Sunday, March 4, 2018

கன்னில் கனல்ஜெ,

குருதிச் சாரலின் அத்தியாயம் 76ல் அளவை வாதத்திற்கு பதிலாக கிருஷ்ணன் வைக்கும் வாதங்கள் அபாரமானவை. எப்பொழுதுமே, எந்த தத்துவத்தையும் தனியான சிந்தனையாக வாசிக்கும் போது என்ன இது, இதை ஏன் இத்தனை தீவிரமாக விவாதிக்கிறார்கள் என்று தோன்றாமல் வாசிக்கவே முடியாது. ஒரு தத்துவம் இரு சிந்தனை மரபுக்கிடையில் நிகழும் விவாதமாக வருகையில் அவற்றின் பின் பொருள் துலங்குகிறது. அதன் முக்கியத்துவமும் புரிகிறது. அதற்கு மேல் காவியம் அதை ஒரு படிமமாக ஆக மாற்றுகிறது. பின் அமைப்பியலை கல்லுக்குள் இருக்கும் கனல் குறித்த வாதமாகவே எண்ணிக் கொள்ள முடியும் இனி மேல்.

அளவைவாதிகள், உபனிடத மரபினர் எண்ணத்தை சொல்லெனெ குறுக்குவதாக எண்ணி வாதிடுகின்றனர். அதற்கு கிருஷ்ணன் எண்ணமும் தொன்மையான ஒன்றின் வெளிப்பாடே என்கிறார்.  தன்னை எண்ணம் என்று கருதுவதும், தன்னை உடல் என்று கருதுவதும் ஒன்றே எனும் போது அளவை வாதத்திற்கும் அதே எல்லை இருக்கிறது என்றாகிறது. செயல் வழி அறிவைக் கடக்கலாம் என்றால் எண்ணங்களின் வழியும் எண்ணங்களைக் கடக்கலாம். இரு மரபின் உச்சத்தையும் சொல்லும் இந்த வரி அழகியது, பருவென்று எண்ணினால் அன்னத்தின் பேருரு. எண்ணமென்று உணர்ந்தால் எண்ணத்தின் அலகிலி. இரண்டின் உள்ளும் உறைவது கல்லின் கனல். அது நாமறியும் கல்லும் அல்ல, கனலும் அல்ல. ஜுஸ்டம் யதா பஸ்யதே அன்யம் இசம் அஸ்ய மகிமானம் இதி விட சோக. பிரபஞ்சத்தை அறிவதால் வரும் உவகையினால் தன்னிலையைக் கடக்கலாம் என்கிறான். பார்த்தன் காணப் போகும் விஸ்வரூபத்தைக் கண்டுவிட்டேன்.

இந்த விவாதத்தில் அறிவைக் கடந்து அமைதல் என்றால் என்ன என்று அறிந்து கொண்டேன். குறிப்பாக வாலறிவன் என்பதன் அர்த்தத்தின் பிரம்மாண்டம் திகைக்கச் செய்தது [ஆய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின்]. சமணத்தின் ஐவகை அறிவில் இறுதி அறிவான கேவல ஞானத்தைதான் அது சொல்கிறது. ஆனால் கேவல ஞானம் என்பது தூய அறிவு என்று அர்த்தம் வருவது என்றே அறிந்திருந்தேன். வாலறிவன் என்பது பிரபஞ்ச பேரறிவு என்று வருகிறது இங்கு. எண்ணம் என்பது நாம் ஓட்டி செல்லும் குதிரைகளில்லை, நம்மை ஏந்தி செல்லும் தேர். கற்பதனால் கல்வியையே அடைய முடியும், அறிவில் அமைவதனால் நாம் வாலறிவனை அணுகலாம். 

என் புரிதல் சரியாக இருந்தால், சிதறிப் பரவும் உள்ளத்தை கையாள அளவைவாதம் விசைவழியா சக்கரத்தை வழியாகவும், வேதமுடிபு மையம் நோக்கிக் குவியம் தாமரையை வழியாகவும் கொள்கிறது என புரிந்து கொள்கிறேன். இரண்டும் வழிகளே, ஒன்றின் பணி நிறைந்து விட்டது. வேதம் வளர்ந்து விட்டது. இனி மையம் நோக்கிப் போக வேண்டும் என்கிறான் கிருஷ்ணன்.

கல்வியின் ஆய பயன் என்பதை கிருஷ்ணன் வரையறுப்பது விவாதத்தின் உச்சம். "அக்கலத்தில் அதர் வினாவி வந்து அமரும் அம்மெய்மை. கல்வி என்பது மெய்மை வந்தமர பீடம் அமைத்தலன்றி வேறல்ல”. செய்ய வேண்டியதெல்லாம் “நாம்” அந்த பீடத்திலிருந்து எழுந்து கொண்டு அதற்கு இடமொழித்து தருவதே. வேதத்திற்கும் அதையே சொல்கிறான், ஷத்ரியர்கள் எழுந்து கொள்ள வேண்டிய காலம் வந்து விட்டது.

அவன் விழுப்பயன் குறித்து சொன்ன போது, இந்த அத்தியாத்தை நீங்கள் எழுதிய கணத்தில், நான் அங்கே இருந்தேன் என்பதை எண்ணிக் கொண்டேன். 

ஏ வி மணிகண்டன்