமல்ல. பாதகமும் கூட. அது, பொருளே மாறிக் கொண்டிருக்கும் போது, பொருளை விடுத்து சொல்லை பற்றிக் கொள்வதும், அதைத் தான் என நம்புவதும் போன்றது என்கிறான் கிருஷ்ணன். 

வள்ளுவர் எண்ணும் எழுத்தும் ஏன் கண்ணென்றார்? கல்லாதவர் கண் புண் என ஏன் கூறினார் என்பதற்கு இன்று பதில் அடைந்தேன். இங்கிருந்துஇங்கும் கொண்டு செல்கிறது, அங்கும் கொண்டு செல்கிறது.

சரியான அர்த்தத்தில் திறக்கப்படும் ஒரு கவிதை வரி எத்தனை தொலைவுக்கு இட்டு செல்லும்? வைரத்திற்குள் ஒளி செல்லும் தூரம் என்று வெண்முரசு சொல்கிறது. 

ஏ வி மணிகண்டன்