அன்புடன் ஆசிரியருக்கு
நேற்று முதல் இமைக்கணம் என்ற சொல்லிலேயே மனம் வலம் வந்து கொண்டிருக்கிறது. கீதை சொல்லப்படவிருக்கிறது. அது சொல்லப்பட்ட நேரத்தில் அனைத்தும் உறைந்துவிட்டதாக ஒரு கதை உண்டல்லவா. ஆனால் ஞானம் அப்படி "நேரமற்ற தருணத்தில்" தான் கடத்தப்பட முடியும் போல. காலம் என்பது நம்முடைய ஆணவம் தான் என்ற வரி முதற்கனலில் வரும். இமைக்கணம் என்ற சொல் அதை நினைவுறுத்தியது.
அர்ஜுனனுக்கு கீதை சொல்லப்பட்டது என்பதை விட உணர்த்தப்பட்டது என்பதே சரியாக இருக்கும். ஏனெனில் காண்டீபத்துக்கு பிறகு அர்ஜுனனுக்கும் கிருஷ்ணனுக்கும் இடையே உரையாடல்கள் நடைபெறவில்லை. கிராதத்தில் நிகழும் போர் மட்டுமே அவர்களுக்கு இடையேயான அணுக்கத் தருணமாக இருக்கிறது. அர்ஜுனன் பாசுபதத்தை பெற்ற பிறகு அவர்கள் இருவருக்கும் இடையேயான உரையாடல் அவசியமற்றுப் போகிறது. ஆகவே அர்ஜுனன் அடைந்த ஞானம் சொற்களின் வடிவில் நமக்கு சொல்லப்படுவதை கீதை என்று சொல்லலாமா?
ஒரு வகையில் "விடுதலை" என்பதே கூட காலம் குறித்த பிரக்ஞை அழிவது தான் போல. கொற்றவை வாசித்தபோது அத்தகைய பிரக்ஞையழிவை உணர்ந்திருக்கிறேன்.
அன்புடன்
சுரேஷ் பிரதீப்