Wednesday, March 28, 2018

மழைப்பாடல்



இனிய ஜெயம் 

நண்பர்கள் மற்றும் வாசகர்கள் என  எப்படியும் ஒரு பதினைந்து பேர் தேறுவோம் நாம் ஏன் மாதா மாதம் ஒரு குறிப்பிட்ட நாளில் கூடி ஒரு மூன்று மணிநேரம் ,வெண் முரசு சார்த்து உரையாடல் நிகழ்த்தக் கூடாது   எனும் , ஹரி கிருஷ்ணனின் ஆவலில் துவங்கிய இந்த கூடுகை பயணம் முதல் வருடத்தை நிறைவு செய்கிறது .   தமிழ் இலக்கியப் பரப்புக்கு இந்த கூடுகை எதை அளிக்கிறதோ ,இல்லையோ ,குறைந்த பக்ஷ உத்திரவாதமாக  எங்கள் பத்து பேருக்கு நிறைய புரிதல்களை அளித்திருக்கிறது .  உங்கள் வருகையும் ஜாஜா அளித்த சட்டகமும்  உபரி சந்தோசம் .

இந்த கூடுகையில் நிகழ்விலும் ,பொதுவிலும் என் வழக்கம் போல வெண் முரசு குறித்தே பேசிக்கொண்டு இருந்தேன் .

எஸ் ஏ டாங்கே எழுதிய பண்டைக்கால இந்தியா [என்சி பி எச் வெளியீடு ]  நூல் .வெண் முரசு  நாவலுக்கு முதன்மையான சாவி நூல் .  அதன் காரணம் என்ன ?

வெண் முரசு [மழைப்பாடல் நாவல் வேழாம்பல் தவம் முதல் முதல் மழை அத்யாயம் வரை ] பேசும் யுக மாற்றம் . பருவ கால மாற்றம் ,உறவுகளில் நிகழும் மாற்றம் ,வேத முதன்மை முதல் தத்துவங்கள் வழியே நிகழும் மாற்றம்  அரசியல் மாற்றம் இவை குறித்து உரையாடினேன் .

குறிப்பாக த்ரேதா யுகத்தில் சூரியனுக்கும் இடி மின்னலுக்கும் நிகழும் போர்  பூமிக்கு மாறுவது .அங்கிருத்து அனலின் பல்வேறு வடிவங்கள் பாலை நிலத்தில் சித்தரிப்பாக வருவது ,மழையின் பல்வேறு வடிவங்கள் கூர்ஜரம் துவங்கி அச்தினாபுரி வரை பீஷ்மரின் பயணத்தில் வருவது ,இனி வரப்போகும் சூரியன் கர்ணன் ,இடி மின்னல் அர்ஜுனன்  இவற்றின் புற சித்தரிப்பே இவை என்றேன் . 

பீஷ்மர் தனது பயணம் வழியே ,ஹஸ்தி வளர வேண்டிய எல்லைகள் குறித்த பெரும் கனவை அடைகிறார் .அந்த கனவை மோகன்ஜோதாரோ சமன் செய்கிறது . ஹஸ்தினாபுரம்நகரமும் இதே போல காலத்தில் ஒரு சிறு குமிழியே என உணர்கிறார் .


விதுரன் இதற்க்கு முன்பு  ஹஸ்தினாபுரம் எத்தனை முறை பொருளியல் சிக்கலில் விழுந்து ,வேத முதன்மை யோடு செய்த போர்களின் வரிசையை பீஷ்மருக்கு  விளக்குகிறான்     அந்த வரிசை இன்று வளர்ந்து பெருங்கொடை அத்யாயத்தில் வந்து நிற்கிறது .

காந்தார நகரில் மணல் புயல் .திருதாவை தவிக்க விடாமல் காந்தாரி எனும் வசுமதி திருதாவின் இடது கரத்தை பற்றி நிற்கிறாள் .புயல் விலக ,திருதாவின் மறு புறம் திருதாவின் வலது கையை விதுரன் பற்றி நிற்கிறான் . இந்த உறவே  கிருஷ்ணன் தூது சபையில் திருதாவை கை விடுகிறது . விதுரன் மயங்கி விழுகிறான் .என் கற்ப்பை கேள்வி கேட்கும் உரிமை எங்கும் எவருக்கும் இல்லை என்று சொல்லி காந்தாரி அவை நீங்குகிறாள் .திருதாவால் ஒரு போதும் சமாளிக்க இயலாத உணர்வுப் புயலில் அவனை இருவரும் கைவிடுகிறார்கள் .

திருதாவின் இசை உலகை விரும்பி காந்தாரி தனது பார்வையை இழக்கிறாள் . குருதி சாரல் நாவலில் காந்தாரி சொல்கிறாள் .திருதாவின் இருள் எனக்கு நூறு மைந்தரை அளித்தது .திருதாவின் இசை யுயுத்சு என மண் நிகழ்ந்து விட்டது .

இப்படி விதுரன் சகுனி என ஒவ்வருவரும் எங்கே துவங்கி எங்கே வளர்ந்து என்னவாகி நிற்கிறார்கள்  எனும் சித்திரத்தை அளித்தேன் .

பொதுவாக நான் இறுதில் செய்வது ஒன்றே ஒன்றுதான் . அத்யாயத்தின் உள்ளடுக்குகள் அனைத்தும் உரையாடல் வழியே துலங்கிய பின்பு , அவற்றை மீண்டும் மொத்தமாக  ஒன்றிணைத்து ,வெண் முரசு அந்த வாழ்கையை எந்த நாடகத்தின்  உணர்சிகளின் மேல் நிகழ்த்திக் காட்டுகிறதோ ,அந்த நாடகத்தில் உணர்சிகர்த்தில் கொண்டு வந்து மீண்டும் அனைத்தயும் தொகுத்து விடுவேன் .

விடை பெறுகையில் சுதா மாமி மிகுந்த மகிழ்ச்சியோடு '' . பிரமாதமா பண்றீங்க ஆனா ஜெயமோகன் முன்னால மட்டும் எப்டி எல்லாத்தயும் பிரமாதமா சொதப்பி ,அதை விட பிரமாதமா அவர் கையால அடி வாங்குரீங்க '' என்று கேட்டார்கள் .

அதுவா அவரது பள்ளியில் எப்போதும் அவுட் ஸ்டாண்டிங் ஸ்டூடன்ட் நான் தான் என்பது அவருக்கு மட்டுமே தெரியும் . அதனால்தான் அந்த அடி  என்றேன் . 

எப்போதும் வெளியே  நிற்கும் மாணவன் .: )  

கடலூர் சீனு