அன்புள்ள ஜெயமோகன் அண்ணா,
கார்கடல் எழுகதிர், இருட்கனி சாயும் கதிர். பேராற்றல் கொண்டோன் எனினும் வகுத்தான் வகுத்த வகை கடப்போன் அல்ல ஊழ் என்பது ஒரு கோணம் என்றால் மற்றொரு கோணத்தில் அதை முற்றாக மறுக்கலாம், ஊழாவது கூழாவது, அவனை ஒழிய அமரரும் இல்லை, அது அவன் தன்னறம், சொந்தத் தெரிவு. ஊழை ஒரு பொருட்டாகவே கொள்ளாதவன் அவன். தன்னியலை நிலைநிறுத்தி என்றும் வென்றவன் அவன். இறுதிவரை அவனுடன் விளையாடித் தோற்கிறது ஊழ்.
இளைய யாதவர் அர்ஜுனனை சிறுமை செய்கிறார். கர்ணனை பெருமை செய்கிறார். கேட்டவருக்கெல்லாம் தந்தவனிடம் கேட்காமலே எடுத்துக்கொள்ளச் சொல்கிறார். ”மற்றபடி நீயெல்லாம் அவனை ஜெயிக்க சான்ஸே இல்ல.” அவன் முன்னால் ஒரு ஆள் எனக் கூட நிற்க வேண்டாம் என்கிறார்.
மறந்த நுண்சொல் நினைவுக்கு வருகிறது, அதை ஆசிரியருக்கே அளித்துவிடுகிறான், ஆசிரியர் அவனைக் கைவிடவில்லை என்பது மனம் நெகிழச்செய்கிறது.
ஏகப்பட்ட தான வாங்கல்கள், வாக்குறுதி வாங்கல்கள், சாபம், கடைசியாக பிடுங்கிக் கொள்ளல்.
கனத்து தன் ஒளிக்கரங்களை உள்ளிழுத்துக் கொண்டு மறையும் கதிர்.
கிருபருக்கு நானும் ஆம் என்கிறேன். கதிர் மைந்தனை வணங்குகிறேன்.
அன்புடன்,
விக்ரம்,
கோவை