ஆசிரியருக்கு,
இன்றைய உங்களின் குறிப்பைப் படித்தேன். உங்களின் திசைகளின் நடுவே கதையை வாசித்த ஞாபகம் இன்னுமுள்ளது, அதுவே நான் வாசித்த உங்களின் முதல் கதை என்பது இப்போது தெரிகிறது. குருஷேத்ர யுத்தத்திற்கு பிறகு யுதிஷ்டிரர் இயற்றும் யாகம் ஒன்றில் யாசகம் பெற வரும் சார்வாகர் பற்றிய கதை என நினைவு. இந்த வரிகளைப் படித்து அதிர்ந்ததும் நினைவில் இருக்கிறது,
அடேய் பிராமணா, எதற்க்காகடா ஐந்து வேளை தின்கிறாய் என்றொரு வரி, என்ன இப்படியெல்லாம் கதை எழுதுகிறார்கள் என்று அதிர்ந்து விட்டேன் (சுஜாதாவிடம் மதி மயங்கியிருந்த நாட்கள்) இறுதியாக அந்த சார்வாகரை நெய்யினால் எரித்துக் கொன்று விடுவார்கள், பசுங்குருதியின் மணம் எழுவதாகக் கதையை முடித்திருப்பீர்கள்.
எங்கோ தொடங்கி இதோ இன்று வெண்முரசு வரை வந்துவிட்டேன். அமிஷ் த்ரிபாதியின் சிவா ட்ரையாலஜியை வாசித்திருக்கிறேன், வெண்முரசின் ஒரே ஒரு நாவலுக்கு உரை போடக் காணாது. எந்த ஒரு மெய்ப்பையும் உணர்வெழுச்சியையும் அளிக்காத படைப்பாகவே அது இருந்தது. அதற்கே கிறங்கிப் போன வாசகர் வட்டம் அவருக்குக் கிடைத்திருக்கிறது. என் அலுவலகத்தில் பணி புரியும் ஹிந்தி வாலாக்களிடம் வெண்முரசின் முக்கிய அத்தியாயங்களை ஆங்கிலத்தில் விளக்கிச் சொவதுண்டு. எத்துணை உணார்வு கூட்டிச் சொன்னாலும் சொற்கள் போதியிருக்கவில்லை. உதாரணமாக,
கர்ணன் முதன் முறையாக அவைக்களத்தில் பார்த்தனை அறைகூவும் பொழுது, தருமன் இவனெங்கே கற்றான் என முனகலாகக் கேட்பார். அதற்கு பீமன்,
இவனைப் போன்றவர்களுக்கு ஆசிரியர்கள் தேவையில்லை மூத்தவரே, தேவையென்றால் தெய்வங்கள் கீழிறங்கி வரும் என்பார். இதை எவ்வளவு மொழி பெயர்த்தாலும் மொழியின் அடர்த்தி எனக்கு கைகூடி வரவில்லை.
எவரெனும் மொழியின் வீச்சை நன்கு உணர்ந்தவர் இதை ஹிந்தியிலும் ஆங்கிலத்திலும் மொழி பெயர்க்க வேண்டும். இந்தக் காவிய இன்பம் தமிழ் வாசகர்களோடு நின்று விடக்கூடாது என்று அங்கரை வேண்டிக்கொண்டிருக்கிறேன்.
அது நிகழ்ந்தால் என் பூர்வீக நிலத்தில் அங்கருக்கு கல்லால் ஒரு ஆலயம் அமைப்பேன் என்பதும் எனது பிரார்த்தனை. நின்றிறுக்கும் அங்கரின் இடக்கையில் விஜயமும் வலக்கை வழங்குவது போலவும் தோற்றம் கொண்டிருக்கும். சூரிய மைந்தர் ஆலயம் என்று வெளியே பொறிக்கப் பட்டிருக்கும். எவரும் அங்கு பூசை செய்து வணங்கும் வண்ணம் அவ்வாலயம் திகழும்.
உங்கள் வாழ்வில் என்றேனும் அதைக் காண வருவீர்களெனில் அது என் பேறு என்றே கொள்கிறேன்.
நன்றி
சிவா.